ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.41.55ஐ தமிழ்நாடு அரசு வரியாக வசூலிக்கிறது என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெட்ரோல் நிலையத்தில் அறிவிப்புப் பலகை வைத்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், "

அடிப்படை விலை 35.50

மத்திய அரசு வரி 19.50

மாநில அரசு வரி 41.55

விநியோகஸ்தர் 6.50

மொத்தம் 103.05.

போர்ட பார்த்துட்டு பெட்ரோல் போட்டு போ பெரியார் பேரனே" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Anbu Arul என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 அக்டோபர் 15ம் தேதி இதை பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம் இல்லை, மாநில அரசுகள்தான் அதிக அளவில் வரி வசூலிப்பதாகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. முன்பு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி அதிக அளவில் வரி வசூல் செய்கிறார் என்று பரப்பப்பட்டது. அதன் பிறகு, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஸ்டாலின் பெட்ரோலிய பொருட்கள் மீது அதிக வரி விதித்து, அநியாயமாகப் பணம் வசூலிக்கிறார் என்று வதந்தி பரப்பப்பட்டது. இது பற்றி ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரைகள் வெளியிட்டிருந்தோம்.

2022 மே மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது மிகப்பெரிய அளவில் வரியைக் குறைத்தது. அதன் பிறகு பெட்ரோல் விலை பெரிய அளவில் உயரவில்லை. மத்திய அரசின் வரி விகிதங்கள் மாறுவதால், நம்முடைய பழைய கட்டுரைகள் தற்போதைய சூழலுக்குச் சரியானதாக இருக்காது. எனவே, புதிதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: iocl.com I Archive

முதலில் பெட்ரோலின் அடிப்படை விலை மற்றும் மத்திய அரசின் வரி எவ்வளவு என்று பார்த்தோம். அடிப்படை விலை மற்றும் மத்திய அரசின் வரி என்பது இந்தியா முழுவதற்க்கும் ஒன்றாக இருக்கும். மாநில அரசுகள் வரி என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். இந்தியன் ஆயில் நிறுவனம் அக்டோபர் 16ம் தேதி வெளியிட்ட டெல்லி மாநிலத்துக்கான விலை பட்டியல் நமக்கு கிடைத்தது. அதில் அடிப்படை விலை ஒரு லிட்டருக்கு 57.15 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சரக்கு கட்டணம் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 57.15 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசின் கலால் வரியாக ரூ.19.90 வசூலிக்கப்படுகிறது என்றும், டீலர்களுக்கான கமிஷன் ஒரு லிட்டருக்கு ரூ. 3.76 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனுடன் தமிழ்நாடு அரசின் வரி எவ்வளவு என்று பார்த்தோம். Petroleum Planning & Analysis Cell ஒவ்வொரு மாநில அரசும் எவ்வளவு வரி விதிக்கிறது என்று வெளியிட்டிருந்த ஆவணத்தை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பார்த்தோம். அக்டோபர் 17, 2022 தேதி அடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது தமிழ்நாடு அரசின் வரி என்பது 13 சதவிகிதம் மற்றும் லிட்டருக்கு 11.52 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் வரி என்பது 21.5 என்ற அளவில் இருக்கிறது. இதனுடன் டீலர் கமிஷன் ரூ.3.76 சேர்த்தால் 102.60 ரூபாய் என்ற அளவில் வருகிறது.

உண்மைப் பதிவைக் காண: ppac.gov.in

இதன் மூலம் பெட்ரோல் அடிப்படை விலை ரூ.35 என்றும், மாநில அரசுகள் குறிப்பாக தமிழ்நாடு அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 41.55 ரூபாய் வரி வசூலிக்கிறது என்றும் பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.35.50 என்றும் மாநில அரசுகள் ரூ.41.55 வரியாக வசூலிக்கின்றன என்றும் பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 41.55 ரூபாய் வரியை தமிழ்நாடு அரசு வசூலிக்கிறதா?

Fact Check By: Chendur Pandian

Result: False