
இமய மலையில் 200 ஆண்டுகள் ஒரு இந்து மத துறவி வாழ்ந்து வருகிறார் என்றும் அவர் சிவ நாமத்தையே உணவாக கொண்டு வாழ்ந்து வருகிறார் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உடல் மெலிந்த துறவி ஒருவரின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சிவன் நாமமே உணவு..இமாலய மலையில் 200 வருடங்களாக வாழும் துறவியின் வைரல் வீடியோ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை S.P. Poomari Press என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 22ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இமய மலையில் பல ஆண்டுகள் வாழும் துறவி என்று அவ்வப்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. 200 ஆண்டுகள் வரை ஒருவர் வாழ்ந்து வந்தால் அது கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றிருக்கும். எனவே, இந்த தகவல் உண்மைதானா என்று சரி பார்க்க ஆய்வு செய்தோம்.
சிலர் வெளியிட்ட வீடியோ பதிவில் இந்த வீடியோ டிக்டாக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது என்பதால் அதில் இருந்து அந்த வீடியோவை நம்மால் கண்டறிய முடியாத சூழல்.
எனவே, வீடியோவில் உள்ள சாமியார் படத்தை மட்டும் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த சாமியார் இமய மலையில் வாழ்பவர் அல்ல என்பதும், இவர் தாய்லாந்தில் வசித்து வருகிறார் என்றும் இவரது உண்மையான வயது 109 என்றும் தெரியவந்தது. இந்த துறவியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதில் தாய் மொழியில் பதிவு இருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக மொழி மாற்றம் செய்து பார்த்த போது இவர் தாய்லாந்தில் உள்ள புத்த மத துறவி என்பது தெரிந்தது.

இந்த துறவி தொடர்பாகப் பல செய்திகள் வெளியாகி இருந்தன. அவற்றைப் பார்த்தோம். அதில், இந்த துறவியின் பெயர் பிராக்ரு அகா சந்தாசாரோ. 1921ம் ஆண்டு தாய்லாந்தின் நாகோன் ரட்சசிமாவில் உள்ள மருத்துவமனையில் பிறந்தார். அவரது உடல் நிலை பாதிக்கப்படவே 20 வயதுக்கு மேல் வாழ வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வந்தால் அவருக்கு 110 வயதாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புத்தமத துறவியின் வீடியோவை அவரது கொள்ளுப்பேத்தி டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். அதை வைத்து பலரும் தவறான தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: newsflare.com I Archive
இந்த வீடியோவை வெளியிட்ட Phrakhru-வை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தொடர்புகொண்டு பேசியபோது, “வைரல் வீடியோவில் இருப்பது என்னுடைய தாத்தா. அவருக்கு 109 வயதாகிறது. நான் தான் அவரை பராமரித்து வருகிறேன். அவர் நல்ல உடல் நலனுடன் உள்ளார். என்னுடைய டிக்டாக் அக்கவுண்டில் இருந்து என்னுடைய அனுமதியின்றி வீடியோவை எடுத்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். என் தாத்தா தாய்லாந்தில் மிகவும் மரியாதைக்குரிய நபர். அவருடைய வீடியோவுடன் தவறான தகவலை சேர்த்து பலரும் பகிர்ந்து வருவது வேதனையாக உள்ளது” என்று கூறினார். நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்திலும் இது தொடர்பான கட்டுரை வெளியாகி இருந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இமய மலையில் வாழும் 200 வயதான துறவி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்றும், இவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 109 வயதான புத்தமத துறவி என்பதும் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இமய மலையில் உணவு உட்கொள்ளாமல் 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்து மத துறவி என்று பகிரப்படும் வீடியோ தாய்லாந்தின் 109 வயதான புத்த மத துறவியுடையது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இமய மலையில் வாழும் 200 வயது இந்து மத துறவி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
