
சீனாவின் ஷாங்காயில் உள்ள டிஸ்னி லேண்டில் மனிதர்களைப் போன்ற இரண்டு ரோபோக்கள் பரதநாட்டியம் ஆடின என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive
இரு பெண்கள் நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. Murugesan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் வெளியிட்டிருந்த பதிவில் “சீனாவில் அரங்கேற்றம் செய்யப்பட்ட ரோபோ நடனம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு பதிவில் இந்த வீடியோ பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், “நடனத்தை கவனமாகப் பாருங்கள், சீனாவில் ஷாங்காயில் உள்ள டிஸ்னிலேண்டில் நிகழ்த்தப்பட்ட பாரம்பரிய நடனம். இருவருமே நடன கலைஞர்கள் அல்ல. இவை இரண்டு சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள். நடனம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. இருப்பினும் இந்த நடனத்தை பார்க்க டிக்கெட் வாங்க 4 மணி நேரம் ஆகும். இந்த நடனத்தைப் பார்ப்பதற்கான டிக்கெட் விலை 499 யுவான், இது $ 75 க்கு சமம். இந்திய மதிப்பில் 5,600 / – இலங்கை மதிப்பில் தோராயமாக 🌹🌹🌹🌹* அவர்களின் முகபாவங்கள் ஜப்பானியர்களின் முகபாவனைகளைப் போலவே இருக்கும். இந்த இரண்டு ரோபோக்களும் உண்மையான மனிதர்களைப் போல் இருக்க மிகவும் கடினமாக உழைத்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை தமிழ்ச்செல்வி திருமலை என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மார்ச் 12ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
சீனா உருவாக்கிய பிளாஸ்டிக் மனிதன் விற்பனைக்கு வர உள்ளது. இரண்டு லட்சத்தில் எல்லா வேலைகளையும் செய்யும் வகையில் ரோபோ விற்பனைக்கு வர உள்ளது என்று முன்பு வதந்தி பரவியது. வீடியோகேம் பெண் கதாபாத்திரத்தைத் தவறாக பகிர்ந்துள்ளனர் என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
சீனாவில் ரோபோக்களின் பரதநாட்டியம் அரங்கேற்றம், ரோபோக்கள் ஜப்பானியர்கள் சாயலில் இருக்கிறது, ஐந்து நிமிட நடனத்தைப் பார்க்க நான்கு மணி நேரம் காத்திருந்து டிக்கெட் வாங்க வேண்டும் என்று நிறைய பில்ட் அப் கொடுத்திருந்தனர். ஜப்பானியர்கள் சாயலில் ரோபோவை உருவாக்கி, அதற்கு பரதநாட்டியம் ஆடவைத்து எதற்காக சீனாவில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்று கேள்விகள் எழுந்தது. மேலும், மனிதர்களைப் போன்று அச்சு அசலாக இருக்கும், செயல்படும் ரோபோக்கள் இதுவரை வந்ததாக எந்த செய்தியும் இல்லாததால் இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, வீடியோவில் இருக்கும் பெண்கள் ஐக்கிய நாடுகள் சபையில் நடனமாடியிருக்கும் வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. வீடியோவில் நடனமாடுபவர்கள் பெயர் சோபியா சாலிங்காரோஸ், இஷா பருப்புடி (Sophia Salingaros, Isha Parupudi) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ கடந்த 2017ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது.
சோபியா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “பரதநாட்டியம் நடனம் மீது காதல் கொண்ட இந்தியரல்லாத பெண்” என்று குறிப்பிட்டிருந்தார். இஷாவும் சோபியாவும் அமெரிக்காவில் வசிப்பதாக தங்கள் சமூக ஊடக பக்கங்களில் குறிப்பிட்டிருந்தனர். பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர்களின் வீடியோவை எடுத்து ரோபோ என தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பெண்கள் நடனமாடும் வீடியோவை ரோபோ நடனமாடுவதாக தவறாக குறிப்பிட்டு பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சீனாவில் பரதநாட்டியம் ஆடிய ரோபோக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
