மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு ரூ.52க்கு பெட்ரோலை வாங்கி 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படத்துடன் புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெட்ரோல் விலை: மத்திய அரசின் விலை ரூ.52.75, தமிழக அரசின் விலை ரூ.99.82. கொள்ளை லாபம் ரூ.47.07. வெள்ளை அறிக்கை வெளியிடுமா..? திமுக" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Manimaran என்ற ஃபேஸ்புக் ஐ.டி கொண்ட நபர் 2021 ஜூலை 5ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மற்றொரு பதிவில் மத்திய அரசு பெட்ரோலை ரூ.52க்கு விற்பனை செய்வது போலவும், தமிழ்நாடு அரசு அதை 100 ரூபாய்க்கு விற்பனை செய்வது போலவும் கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது. இதை Shree TV என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஜூலை 5ம் தேதி வெளியிட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மற்றொரு பதிவில் மத்திய அரசு பெட்ரோல் மீது வெறும் 20 சதவிகிதமும் டீசல் மீது 21 சதவிகிதமும் வரி விதிப்பதாகவும், மாநில அரசுகள்தான் பெட்ரோல் மீது 34 சதவிகிதமும், டீசல் மீது 25 சதவிகிதமும் வரி விதிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தமிழச்சி சுகன்பா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூலை 5ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெட்ரோலை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்வது இல்லை. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று மத்திய அரசின் பொதுத் துறை பெட்ரோலிய நிறுவனங்கள் தான் நாடு முழுவதும் பெட்ரோல், டீசலை விற்பனை செய்கின்றன. இந்த பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல் பங்க் முகவர்கள் வாங்கி விற்பனை செய்கின்றனர். இப்படி விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மீது மத்திய மாநில அரசுகள் வரி விதிக்கின்றன.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம் இல்லை, தமிழக அரசுதான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக இருந்த போது கூட வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இந்த வதந்தி மிக வேகமாக விதவிதமாக பரவி வருகிறது.

ஆனால், தமிழக அரசு பெட்ரோலை வாங்கி விற்பனை செய்வது போல விஷமத்தனமாக பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் பேசியபோது, இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் கேள்வி கேட்கலாமா என்று நம்மிடம் கோபித்துக்கொண்டனர்.

உண்மையில் மத்திய அரசு 52 ரூபாய்க்கு பெட்ரோலை வழங்குகிறதா, தமிழ்நாடு அரசு தான் 48 ரூபாய் வரியை விதித்து கொள்ளை லாபம் அடைகிறதா என்று ஆய்வு செய்தோம். மத்திய அரசு நாடு முழுக்க ஒரே மாதிரியான வரி விதிக்கிறது. மாநில அரசுகள் ஒவ்வொன்றும் தேவைக்கு ஏற்ப மதிப்பு கூட்டு வரியை விதித்துக்கொள்கின்றன. இந்தியன் ஆயில் ஜூலை 1, 2021 அன்று வெளியிட்ட டெல்லி மாநிலத்துக்கான பெட்ரோல் விலை நிர்ணயம் தொடர்பான அறிவிப்பு நமக்கு கிடைத்தது. ஜூலை 1ம் தேதி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98.81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அசல் பதிவைக் காண: iocl.com I Archive

அதில்

பெட்ரோல் உற்பத்தி விலை ரூ.38.93

போக்குவரத்து செலவுகள் 0.36 காசுகள்

1) மொத்தம் ( பெட்ரோலின் அடிப்படை விலை) ரூ.39.39

2) மத்திய அரசின் வரி மற்றும் செஸ் உள்ளிட்டவை ரூ.32.90

டீலர்களுக்கான கமிஷன் ரூ.3.92

இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்தால் 76.01 ரூபாய் (39.299 + 32.90 + 3.82 = 76.01) வருகிறது.

அசல் பதிவைக் காண: indianexpress.comI Archive

ஜூலை 1ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.80க்கு விற்பனை செய்யப்பட்டது. 99.80ல் இருந்து பெட்ரோல் அடிப்படை விலை + டீலர் கமிஷன் + மத்திய அரசின் வரிகள் கழித்தால் 23.79 ரூபாய் (99.80 - 76.01 = 23.79) வருகிறது.

அப்படி இருக்கும் போது மத்திய அரசு நிறுவனங்கள் தமிழக டீலர்களுக்கு 52 ரூபாய்க்கு பெட்ரோலை கொடுப்பதாகவும் தமிழக அரசு 48 ரூபாய்க்கு வரியை சேர்த்து விற்பனை செய்து மிகப் பெரிய அளவில் லாபம் சம்பாதிப்பதாகவும் கூறுவது தவறானது என்று உறுதியானது.

