இந்திய விமானப்படையின் முதல் தலைமை தளபதியாக இருந்தவர்; ஏர் சீஃப் மார்ஷல் ஐ.ஹெச்.லத்தீப் என்றும், 1971 இந்தியா - பாகிஸ்தான் போரின் போது இவர் தலைமையில்தான் இந்தியா வெற்றி பெற்றது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

விமானப்படை வீரர் ஒருவரின் இளமைக்கால புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், "இந்திய விமானப் படையின் முதல் தலைமை தளபதி, IH லத்தீப் ஒரு முஸ்லீம் ஆவார் ..!!

1971 ல் பாகிஸ்தான் போரில் இவரது தலைமையில் தான் இந்தியா வெற்றி பெற்றது. மறைக்கப்பட்ட உண்மைகள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Fayaz Ahamed என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 11 அன்று பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்த வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவின் முதல் விமானப்படை ஏர் சீஃப் மார்ஷலாக இருந்தவர் இஸ்லாமியர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் தலைமையில் தான் இந்தியா 1971 பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றது என்று குறிப்பிட்டு பலரும் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையானதுதானா என்று அறிய சுதந்திர இந்தியாவின் விமானப்படையின் முதல் தலைமைத் தளபதி யார் என்று கூகுளில் தேடிப் பார்த்தோம்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது Thomas Walker Elmhirst என்பவர் ஏர் மார்ஷலாக இருந்தார் என்றும் அவர் பிப்ரவரி 22, 1950 வரை அப்பதவியிலிருந்தார் என்றும் தெரியவந்தது. இந்திய விமானப்படை இணையதளத்தில் இதுவரை இந்திய விமானப்படையில் ஏர் சீஃப் மார்ஷலாக இருந்தவர்களின் பெயர் பட்டியலை எடுத்துப் பார்த்தோம்.

உண்மைப் பதிவைக் காண: indianairforce.nic.in I Archive 1 I indianairforce.nic.in I Archive 2

ஆகஸ்ட் 15, 1947ல் இருந்து மார்ச் 31, 1954 வரை ஆங்கிலேயர்கள்தான் ஏர் சீஃப் மார்ஷலாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 1, 1954ல் இந்தியர் ஒருவர் முதன் முறையாக அந்த பதவிக்கு சுப்ரோதோ முகர்ஜி (Subroto Mukerjee) என்பவர் நியமிக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்தியாவின் முதல் ஏர் சீஃப் மார்ஷல் ஐ.ஹெச்.லத்தீப் என்ற தகவல் தவறானது என்பது தெளிவானது.

முகர்ஜி காலம் வரை ஏர் மார்ஷல் என்று அழைக்கப்பட்ட தலைமை தளபதி பதவியானது, அவருக்கு அடுத்து வந்த Aspy Merwan Engineer பதவிக் காலத்தில் ஏர் சீஃப் மார்ஷல் என்று மாற்றப்பட்டது. அதனால் பதவியின் பெயர் அடிப்படையிலும் முதல் ஏர் சீஃப் மார்ஷல் லத்தீப் என்று கூற முடியாது!

விமானப்படை இணையதளத்தில் இத்ரீஸ் ஹாசன் லத்தீப் என்பவர் செப்டம்பர் 1, 1978 முதல் ஆகஸ்ட் 31, 1981 வரையிலான காலகட்டத்தில் இந்திய விமானப்படையின் தலைமை தளபதியாக இருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 1971ல் இவர் தலைமையில்தான் இந்தியா போரில் ஈடுபட்டது என்ற தகவலும் தவறானது என்று தெரியவந்தது.

அடுத்ததாக 1971ல் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரில் லத்தீபின் பங்களிப்பு தொடர்பாகத் தேடினோம். விமானப்படை இணையதளத்திலேயே அது பற்றிய குறிப்புகள் இருந்தன. அதில் போரின் போது அவர் உதவி தலைமை தளபதியாக (திட்டங்கள்) பணியாற்றினார் என்றும், போர் முனைக்குச் சென்று போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தேவைகள் பற்றி தகவல் அறிந்து அதன் அடிப்படையில் செயல்பட்டார் என்றும், கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்த போது அவர் விமானப்படையின் கிழக்குப் பகுதியில் ஷில்லாங்கில் பணியாற்றி வந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: indianairforce.nic.in I Archive 1 I youandi.com I Archive 2

இந்திய விமானப்படையின் தலைமை தளபதியாக IH லத்தீப் பணியாற்றியது உண்மைதான். ஆனால், இந்தியாவின் முதல் தலைமைத் தளபதி அவர் இல்லை. மேலும், 1971 போரின் போது அவர் தலைமைத் தளபதியாக இல்லை. போர் முடிந்து பல ஆண்டுகள் கழித்து 1978ல் தான் அவர் ஏர் சீஃப் மார்ஷலாக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் 1971 பாகிஸ்தானுடனான போரில் அவர் தீரத்துடன் பங்கேற்றார், போர் முனைகளுக்கு சென்றார், அந்த நேரத்தில் விமானப் படையில் உயரிய பதவியில் இருந்துள்ளார் என்பதும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்தியாவின் முதல் விமானப்படை தலைமை தளபதியாக பணியாற்றியவர் ஒரு இஸ்லாமியர் என்றும் 1971 இந்தியா - பாகிஸ்தான் போரில் அவர்தான் வெற்றியைத் தேடித் தந்தார் என்றும் பரவும் தகவல் உண்மையில்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்திய விமானப்படையின் முதல் தலைமைத் தளபதி ஒரு இஸ்லாமியர் என்று பரவும் வதந்தி!

Written By: Chendur Pandian

Result: False