மீண்டும் அரசியலுக்கு வரலாமா என்று ஆலோசிக்க உள்ளதாக ரஜினிகாந்த் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி. மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன். மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பேன் – நடிகர் ரஜினிகாந்த்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹிந்து சனாதனி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 13ம் தேதி இந்த நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படம் வெளியாக உள்ள நிலையில் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசிக்க உள்ளதாக கூறினார் என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன் என்று ரஜினிகாந்த் சமீபத்தில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் நியூஸ் கார்டில், ரஜினிகாந்த் என்பதற்கு பதில் ரஜினா காந்த் என்று தவறாக இருந்தது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு மீதான சந்தேகத்தை ஏற்படுத்தவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

https://twitter.com/dinamalarweb/status/1414442416489250820

Archive

இந்த நியூஸ் கார்டில் உள்ள தகவலை கூகுளில் டைப் செய்து தேடிய போது, 2021ம் ஆண்டு இப்படி ஒரு நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில் ரஜினாகாந்த் என்று தான் குறிப்பிட்டிருந்தனர். கடந்த ஆண்டும் இப்படி ஒரு அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட்டதாக நினைவில் இல்லை. எனவே, தினமலர் உண்மையான செய்தியைத்தான் கூறியதா என்று பார்த்தோம். தினமலர் இந்த நியூஸ் கார்டை 2021 ஜூலை 12ம் தேதி வெளியிட்டிருந்தது. அந்த தேதியில் ரஜினிகாந்த் ஏதும் அறிவிப்பு வெளியிட்டுள்ளாரா என அறிய அவரது ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம்.

அப்போது, 2021 ஜூலை 12ம் தேதி ட்வீட் ஒன்றை வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், “நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

https://twitter.com/rajinikanth/status/1414461069838323719

Archive

ரஜினிகாந்த் தன்னுடைய அறிக்கையில் மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன் என்று கூறவில்லை. அப்படி இருக்கும் போது தினமலர் எப்படி இப்படி தவறான தகவலை பரப்பியிருக்கும் என்று சந்தேகத்துடன் தொடர்ந்து தேடினோம். தினமலர் தன்னுடைய நியூஸ் கார்டை 2021 ஜூலை 12 காலை 10.02க்கு பதிவிட்டிருந்தது. ரஜினிகாந்த் தன்னுடைய அறிக்கையை 2021 ஜூலை 12 காலை 11.16க்கு வெளியிட்டிருந்தார். இதன் மூலம் ரஜினிகாந்த் அறிக்கை வெளியாவதற்கு முன்பு நியூஸ் கார்டு வெளியாகிவிட்டது. எனவே, ரஜினிகாந்த் பேட்டி ஏதும் அளித்துள்ளாரா என்று பார்த்தோம்.

இது தொடர்பாக தேடிய போது, தமிழ் இந்து வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது. நிர்வாகிகளை சந்திப்பதற்காக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் என்றும், அப்போது, “மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு, இப்போது வந்திருக்கிறேன். மக்கள் மன்றத்தின் பணி என்ன என்பது குறித்து நிர்வாகிகள், ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்ற கேள்விகள் உள்ளன. நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுத்துவிட்டு அது குறித்து தெரிவிக்கிறேன்” என்று கூறினார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

ரஜினி பேட்டி வீடியோவை யூடியூபில் தேடினோம். அப்போது புதிய தலைமுறை வெளியிட்டிருந்த ரஜினிகாந்த் அளித்த பேட்டி நமக்கு கிடைத்தது. அதில், “நானும் நெக்ஸ்ட் அரசியலுக்கு வரப்போறேனா ஃபியூச்சர்ல, இல்லையா அப்படின்னு கேள்வி எல்லாம் இருக்கு. நிர்வாகிகள் கிட்ட பேசி முடிச்சிட்டு உங்கிட்ட தெரிவிக்கிறேன்” என்று கூறினார். 2021ல் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்கு முன்பு, அரசியலுக்கு வருவேனா இல்லையா என்று ஆலோசிக்க உள்ளேன் என்று ரஜினிகாந்த் கூறியது உண்மைதான். நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பிறகு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை என்று ரஜினி உறுதி செய்துவிட்டார். முடிந்துபோன விஷயத்தை புதிது போல பகிர்ந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று ரஜினிகாந்த் கூறிய பழைய செய்தியை புதிது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மீண்டும் அரசியலுக்கு வரலாமா என்று ஆலோசிக்க உள்ளதாக ரஜினிகாந்த் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context

Leave a Reply