மத்திய அரசு 52 ரூபாய்க்கு பெட்ரோலை வழங்குகின்றது என்ற செய்தி எங்கிருந்து வந்தது என்று பார்த்த போது பாலிமரில் இந்த செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. எந்த ஆதாரம் அடிப்படையில் மத்திய அரசின் வரியுடன் சேர்த்து பெட்ரோல் 52 ரூபாய்க்கு வருகிறது என்று குறிப்பிட்டார்கள் என்று தெரியவில்லை. இது தவறான செய்தி என்று தெரிந்த பிறகு அந்த செய்தியை பாலிமர் தொலைக்காட்சி நீக்கிவிட்டது. இருப்பினும் இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தன்னுடைய செய்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மற்றொரு செய்தியை பாலிமர் வெளியிட்டிருந்தது. அதிலும் “தங்களுடைய செய்தியில் தவறு இல்லை. மத்திய மாநில அரசுகளின் வரிகள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக மாநில அரசின் வரிகளுடன் சேர்த்து என்று வெளியிகிவிட்டது” என்று தெரிவித்திருந்தனர். மத்திய அரசு வரியோடு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.52க்கு வருகிறது என்று முதல் வீடியோவில் குறிப்பிட்டதற்கு விளக்கம் அளிக்கப்படவிலலை. விளக்க வீடியோவில் இந்தியன் ஆயில் வெளியிட்டிருந்த தகவல் அடிப்படையில் சரியான விலையை குறிப்பிட்டிருந்தனர்.

https://twitter.com/polimernews/status/1412056471307624448

Archive

அசல் பதிவைக் காண: businesstoday.in I Archive 1 I indiatoday.in I Archive 2

மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலில் இருந்து வரிகள் மூலம் எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறது என்று தேடினோம். அப்போது 2021 மார்ச் மாதம் 13ம் தேதி பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பதில்தான் அது. அதில், ஒரு லிட்டர் பெட்ரோலில் இருந்து 32.98 ரூபாயும் ஒரு லிட்டர் டீசலில் இருந்து 31.83 ரூபாயும் லாபம் ஈட்டுவதாக அவர் கூறியிருந்தார் என செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்போது இந்த மதிப்பு அதிகரித்திருக்கும். பெட்ரோலுக்கு மத்திய அரசு 36 சதவிகித வரி விதிப்பதாக செய்திகள் நமக்கு கிடைத்தன.

இதன் மூலம் மத்திய அரசு மிகக் குறைந்த விலைக்கு பெட்ரோலை வழங்குவதாகவும், வெறும் 20 சதவிகிதம் தான் வரி விதித்துள்ளது என்றும் கூறப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

மாநிலங்கள் எவ்வளவு வரி விதிக்கின்றன... எல்லா மாநிலங்களும் 36 சதவிகிதம் வரி விதித்துள்ளதா என்று பார்த்தோம். இது தொடர்பாக மத்திய அரசின் https://www.ppac.gov.in/ இணைய தளத்தில் பெட்ரோல் விற்பனை வரி தொடர்பான தகவலைத் தேடி எடுத்தோம். அப்போது பா.ஜ.க ஆட்சி செய்யும் மணிப்பூரில் அதிகபட்சமாக 36.5 சதவிகிதம் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டிருப்பதும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் 36 சதவிகிதமும், டிஆர்எஸ் ஆட்சி செய்யும் தெலங்கானாவில் 35.2 சதவிகிதமும் பா.ஜ.க ஆட்சி செய்யும் கர்நாடகத்தில் 35 சதவிகிதமும் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 15 சதவிகிதம் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படுகிறது. அதனுடன் கூடுதலாக ஒரு லிட்டருக்கு 13.02 ரூபாய் வரியாக வசூலிக்கப்படுகிறது.

நம்முடைய ஆய்வில்,

மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.52.75க்கு விற்பனை செய்கிறது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2021 ஜூலை 1ம் தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ.32.90 வரியாக வசூலிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு 15 சதவிகித வரி + 13.02க்கு கூடுதலாக வரி விதித்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ஒரு லிட்டருக்கு 24 ரூபாய் என்ற அளவில் வருவாய் கிடைப்பதும் தெரியவந்துள்ளது.

பெட்ரோலுக்கு அதிக வரி விதிக்கும் மாநிலங்கள் பட்டியலில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மணிப்பூர் முதல் இடத்திலும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் 2வது இடத்திலும் உள்ளன. இதன் மூலம் அதிகம் வரி விதிக்கும் மாநிலம் தமிழ்நாடு என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில் மத்திய அரசிடமிருந்து 52.75 ரூபாய்க்கு பெட்ரோலை வாங்கி ரூ.47.07-க்கு விற்று அதிக லாபம் சம்பாதிக்கும் தமிழக அரசு என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. மேலும், மத்திய அரசு பெட்ரோல் மீது வெறும் 20 சதவிகிதம் மட்டுமே வரி விதிப்பதாகவும் மாநில அரசுகள்தான் 34 சதவிகிதம் வரி விதிக்கின்றன என்றும் பகிரப்படும் தகவலும் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மத்திய அரசிடமிருந்து 52.75 ரூபாய்க்கு பெட்ரோலை வாங்கி 100 ரூபாய்க்கு விற்று தமிழக அரசு ரூ.47 லாபம் பார்க்கிறது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா?

Fact Check By: Chendur Pandian

Result: False