
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல் விலை மிகக் குறைவாக இருப்பது போலவும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க போன்ற எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மாநிலங்கள் அளவில் பெட்ரோல் விலை நிலவரம் எப்படி உள்ளது என்று ஆங்கிலத்தில் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பா.ஜ.க ஆளும் மாநிலம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலம் என இரண்டாக பிரிக்கப்பட்டுப் பட்டியலிடப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம், ஹரியானா, அஸ்ஸாம், குஜராத் ஆகியவை இடம் பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்டியலில் தெலங்கானா, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த உண்மையை ஊடகங்கள் பேசுவது இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “பெட்ரோல் டீசல் விலை பாஜக ஆளும் மாநிலங்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒரு ஒப்பீடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை PKT BJP Friends என்ற ஃபேஸ்புக் ஐடி 2022 ஆகஸ்ட் 24ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெட்ரோல் – டீசல் விலை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. அடக்கவிலை போக, எரிபொளை கொண்டு வந்த செலவு, மாநிலத்தின் வரி என சேர்ந்து விலை மாறுபடும். எரிபொருளை லாரிகள் மூலம் எரிபொருள் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு அடிப்படையில் மாநிலத்துக்குள்ளேயே கூட விலை மாறுபடும். சென்னையில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலை விழுப்புரத்தில் இருப்பது இல்லை.
இந்த சூழலில், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லாம் மிகக் குறைவான விலைக்கு பெட்ரோலை விற்பதாகவும், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் விலை அதிகமாக இருப்பது போலவும் சிலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே இப்படி பதிவு முன்பு வைரல் ஆனது. இது தவறான தகவல் என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது சில மாநிலங்களில் ஆட்சி மாற்றம், பெட்ரோல் விலை உயர்வு போன்றவை காரணமாக மீண்டும் அந்த தகவல் தொடர்பாக தனியாக ஆய்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் என 12 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட 5 பா.ஜ.க மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 2 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. பீகார், ஜார்கண்ட், தமிழ்நாட்டில் என மற்ற மாநிலங்களில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க போன்ற கட்சிகள் ஆட்சியில் உள்ளன.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களில் பெட்ரோல் விலை சரியா என்று பார்த்தோம். அந்த தகவல் சரிதான். அதே நேரத்தில் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ள மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது என்ற தகவல் சரியா என்று பார்த்தோம். ஏற்கனவே மத்தியப் பிரதேசம், கர்நாடகத்தில் பெட்ரோல் விலை மிகவும் அதிகம் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். மீண்டும் அந்த தகவலை சரி பார்த்தோம். அப்போது மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பது தெரிந்தது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் டெல்லி மற்றும் பஞ்சாபில் பெட்ரோல் விலை குறைவாக இருப்பதும் தெரிந்தது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.65க்கு (ஆகஸ்ட் 25, 2022 நிலவரப்படி) விற்பனையாகிறது. அந்த மாநிலத்தில் அனூபூர் என்ற இடத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.44க்கு விற்பனையாகிறது.

பா.ஜ.க ஆட்சி செய்யும் மற்றொரு மாநிலமான கர்நாடகத்தில் பெங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.94க்கு விற்பனையாகிறது. குடகில் ரூ.103.38க்கும், தாவண்கரேவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.44க்கும் விற்பனையாகிறது.

பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 106.04க்கு விற்பனையாகிறது. அந்த மாநிலத்தின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.47 வரையிலும் கூட விற்பனையாவதாக தகவல் கூறுகின்றன.
ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாபில் அமிர்தசரசில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.40க்கு விற்பனையாகிறது. ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் மற்றொரு மாநிலமான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.72க்கு விற்பனையாகிறது.

ஜார்கண்ட் முக்தி மோட்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் ஜார்கண்டின் தலைநகர் ராஞ்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99.84 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அந்த மாநிலத்தில் சில பகுதிகளில் 102 ரூபாய் வரையிலும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
பீகாரில் சமீபத்தில் பாரதிய ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறினார் நிதிஷ்குமார். அங்கு பாட்னாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 108 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இப்படி பொதுவாக பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலம், எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலம் என எதிலும் வித்தியாசமில்லாமல் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகிறது. இதை மறைத்து பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் விலை குறைவு என்பது போலவும் மற்ற எதிர்க்கட்சிகள் விலையை அதிகமாக வைத்து விற்பனை செய்கின்றன என்பது போலவும் தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளது தெரிகிறது. இதன் அடிப்படையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல் விலை உயர்வாக உள்ளது என்றும் பரவும் தகவல் தவறானது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல் விலை உயர்வாக உள்ளது, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Title:பா.ஜ.க மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு… எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அதிகமா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
