
‘’குஜராத் மாநிலத்தில் தினசரி 8 மணிநேரம் மின் தடை மற்றும் தொழிற்சாலைகள் வாரத்தில் 2 நாள் இயங்க தடை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, பலரும் இந்த மீம் பதிவை உண்மை போல குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகடி செய்யும் நோக்கில் பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
மீம் வடிவில் பகிரப்பட்டுள்ள இதனை மீண்டும் கீழே இணைத்துள்ளோம்.

உண்மை அறிவோம்:
இந்தியாவில் கோடை காலம் என்பதால், நாடு முழுக்க மின் தடை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வாரந்தோறும் ஒருநாள் 8 மணிநேர மின் தடை விதிக்கப்படும் என தகவல் பரவியது.
ஆனால், இது வெறும் தகவலாகவே இருந்தது. இப்படி எந்த அறிவிப்பையும் குஜராத் மாநில அரசு வெளியிடவில்லை. சில நாட்கள் சென்ற நிலையில், மின் தடை தொடர்பான புதிய உத்தரவை குஜராத் மாநில அரசு வெளியிட்டது.
இதன்படி, ‘’குஜராத் முழுக்க தொழிற்சாலைகள் வாரத்தில் ஒருநாள் இயங்கக்கூடாது, அவர்களுக்கு அந்த நாளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அந்த மின்சாரம் விவசாயப் பணிகளுக்காக மாற்றி விநியோகிக்கப்படும்,’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி கூடுதல் உண்மை அறிய நாம் நமது குஜராத் மொழிப் பிரிவினர் உதவியை நாடினோம். அவர்கள் அம்மாநில மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு பேசி, உறுதிப்படுத்தினர். இதன்படி, ‘’வாரத்தில் ஒரு நாள் மட்டும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும். அந்நாளில் தொழிற்சாலைகள் இயங்காது. அவர்களுக்கு தரப்படும் மின்சாரம், விவசாயிகளுக்கு மாற்றி விநியோகிக்கப்படும். விவசாயத்திற்கு தரப்படும் மின்சாரத்தில் பற்றாக்குறை நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,’’ என தெரியவருகிறது.
எனவே, ‘’குஜராத் மாநிலத்தில், தினசரி 8 மணிநேரம் மின்தடை மற்றும் வாரத்தில் 2 நாள் தொழிற்சாலைகள் இயங்க தடை,’’ எனக் குறிப்பிட்டு பகிரப்படும் தகவலில் உண்மையில்லை என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
கோடை காலம் என்பதால், நாடு முழுக்க பரவலான இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. எனினும், குஜராத் மாநிலத்தை மையப்படுத்தி, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த தகவல் பகிரப்படுவதால், இதில் முழு நம்பகத்தன்மை இல்லை என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:குஜராத் மாநிலத்தில் தினசரி 8 மணிநேரம் மின் தடையா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
