‘’ஓராண்டு ஆணாகவும், அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் ஒரே உயிரினம் ஈரிதழ் சிட்டு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

‘’ஓராண்டு ஆணாகவும், அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் ஒரே உயிரினம், ஈரிதழ் சிட்டு,’’ என்று மேற்கண்ட நியூஸ் கார்டில் எழுதப்பட்டுள்ளது. நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் லோகோவுடன் பகிரப்பட்டிருப்பதால், இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டு உண்மையிலேயே நியூஸ்7 தமிழ் ஊடகம் வெளியிட்டதா, என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.

அதற்கு அவர், ‘’எங்களது குழுவைச் சேர்ந்த ஒருவர் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் குறிப்பிட்ட செய்தியை இணையதளத்தில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டிருந்தார். பிறகு, அதனை நாங்கள் சரிபார்த்தபோது, தவறான தகவல் என தெரியவரவே, உடனடியாக எங்களது சமூக வலைதள பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் இருந்து அகற்றிவிட்டோம். ஆனாலும், பலர் இதனை இன்னமும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்,’’ என்றார்.

முதல்கட்ட ஆய்விலேயே, குறிப்பிட்ட செய்தி தவறானது என சந்தேகமின்றி தெளிவாகிறது. எனினும், கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் நமது மலையாள பிரிவினர் உதவியுடன், கேரளாவைச் சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சியாளர் சுகதன் (Dr. R Sugathan, Ornithrologist) விளக்கம் கேட்டறிந்தோம்.

அவர் கூறுகையில், ‘’இது sunbird எனப்படும் தேன்சிட்டு குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினமாகும். மலர்களில் தனது நீண்ட அலகை வைத்து தேன் உறிஞ்சி குடிப்பதே இதன் பிரதான பணியாகும். இந்த பறவையினத்தில், ஆண் பறவை நன்கு வளர்ந்து, இனப்பெருக்க காலத்தை எட்டும்போது, அதன் நிறம், தோற்றம் மற்றும் இறகுகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும். இனப்பெருக்க காலம் முடிந்த பிறகு, ஆண் பறவையின் கவர்ச்சி மறைந்து, பார்ப்பதற்கு ஒரு பெண் பறவை போல மாறிவிடும். அதாவது, சாதாரண நாட்களில் ஆண், பெண் பறவைகளின் தோற்றத்தில் பெரிய வேறுபாடு இருக்காது. மற்றபடி, அதன் உடல் உறுப்புகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதனை தவறாக புரிந்துகொண்டு, பறவையின் உடலில் ஆண், பெண் என மாறுபாடு ஏற்படுவதாகச் சிலர் இத்தகைய வதந்தி பரப்பி வருகிறார்கள். இது மிகவும் தவறான தகவல்,’’ என்றார்.

எனவே, ‘’ஈரிதழ் சிட்டு (தேன் சிட்டு) உடலில் ஏற்படும் கவர்ச்சி தோற்றத்தை தவறாக புரிந்துகொண்டு, அதன் உடல் உறுப்புகள் ஆணாகவும், பெண்ணாகவும் மாறும் என தவறான தகவலை இணையதளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள்; அதனை படிக்கும் புதுமுக பத்திரிகையாளர்கள் மற்றும் சாமானிய மக்கள் உண்மை என நம்பி ஷேர் செய்ய தொடங்குகின்றனர்,’’ என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஓராண்டு ஆணாகவும், மறு ஆண்டில் பெண்ணாகவும் மாறுமா ஈரிதழ் சிட்டு?- உண்மை இதோ!

Fact Check By: Pankaj Iyer

Result: False