
ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்ட ட்வீட், யூடியூப் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும்-கனிமொழி, எம்.பி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “இது யாரு பேருக்கு கைமோறப்போகுதோ….” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை எங்கள் இந்தியா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பொது மக்கள் போராட்டங்கள் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பின்னர் ஆலை மூடப்பட்டது. ஆலையைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காத நிலையில், அதை விற்றுவிட அதன் உரிமையாளர்கள் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்த சூழலில், ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று தி.மு.க-வின் மகளிர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கூறினார் என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். கனிமொழி அல்லது தி.மு.க-வினர் அந்த ஆலையை வாங்கி நடத்தப்போகின்றனர், அதனால்தான் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று கனிமொழி கூறியுள்ளார் என பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். கனிமொழி இப்படி கூறினாரா என ஆய்வு செய்தோம்.
தந்தி டி.வி-யில் இப்படி செய்தி வெளியாகி உள்ளதா என பார்த்தோம். ஆனால், “”ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து நடத்தப்படக் கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது” – கனிமொழி, எம்.பி” என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். கூகுளில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செய்தியின் தலைப்பை அப்படியே டைப் செய்து தேடினோம். அப்போது, தந்தி டிவி இந்த செய்தியை வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால், அந்த செய்தியை கிளிக் செய்து சென்றால் புதிய தலைப்பு வந்தது. தவறான தலைப்பு வைத்துவிட்டு பின்னர் அதை மாற்றியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இது தொடர்பாக தந்தி டிவி வெளியிட்ட ட்வீட்டும் அகற்றப்பட்டு இருந்தது. கூகுளில் புதிய தலைப்பு அப்டேட் ஆகாமல் இருப்பதை காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Archive I thanthitv.com I Archive
தந்தி டிவி வெளியிட்டிருந்த செய்தியை பார்த்தோம். அதில் கனிமொழி எம்.பி தந்தி டி.வி-க்கு அளித்திருந்த பேட்டி ஒளிபரப்பாகி இருந்தது. கனிமொழி எம்.பி, “ஸ்டெர்லைட் ஆலை வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கில் தமிழ்நாடு அரசு வேதாந்தா நிறுவனத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக வழக்கை எடுத்துக்கொண்டு செல்கிறோம். தி.மு.க ஆட்சியும் எடுத்திருக்கும் நிலைப்பாடு நிறுவனம் மூடப்படும், தொடர்ந்து இயங்கக் கூடாது என்பதுதான். தொடர்ந்து மக்களுடன் நின்று மூடப்பட வேண்டும் என்று அரசு குரல்கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இவர்கள் விற்கப்போவதாக நிலைப்பாட்டை வேதாந்தா நிறுவனத்தினர் எடுத்துள்ளனர்.
இந்த ஆலை தொடர்ந்து நடத்தப்படக் கூடாது… இப்போது இருக்கும் நிலையில் தாமிரம் உருக்கு ஆலையாக நடத்தக்கூடாது என்பதுதான் தி.மு.க-வின் நிலைப்பாடு. யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிறுவனமாக நடத்தினால் அதற்கு ஆட்சேபனை இருக்காது. மக்களிடம் எதிர்ப்பு, சுற்றுப்புறச் சூழலை பாதிக்கக் கூடிய நிறுவனமாக வந்துவிடக் கூடாது என்பதுதான் எம்.பி-யாக என்னுடைய நிலைப்பாடு. மக்களை பாதிக்கும் எதையும் கொண்டு வரக்கூடாது என்பது தளபதி அவர்களின் நிலைப்பாடும்” என்று கூறியிருந்தார்.
யார் வாங்கினாலும் மக்களை பாதிக்காத நிறுவனமாக நடத்தினால் ஆட்சேபனை இல்லை என்று கனிமொழி கூறியுள்ளார். கனிமொழியின் கருத்தை மாற்றி, “மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும்” என்று கனிமொழி கூறியதாக தவறான தலைப்பை தந்தி டிவி வெளியிட்டிருக்கிறது. செய்தியை முழுமையாகப் பார்க்காமல் சமூக ஊடகத்தில் பலரும் அந்த தலைப்பை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். இதனால் வீண் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நம்முடைய ஆய்வில் தந்தி டிவி தவறான தலைப்பு வைத்து செய்தி வெளியிட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
தலைப்பில் தவறு இருப்பது தெரிந்ததும் தந்தி டிவி தன்னுடைய தலைப்பை மாற்றிக்கொண்டுள்ளது.
ஆனால், பழைய தலைப்பை உண்மை என்று நம்பி பலரும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து, கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கனிமொழி அவ்வாறு கூறவில்லை என்பது அவருடைய பேட்டியின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
இதன் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று கனிமொழி கூறினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் எனகனிமொழி கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடத்தப்படும் என கனிமொழி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Misleading


