பா.ஜ.க மூத்த தலைவர்களின் மகள்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்தனரா?
பா.ஜ.க, இந்து அமைப்புகளின் தலைவர்களின் மகள்கள் எல்லாம் இஸ்லாமியர்களை திருமணம் செய்துள்ளார்கள் என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பா.ஜ.க மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரின் படங்களை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "எல்.கே.அத்வானியின் மகள் பிரதிபா அத்வானி பிராமண கணவனை உதறிவிட்டு ஒரு முஸ்லீமை வாழ்க்கை துணையாக்கியபோது அத்வானி ஏன் எதிர்க்கவில்லை...? முரளி மனோகர் ஜோஷியின் மகள் ரேணு திருமணம் செய்தது இஸ்லாமியரான ஷாநவாஸ் ஹுஸைனை...! வில்லாதி வீரன் சுப்ரமணிய சுவாமியின் அருமை மகள் BBC நியூஸ் வாசிப்பாளர் சுஹாசினி கரம் பிடித்தது நதீம் ஹைதரை...! பாசிச வெறியன் VHP தலைவன் அசோக் சிங்காலின்மகளை மணந்ததோ நக்வி என்கிற முஸ்லீமை...! இவர்களுக்கெல்லாம் இல்லாத 'லவ் ஜிஹாத்' ஹிஜாப் போன்ற விடயங்கள் எல்லாம் சதாரண மனிதர்கள் மீது புனையப்பட்டதின் வக்கிரம் புரிகிறதல்லவா....? புரிந்துகொண்டால் நீயும் என் தோழனே…" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை டீக்கடை பெஞ்ச் - Tea Kadai Bench என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் R R Immanuvel Raja என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் சுவாமியன் சுவாமிக்கு இரண்டு மகள்கள். ஒருவர் சுஹாசினி ஷைதர். தி இந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இஸ்லாமியர். இன்னொரு மகளின் பெயர் கீதாஞ்சலி சுவாமி. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் வேறு ஒருவரின் படத்தை சுவாமியின் மகள் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளனர். சுப்பிரமணியன் சுவாமி மகள் தொடர்பாக முன்பு நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டுள்ளோம். மற்ற தலைவர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
அத்வானியின் மகள் பிரதிபா அத்வானியின் கணவன் பற்றித் தேடிப் பார்த்தோம். பிரதிபா அத்வானி அகமதாபாத்தை சேர்ந்த ஹோட்டல் துறையைச் சேர்ந்த கைலாஷ் ததானியை ( Kailash Tadani) மணந்தார் என்றும், அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டுவிட்டது என்றும், தற்போது பிரதிபா தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறார் என்றும் செய்திகள் கிடைத்தன. அதே நேரத்தில், பிரதிபா அத்வானி இஸ்லாமியரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதற்கு எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
உண்மைப் பதிவைக் காண: timesofindia.indiatimes.com I Archive
அடுத்ததாக முரளி மனோகர் ஜோஷியின் மகள் ஷானவாஸ் உசேனை திருமணம் செய்துகொண்டாரா என்று பார்த்தோம். ஷானவாஸ் உசேனின் மனைவியின் பெயர் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று ரேணுதான். அவர் முரளி மனோகர் ஜோஷியின் மகளா என்று தேடிப் பார்த்தோம். அப்போது ஷானவாஸ் உசேனுக்கும் ரேணுவுக்கும் எப்படி காதல் ஏற்பட்டது என்று வெளியான கட்டுரை கிடைத்தது. அதில் ரேணுவின் முழு பெயர் ரேணு ஷர்மா என்று இருந்தது. முரளி மனோகர் ஜோஷியின் மகள் என்று குறிப்பிடவில்லை.
உண்மைப் பதிவைக் காண: bjp.org I Archive 1 I hindustantimes.com I Archive 2
முரளி மனோகர் ஜோஷிக்கு ரேணு என்று மகள் உள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். பாரதிய ஜனதா கட்சியின் இணையதளத்தில் முரளி மனோகர் ஜோஷி பற்றிய குறிப்பை வெளியிட்டிருந்தனர். அதில் அவருக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும் அவர்களின் பெயர் பிரியம்வதா மற்றும் நிவேதிதா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் முரளி மனோகர் ஜோஷியின் மகளை ஷானவாஸ் உசேனின் திருமணம் செய்யவில்லை என்பது உறுதியானது.
அடுத்தது விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவராக இருந்த அசோக் சிங்காலின் மகளைத்தான் பா.ஜ.க-வின் முக்தார் அப்பாஸ் நக்வி திருமணம் செய்தாரா என ஆய்வு செய்தோம். நக்வி - சீமாவின் காதல் கதையை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. எதிலும் சீமாவின் தந்தை அசோக் சிங்கால் என்றோ, அசோக் சிங்காலின் உறவினர் என்றோ குறிப்பிடவில்லை. எனவே, அசோக் சிங்காலின் குடும்பம் பற்றி தேடினோம்.
உண்மைப் பதிவைக் காண: timesofindia.indiatimes.com I Archive
விக்கிப்பீடியாவில் அசோக் சிங்காலின் குடும்ப வாழ்க்கை பற்றி எதையும் குறிப்பிடவில்லை. எனவே, சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா அசோக் சிங்கால் வாழ்க்கை பற்றி கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் விஷ்வ இந்து பரிஷத் செய்தி தொடர்பாளர் பர்மேந்திர ஜெயின் கூறுகையில், "அசோக் சிங்கால் மற்றும் அவரது சகோதரி இருவரும் வாழ்நாள் முழுக்க பிரம்மச்சாரிகளாக இருந்து இந்துத்துவத்துக்கு சேவை புரிந்தனர்" என்று கூறியதாகக் குறிப்பிட்டிருந்தனர். அசோக் சிங்கால் திருமணம் செய்யாதவர். சீமா நக்வியை அசோக் சிங்காலின் மகள் என்று கூறுவது தவறானது என்பது உறுதியானது.
சுப்பிரமணியன் சுவாமி தவிர்த்து மற்ற தலைவர்கள் பற்றி கூறியிருக்கும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு நிறையத் தவறான தகவலுடன் சிறிது உண்மையும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பின் தலைவர்களின் மகள்கள் இஸ்லாமியர்களைத்தான் திருமணம் செய்துள்ளனர் என்று பகிரப்படும் தகவல் பொய்யுடன் சிறிது உண்மையும் கலந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:பா.ஜ.க மூத்த தலைவர்களின் மகள்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்தனரா?
Fact Check By: Chendur PandianResult: Partly False