
தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் புகைப்படம் மற்றும் நீதிமன்ற உத்தரவு இணைய பிரதி ஆகியவற்றை இணைத்துப் பதிவிட்டுள்ளனர்.
நிலைத் தகவலில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது #சென்னை_உயர்நீதிமன்றம்.
அனைத்திந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்துக்குமார் தொடர்ந்த வழக்கு. வழக்கு எண் ; WP 16287 /2021 & WMP 17241 / 2021……நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் இடைக்காலத் தடை விதித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை சி.எஸ்.கராத்தேமணி பாமக நகரசெயலாளா் கள்ளக்குறிச்சி என்ற ஃபேஸ்புக் ஐடியை கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 23ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தின் கீழ் பல்வேறு சாதியைச் சார்ந்தவர்களை அர்ச்சகர்களாக நியமித்து, பணி நியமன ஆணையை வழங்கியது. இதைப் பெற்றுக்கொண்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவில்களில் பணியைத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், தி.மு.க உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதற்கு ஆதாரமாக நீதிமன்ற உத்தரவை பகிர்ந்து வருகின்றனர். பலரும் இதை ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள நீதிமன்ற உத்தரவில், “As per orders of the Hon’ble the Chief Justice dated 15.08.2021, W.P.No.16287 of 2021 along with all applications are to be listed before the First Division Bench on 18.08.2021. All matters pertaining to appointment of Archakas are also to be placed before the First Division Bench. Thus, transfer the Writ Petition and applications listed today before me, to the First Division Bench” என்று ஆங்கிலத்திலிருந்தது.
அதாவது, அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் எனக்கு முன்பாக பட்டியலிடப்பட்ட (அர்ச்சகர் நியமனம் தொடர்பான) வழக்குகள் அனைத்தும் முதல் டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்படுகிறது” என்ற அர்த்தத்தில் இருந்தது. இதில் எந்த இடத்திலும் அர்ச்சகர் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று இல்லை. சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்துக்கு சென்று அந்த உத்தரவைப் பார்த்தோம். அது ஒரு பக்க உத்தரவாக மட்டுமே இருந்தது.
அசல் பதிவைக் காண: mhc.tn.gov.in I Archive
இந்த உத்தரவு தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது தமிழ் இந்துவில் வெளியான செய்தி நமக்கு கிடைத்தது.
அந்த செய்தியில், “அரசு தலைமை வழக்கறிஞர், முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாக தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive 1 I teakkadai.in I Archive 2
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குமாரதேவனிடம் கேட்டோம். அப்போது அவர், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 8ம் தேதி நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு வந்தது. அப்போதும் கூட இடைக்காலத் தடை உத்தரவு எதையும் நீதிபதி பிறப்பிக்கவில்லை. 16ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான வழக்கை தலைமைநீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை” என்றார்.
நீதிமன்ற உத்தரவை ஒருமுறை கூட படிக்காமல் பலரும் பதிவிட்டிருப்பது தெரிகிறது. படித்திருந்தால் வழக்கை மாற்றி உத்தரவிட்டார் என்று தெரிந்திருக்கும். வதந்தி பரப்பும் நோக்கில் வேக வேகமாக தகவலின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்யாமல் பலரும் பகிர்ந்து வந்திருப்பது தெரிகிறது. இதன் மூலம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக நியமிக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் இடைக்காலத் தடை விதித்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வேறு சாதியைச் சார்ந்தவர்களை அர்ச்சகர்களாக நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அர்ச்சகர் நியமனத்திற்கு நீதிபதி அனிதா சுமந்த் இடைக்கால தடை விதித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
