வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டுப் போட முடியும்: வாட்ஸ்ஆப் வதந்தி

சமூக ஊடகம்

‘’வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும், ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை காட்டி நீங்கள் ஓட்டுப் போட முடியும்,’’ என வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் தகவல் பகிரப்பட்டிருந்தது. இதனை உண்மை என நம்பி பலரும் ஃபார்வேர்ட் செய்து வருவதால், இந்த தகவல் பற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

வதந்தியின் விவரம்:
‘’பொதுமக்கள் நலன் கருதியும், ஜனநாயகம் காப்பாற்றவும் ஒரு முக்கிய தகவல். நீங்கள் வாக்குச்சாவடி சென்று, அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால், உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி, வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49Aன் கீழ் ‘’சேலஞ்ச் ஓட்டு’’ கேட்டு வாக்கினை பதிவு செய்யுங்கள். உங்கள் வாக்கினை உங்களுக்கு மன்னதாக, வேறொருவர் பதிவு செய்திருந்தால், ‘’டெண்டர் ஓட்டு’’ கேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். ஒரு வாக்குச்சாவடியில் 14%க்கு மேல் டெண்டர் ஓட்டு பதிவாகி இருந்தால், அங்கு மறுவாக்கு நடத்தப்படும். வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்றிட இத்தகவலை அதிகபட்ச வாட்ஸ்அப் குழுக்களுக்கும், நண்பர்களுக்கும் ஜனநாயக நலன் கருதி இத்தகவலை மறவாமல் பகிர்ந்திடுங்கள்,’’ என அந்த வாட்ஸ்ஆப் மெசேஜில் கூறப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:
வாக்குரிமையின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு என்ற வார்த்தைகளின் அடிப்படையில், ஏராளமான வாட்ஸ்ஆப் குழுக்களுக்கு, இந்த மெசேஜ் பகிரப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே, சேலஞ்ச் ஓட்டு பற்றிய இத்தகவல், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தொடக்கத்தில், ஆங்கிலத்தில் பகிரப்பட்டு வந்த இத்தகவலை, தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழிலேயே மொழிபெயர்த்து, வாட்ஸ்ஆப்பில் ஃபார்வேர்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக, ஏற்கனவே, ஆங்கிலத்தில் பகிரப்படும் சேலஞ்ச் ஓட்டு வதந்தி தொடர்பாக, நாம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளோம். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

சரி, மேற்கண்ட வாட்ஸ்ஆப் வதந்தியை யாரேனும் ஃபேஸ்புக்கில் தமிழிலேயே பகிர்ந்துள்ளனரா என தேடிப் பார்த்தோம். அதில், நிறைய பேர் குறிப்பிட்ட வதந்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த விவரம் கிடைத்தது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஃபேஸ்புக் இணைப்புகளை கிளிக் செய்து பார்த்தபோது, வாட்ஸ்ஆப்பில் வந்த தகவலை அப்படியே, அச்சு மாறாமல், பகிர்ந்திருந்தது தெரியவந்தது. அந்த பதிவுகளில் சிலவற்றின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link

Archived Link

சரி, இந்த பதிவுகளில் கூறப்பட்டுள்ளதில், எது உண்மை, எது பொய் என்று மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்யலாம்.

இவர்கள் சொல்லும் தகவலின் பேரில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி சென்று தேடி பார்த்தோம். அதில், தேர்தலின்போது, வாக்காளர்களும், தேர்தல் அதிகாரிகளும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றிய வழிகாட்டி புத்தகத்தின் இணைப்பு கிடைத்தது. இவற்றை படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யுங்கள்.

இதன்படி பார்த்தால், விதிமுறை 49 ஏ என்பது ஓட்டுப் பதிவு இயந்திரங்களுக்கானது. இதற்கும், ஒருவர் வாக்காளர் பட்டியலில் பெயர் இன்றி ஆதார் அல்லது வாக்காளர் அட்டை காட்டி ஓட்டு போடலாம் என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 49 ஏ என்பது எதற்கான தேர்தல் விதிமுறை என்றுகூட தெரியாமல் இந்த தகவலை பலர் பகிர்ந்து வருகின்றனர். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதேபோல, சேலஞ்ச் ஓட்டுக்கும், 49ஏ விதிமுறைக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை. சேலஞ்ச் ஓட்டு என்பது, வாக்காளரின் அடையாளம் பற்றி, தேர்தல் அதிகாரிக்குச்சந்தேகம் ஏற்பட்டால், அதனை உறுதி செய்ய வேண்டியது தொடர்பான விசயமாகும். இதுபற்றிய ஆதார படம் மற்றும் செயல் விளக்க வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், டெண்டர் ஓட்டு பற்றி இந்த வாட்ஸ்ஆப் வதந்தியில் கூறப்படும் தகவல் பாதிதான் உண்மை. அதாவது, உங்களது வாக்கை வேறு ஒருவர் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் கண்டுபிடித்து, மறுவாக்குப் பதிவு செய்ய முடியும். இதற்கு, தேர்தல் நடத்தை விதி 49பி மட்டுமே உதவுகிறது. இந்த விதிமுறை பற்றி எதுவும் அதில் கூறப்படவில்லை. ஆதார படம் மற்றும் செயல் விளக்க வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

இறுதியாக, நமது பெயரில் ஏற்கனவே ஒருவர் வாக்கு செலுத்தியிருந்தால், அதை தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறி, உரிய ஆதாரங்களை காட்டி நாம் மறு வாக்கு செலுத்தலாம். அப்படி நாம் செலுத்தும் வாக்கு, தனியாக சேகரித்து வைக்கப்படும். அவ்வாறு செலுத்தப்படும் மறுவாக்குகள் 14% ஆக உயர்ந்தால், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை. ஆனால், குறிப்பிட்ட தொகுதியை சேர்ந்த வேட்பாளர்களின் வெற்றி அல்லது தோல்வி வாய்ப்பு மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாதிக்கப்பட நேரிட்டால் மட்டுமே, இந்த மறுவாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) 49 ஏ என்பது ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான விதிமுறைகள் பற்றி விளக்குகிறது.
2) கள்ள ஓட்டு பற்றி 49 பி மட்டுமே விளக்குகிறது. இதன்கீழ், உங்கள் ஓட்டை யாரேனும் போட்டிருந்தால், தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு, மறுவாக்குப் பதிவு செய்ய முடியும்.
3) வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே ஓட்டுப் போட முடியும்.
4) வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அட்டை கையில் இல்லாதபோது, ஆதார் அல்லது உரிய அடையாள அட்டை காட்டி ஓட்டுப் போடலாம்.
5) வாக்காளர் பட்டியலில் பெயர் இன்றி வாக்காளர் அல்லது ஆதார் அட்டை காட்டினாலும், ஓட்டுப் போட முடியாது.
6) மறுவாக்குகள் அதிகளவில் பதிவானாலும், அவை அரிதான நேரங்களில் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நமக்கு கிடைத்த தகவல் தவறான ஒரு வதந்தி என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதிப்படுத்தாமல், சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டுப் போட முடியும்: வாட்ஸ்ஆப் வதந்தி

Fact Check By: Parthiban S 

Result: False