பிரதமர் நரேந்திர மோடிக்காக ரூ.13,450 கோடியில் கட்டப்படும் வீடு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மாதிரி புகைப்படத்துடன் "ஏழைத்தாயின் மகன் வீடு 13,450 கோடி மக்களே சிந்திப்பீர்" என்று யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ஏழைதாயின் மகன் வீடு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Tenkasi Azeez என்பவர் 2021 மே 7 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்திய அரசு புதிய நாடாளுமன்றம், அமைச்சர்கள் அலுவலகம், பிரதமர், குடியரசு துணைத் தலைவர் இல்லம் என புதிய கட்டுமானத்தை டெல்லியில் மேற்கொண்டு வருகிறது. ரூ.20 ஆயிரம் கோடியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் உயிரிழக்கும் சூழலில், இவ்வளவு பெரிய செலவு தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்துக்குள் நாம் செல்லவில்லை.

மொத்தம் ரூ.20 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்படும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் மோடியின் இல்லம் கட்ட மட்டும் 13,450 கோடியில் கட்டப்படுவதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை அளிக்கவே இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இது தொடர்பாக, கூகுளில் தேடிய போது பிரதமர் இல்ல வளாகத்தில் 10 கட்டிடம், எஸ்.எஸ்.ஜி பாதுகாப்புப் படை கட்டிடம், குடியரசு துணைத் தலைவர் இல்லம் வளாகத்தில் கட்டப்படும் 29 கட்டிடம் என மொத்தம் 51 கட்டிடங்கள் கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது என்றும், இந்த 51 கட்டிடங்கள் கட்ட ரூ.13,450 கோடி செலவிடப்படும் என்றும் செய்தி நமக்குக் கிடைத்தது. இதில் எட்டு அடுக்கு கொண்ட 10 அரசு அலுவலக கட்டிடங்களும் அடங்கும். இந்த கட்டிடங்களில் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்ற வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று செய்திகளில் கூறப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: business-standard.comI Archive 1 I indianexpress.comI Archive 2 I indiatimes.com I Archive 3

அதாவது பிரதமரின் புதிய இல்லம் கட்ட மட்டும் ரூ.13,450 கோடி என்பது தவறானது. பிரதமர், குடியரசு துணைத் தலைவர் இல்லம், அரசு அலுவலகங்கள், எஸ்.எஸ்.ஜி அலுவலகம் உள்ளிட்ட 51 கட்டிடங்களையும் சேர்த்து கட்டத்தான் இந்த ரூ.13,450 கோடி என்பது செய்திகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், விஷமத்தனமாக பிரதமர் மோடிக்கு கட்டப்படும் வீட்டின் செலவு மட்டும் ரூ.13,450 கோடி என்று தவறாக தகவல் பரப்பப்பட்டு வருவது உறுதியாகிறது.

அடுத்ததாக பிரதமருக்காக கட்டப்படும் வீடு என்று பகிரப்படும் படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். இது புதிதாகக் கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடம் ஆகும். இதை உறுதி செய்வதற்கான ஆதாரத்தைத் தேடினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, இது புதிய நாடாளுமன்ற வளாகம் என்று பல செய்திகள் நமக்குக் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: ndtv.com I Archive 1 I timesofindia I Archive 2 I hindustantimes I Archive 3

இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு கட்டுவதற்காக மட்டும் ரூ. 13,450 கோடி செலவிடப்படுவதாகக் கூறப்படும் தகவல் மற்றும் பிரதமருக்காக கட்டப்படும் வீட்டின் படம் என்று பகிரப்படும் படம் என இரண்டுமே தவறானது என்று உறுதியாகிறது. பிரதமர் இல்லம் உள்ளிட்ட 51 கட்டிடங்கள் கட்டவே ரூ.13,450 கோடி செலவிடப்பட உள்ளது என்பதே உண்மையான தகவல் என்பதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரதமர் இல்லம் கட்ட மட்டும் ரூ.13,450 செலவிடப்படுவதாக பகிரப்படும் தகவல் தவறானது; பிரதமர் இல்லம் உள்ளிட்ட 51 கட்டிடங்கள் கட்டவே ரூ. 13,450 செலவிடப்பட உள்ளது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பிரதமர் மோடிக்கு ரூ.13,450 கோடியில் கட்டப்படும் வீட்டின் படமா இது?– உண்மை அறிவோம்

Fact Check By: Chendur Pandian

Result: Partly False