FACT CHECK: புதிய அர்ச்சகர்கள் நியமனத்தால் பழைய அர்ச்சகர்கள் கண்ணீருடன் வெளியேறினரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாட்டில் புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்ட சூழலில் பழைய அர்ச்சகர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பதவி நீக்கம் செய்யப்பட்ட குருக்கள் கண்ணீருடன் வெளியேறினார் என்றும் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

யாரோ ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இன்று அதிகாலையிலிருந்து திருச்சி நாகநாதசாமி கோவில் வயலூர் கோவில் மற்றும் சில கோவில்களில் பிராமண அர்ச்சகர்கள், சிவாச்சாரியார்க்கு பதில் புதிதாக நியமனமான அர்ச்சகர்கள் பூஜைகள் நடத்தத் துவங்கினர். நீக்கப்பட்ட குருக்கள் அதிர்ச்சியில் கண்ணீருடன் வெளியேறினர் என வலைதள தகவல்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் குருக்கள் ஒருவர் கண்ணீர் விட்டு அழும் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. 

Bushindia என்பவர் இந்த பதிவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். Siva Prasath Gopalakrishnan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் இந்த ஸ்கிரீன்ஷாட் பதிவை ஃபேஸ்புக்கில் 16 ஆகஸ்ட், 2021 அன்று பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் கீழ் 58 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார். இதைத் தொடர்ந்து பணி நியமன ஆணை பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவில்களுக்கு சென்று தங்கள் பணியைத் தொடங்கினர். இந்த சூழலில் நீக்கப்பட்ட குருக்கள் கண்ணீருடன் வெளியேறினர் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வரவே இது பற்றி உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

சமூக ஊடகங்களில் வெளியான பதிவு என்று யாரோ ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். Bushindia என்ற ட்விட்டர் ஐடி-யில் இந்த பதிவு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது அந்த பதிவு அகற்றப்பட்டு இருந்தது. மேலும், “பாதிக்கப்பட்ட குருக்கள்கள் சிவாச்சாரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் விசாரணை ஆகஸ்டு 18 விசாரணைக்கு எடுக்கப்படுவதால் அர்ச்சகர்கள் சம்மந்தமான எனது பதிவுகளை நீக்கிவிட்டேன்” என்று விளக்கம் வேறு அளித்திருந்தார்.

அசல் பதிவைக் காண: Twitter I Archive

ஆனால் அவருடைய பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அதில் இரண்டு புகைப்படங்களை வைத்து சிலர் ஷேர் செய்து வருவதை காண முடிந்தது. அந்த பதிவுகளில் பலரும் தமிழ்நாடு அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருவதையும் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கோவில் குருக்கள் வெளியேறியது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். தினமலர் உள்ளிட்ட எந்த நாளிதழ்களிலும் அப்படி ஒரு செய்தி வெளியாகவில்லை. எனவே, பழைய அர்ச்சகர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா என்பதை அறிய தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவைத் தொடர்புகொண்டு கருத்தை பெற முயற்சி செய்தோம். ஆனால், அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விசாரித்த போது “அப்படி எதுவும் இல்லை. பணியில் இருந்து யாரும் நீக்கப்படவில்லை. யாரோ விஷமத்தனமாக வதந்தி பரப்பியுள்ளனர்” என்றனர்.

இதன் மூலம் கோவில் குருக்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டது தவறானது என்பது உறுதியானது.

அடுத்ததாக, இந்த படம் எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். குருக்கள் ஒருவர் அழும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் ஆந்திரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. ஆந்திராவில் கோவில் சிலைகள் உடைக்கப்பட்ட போது ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அந்த கோவிலுக்கு வருகை தந்தார். அவரை சந்தித்த கோவில் குருக்கள் கண்ணீர் விட்டு அழுதார் என்று கடந்த 2021 ஜனவரியில் வெளியான செய்திகள், பதிவுகள் நமக்கு கிடைத்தன.

அசல் பதிவைக் காண: telugubulletin.com I Archive

இரண்டாவதாக கோவில் குருக்கள் சூழ்ந்து நிற்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் 2018ம் ஆண்டு thewire.in இணைய கட்டுரை ஒன்றில் வெளியாகி இருப்பது தெரிந்தது. “தமிழ் நாட்டில் அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பிய பிற சாதியைச் சார்ந்த மாணவர்களுக்கு ஆகம விதிகளை சொல்லித் தர முன் வந்ததால் தாக்கப்பட்ட 90 வயதான குருக்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: thewire.in I Archive

மேலும் thewire.in இணையதளத்தில் இந்த கட்டுரையை எழுதிய கவிதா முரளிதரன் என்பவர், இது பற்றி ட்வீட் பதிவு வெளியிட்டிருப்பதும் நமக்கு கிடைத்தது.

https://twitter.com/kavithamurali/status/1427218733806718977

Archive

இதன் மூலம் பழைய படங்களை வைத்து வதந்தி பரப்பியது உறுதியானது. இதன் அடிப்படையில், கோவில் குருக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்று பரவும் செய்தி மற்றும் படம் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

எஸ்.பி.வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் புகைப்படங்கள் பல ஆண்டுகளாக செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருபவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:புதிய அர்ச்சகர்கள் நியமனத்தால் பழைய அர்ச்சகர்கள் கண்ணீருடன் வெளியேறினரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False