
தனக்கு வணக்கம் தெரிவித்த தமிழக அமைச்சர்களுக்கு பதில் வணக்கம் கூறுவதை மோடி தவிர்த்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காந்திகிராம நிகர்நிலை பல்கலைக் கழக விழாவில் பங்கேற்க மோடி வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அப்போது, தமிழக அமைச்சர் கீதா ஜீவன் வணக்கம் கூற மோடி கடந்து செல்வது போன்று காட்சி உள்ளது. நிலைத் தகவலில், “மங்குனிகளுக்கு மட்டும் வணக்கம் கிடையாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Kaniyampoondi Senthil என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 நவம்பர் 11ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தமிழ்நாடு அமைச்சர்களுக்கு வணக்கம் கூறுவதை மோடி தவிர்த்துவிட்டார் என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோவை பார்த்தால் மோடி வணக்கம் கூறுவதைத் தவிர்த்தது போல இல்லை. தமிழ்நாடு அமைச்சர்கள் வணக்கம் கூற தவிர்த்தது போல இருந்தது. கீதா ஜீவன் மட்டும் வணக்கம் கூறுகிறார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சக்கரபாணி, மனோ தங்கராஜ் ஆகியோர் வணக்கம் கூறாமல் இருப்பது போலத் தெரிந்தது. எனவே, இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் அவருடைய யூடியூப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அல்லது பின்னர் பதிவேற்றம் செய்யப்படும். எனவே, காந்திகிராம பல்கலைக் கழக விழா அவருடைய யூடியூப் பக்கத்திலிருந்து எடுத்தோம். அப்போது, விழா நடைபெறும் இடத்துக்குப் பிரதமர் மோடி நடந்து வரும் காட்சிகள் நமக்குக் கிடைத்தன. அதில், அவர் நேராக நடந்து வந்து, அமைச்சர்கள் இருக்கும் பக்கம் திரும்புகிறார். திரும்பும் நேரத்தில் தமிழக அமைச்சர்களுக்கு அவர் வணக்கம் கூறுவதைக் காண முடிந்தது. தமிழக அமைச்சர்களும் பதிலுக்கு வணக்கம் கூறுவதை அந்த வீடியோவில் காண முடிந்தது.
தமிழக அமைச்சர்களைத் தாண்டி சென்ற பிறகு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருந்த காட்சி வந்தது. தமிழக அமைச்சர்களைக் கடந்த பிறகு மோடி கையை கீழே இறக்குகிறார். ஆனால், அமைச்சர் கீதா ஜீவன் மட்டும் கைகூப்பியடி நிற்கிறார். அதற்குள் பிரதமர் மோடி அமைச்சர்களை நடந்து அதிகாரிகள் பக்கம் வந்துவிடுகிறார்.
முழு வீடியோவையும் பார்க்கும் போது தமிழ்நாடு அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு வணக்கம் கூறுவதையும் பிரதமர் மோடி தமிழ்நாடு அமைச்சர்களுக்கு வணக்கம் கூறுவதையும் காண முடிகிறது. இதன் அடிப்படையில், தமிழக அமைச்சர்களுக்கு வணக்கம் கூறாமல் பிரதமர் மோடி புறக்கணித்தார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
காந்திகிராம பல்கலைக்கழக விழாவில் தமிழ்நாடு அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வணக்கம் கூறிய காட்சியை நீக்கிவிட்டு, அதன் பிறகான காட்சியை மட்டும் பகிர்ந்து தமிழக அமைச்சர்கக்கு வணக்கம் கூறுவதை பிரதமர் மோடி தவிர்த்தார் என்று தவறாக பகிர்ந்து வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Title:தி.மு.க அமைச்சர்களுக்கு வணக்கம் கூறாமல் மோடி தவிர்த்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
