மோடியின் ஆட்சிக் காலத்தில் குழாயில் தண்ணீர் குடித்தார் என்பதற்காகத் தாழ்த்தப்பட்ட இந்துவை உயர் சாதி இந்துக்கள் அடித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

காலணியில் தண்ணீர் ஊற்றி அதை ஒருவரை குடிக்கச் செய்யும் வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "மோடியின் இந்தியாவின் அற்புதமான படம். மோடி காலத்தில் உயர் சாதியினரின் குழாய்த் தண்ணீரைக் குடித்ததற்காகத் தாழ்த்தப்பட்ட இந்துவை ஷூவில் இருந்து தண்ணீர் குடிக்க வைத்துத் தண்டிக்கும் நடைமுறையைப் பாருங்கள். நாட்டிலிருந்து பாகுபாட்டை அகற்ற முடியாத அரசு, பிற்படுத்தப்பட்ட சாதிகளை எப்படி வளர்க்கும்?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

உண்மை அறிவோம்:

தாழ்த்தப்பட்ட இந்து பிரிவைச் சார்ந்த ஒருவர் குழாயில் தண்ணீர் குடித்தார் என்பதற்காக உயர் சாதி இந்துக்கள் தாக்கியதாகப் பதிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று எந்த தகவலும் இல்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டு வெளியான சில செய்திகள் நமக்குக் கிடைத்தன. அந்த செய்திகளைப் பார்த்தபோது, இது உயர் சாதி, தாழ்த்தப்பட்ட சாதி பிரச்னை தொடர்பானது இல்லை என்பது தெரியவந்தது.

கடந்த 2014ம் ஆண்டு முதல், இந்திய பிரதமராக நரேந்திர மோடி இருந்தாலும், 2020ம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியே நடந்து வந்தது; அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் மோடி மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்பது தெரியவில்லை.

https://twitter.com/sangpran/status/1272847024191307777

Archive

எதற்காக அந்த நபருக்கு காலணியில் தண்ணீர் ஊற்றிக் கொடுக்கப்பட்டது என்று பார்த்தோம். அவரது கிராமத்தைச் சார்ந்த திருமணமான பெண்ணுடன் இந்த நபருக்கு தொடர்பு இருந்துள்ளது. இதனால், பஞ்சாயத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன. தாக்கியவர்கள், தாக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒரே சாதிப் பிரிவினர் தான் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்ற ஆங்கில இணைய ஊடகம் இது தொடர்பாக கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் இவர்கள் எல்லாம் ரெபாரி என்ற கால்நடை வளர்ப்பு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சாதி எந்த பிரிவில் வருகிறது என்று பார்த்த போது, ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்தது என்று தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட யார் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இவர்கள் எல்லாம் ஓபிசி பிரிவினர் என்பதால் வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும் சில செய்திகள் தெரிவித்தன. மேலும் இந்த வீடியோ 2020ம் ஆண்டு வைரல் ஆன போது, அப்போது ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்த அசோக் கெலாட் மற்றும் மாநில போலீஸ் அதிகாரிகளை டேக் செய்து பலரும் ட்விட்டரில் பதிவிட்டதாகவும் செய்திகள் நமக்குக் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: freepressjournal.in I Archive 1 I newindianexpress.com I Archive 2

ராஜஸ்தானில் திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக இளைஞர் ஒருவரை ஊர் பஞ்சாயத்தார் தாக்கியுள்ளனர். காலணியில் தண்ணீர் ஊற்றிக் குடிக்க வைத்து கொடுமை செய்துள்ளனர். இந்த தகவலை மறைத்து, குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்தார் என்பதற்காக உயர் சாதியினரால் தாக்கப்பட்டார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.

இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

காதல் காரணமாக இளைஞர் ஒருவரை கிராம பஞ்சாயத்தார் தாக்கிய வீடியோவை சாதி பின்னணி காரணமாக தாக்குதல் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பொதுக் குழாயில் தண்ணீர் குடித்த இந்த நபரை உயர் சாதியினர் தாக்கினரா?

Written By: Chendur Pandian

Result: False