விஷால் கட்சி ஆரம்பித்ததாகப் பரவும் வதந்தி!
கட்சி தொடங்கவில்லை என்று நடிகர் விஷால் அறிவித்துவிட்ட பிறகும், நடிகர் விஷால் கட்சி தொடங்கிவிட்டார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடிகர் விஷால் கொடி ஒன்றை அறிமுகம் செய்யும் புகைப்படத்துடன் யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், "Mark Antony படத்துக்கு வந்த கூட்டத்த பார்த்து கட்சி ஆரம்பிச்சிட்டான் போல... இவன்கிட்ட யாராச்சி சொல்லுங்கயா... அந்தப்படத்துக்கு வந்த கூட்டம் இவனுக்காக இல்ல SJ SURYA காகனு" என்று இருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று புது கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து நடிகர் விஷால் கூட கட்சியை ஆரம்பிக்க உள்ளார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் அந்த தகவலைப் பொய்யாக்கும் வகையில் விஷால் அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை 2024 பிப்ரவரி 7ம் தேதி காலை 10.42க்கு வெளியிட்டிருந்தார்.
ஆனால் அதன் பிறகும் நடிகர் விஷால் கட்சியைத் தொடங்கிவிட்டார் என்று பலரும் சமூக ஊடகங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர். விஷால் கட்சி தொடங்கியது போன்ற புகைப்படத்துடன் பதிவிட்டு வருவதால் அது உண்மை என்று கருதி பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். விஷால் கட்சி தொடங்கவில்லை என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடி எடுத்தோம்.
நடிகர் விஷால் தன்னுடைய அறிக்கையை தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், "தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளைத் தொடர்ந்து செய்வேன். எதிர்காலத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களின் ஒருவனாக குரல் தொடங்க தயங்க மாட்டேன்" என்று கூறியிருந்தார். இதன் மூலம் இப்போதைக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டம் இல்லை என்று விஷால் கூறியது தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அடுத்ததாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது அது 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. 2018ம் ஆண்டு சென்னை கலைவானர் அரங்கில் நடந்த விஷால் ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக பெயர் மாற்றும் நிகழ்ச்சியின் போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக அப்போது வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விஷால் தற்போது அரசியல் கட்சி தொடங்கவில்லை, எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அப்படி ஒரு சூழல் வந்தால் அதன்படி நடப்பேன் என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் விஷால் அரசியல் கட்சி தொடங்கிவிட்டார் என்று பரவும் பதிவுகள் உண்மை இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
2018ம் ஆண்டு ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக நடிகர் விஷால் மாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து விஷால் அரசியல் கட்சி தொடங்கினார் என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…