ஶ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை தி.மு.க குண்டர்கள் தாக்கியதாகப் பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

ஶ்ரீரங்கம்  ரங்கநாதர் கோவில் உள்பட தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களில் நடைபெறும் முறைகேடுகளை எதிர்த்து குரல் கொடுப்பவர் ரங்கராஜன் நரசிம்மன். இவரை தி.மு.க குண்டர்கள் தாக்கினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஐயப்ப மாலை அணிந்தவர்களைப் போல உள்ளவர்கள் உள்ளிட்ட பலர் யாரோ ஒருவரைத் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தாக்கப்படுபவரின் முகம் காட்டப்படவில்லை. நிலைத் தகவலில், “தி.மு.க., அரசு, இந்துக் கோவில்களில் முறைகேடு செய்ததாக, வழக்கு தொடர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள், திருச்சி நீதிமன்ற வளாகத்தில், இன்று, தி.மு.க., ரவுடிகளால் தாக்கப்பட்டார். 

இந்துக்கள் முதுகெலும்பில்லாதவர்கள், வெட்கமற்றவர்கள், உணர்ச்சியற்றவர்கள் எந்த சார் வினையும் இருக்காது. குறைந்தபட்சம் இதை அதிகபட்சமாகப் பகிரவும், அவருடைய உயிருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்யவும். இல்லையெனில் நமக்காக முன்நின்ற இந்த நேர்மையான இந்துவுக்கு நாம் மிகப்பெரிய பாவம் செய்கிறோம். Dravida model. 200 rupees innum udha arambikkala” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை Vishaka Raj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜனவரி 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி தொடர்ந்து பேசி வருபவர் ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன். நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளைத் தொடுத்துள்ளார். இவர் தி.மு.க ஆட்சியில் மட்டுமின்றி அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலிருந்தே இப்படி வழக்கு தொடர்ந்து வருகிறார். ஆனால், தி.மு.க ஆட்சியில் முறைகேடு நடந்தது போன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அடிப்பவர்களில் பலர் கருப்பு சட்டை, வேஷ்டி அணிந்து ஐயப்ப பக்தர்கள் போல இருந்தனர். அது மட்டுமின்றி வீடியோவில் இடம் பெறும் கடைகளின் பெயர் பலகைகள் தெலுங்கு அல்லது கன்னட மொழியில் இருப்பது போல இருந்தது. இவை எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்தவே இந்த வீடியோ பதிவு பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ தெலங்கானா மாநிலத்தில் இந்து கடவுளான ஐயப்பனை அவதூறாக பேசிய நபரை ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொது மக்கள் தாக்கினர் என்று குறிப்பிட்டு தெலுங்கு செய்தி ஊடகங்கள் பகிர்ந்திருப்பது தெரிந்தது. இதன் மூலம் ஶ்ரீரங்கம் ரங்கராஜன் தாக்கப்பட்டார் என்று பரவும் வீடியோ தவறானது என்பது தெரிந்தது.

சரி, தி.மு.க குண்டர்கள் ரங்கராஜன் நரசிம்மனைத் தாக்கினார்களா என்று அறிய அது பற்றி கூகுளில் தேடினோம். அப்போது திருச்சி நீதிமன்ற வளாகத்தில் அவர் தாக்கப்பட்டது தெரிந்தது. அந்த தாக்குதல் தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் அளித்த பேட்டி விகடனில் வெளியாகி இருந்தது. அதைப் பார்த்தோம். எந்த இடத்திலும் தி.மு.க குண்டர்கள் தாக்கினார்கள் என்று அவர் கூறவில்லை. திருச்சியில் வழக்கறிஞர் இருவர் தாக்கியதாக மட்டுமே அவர் கூறியுள்ளார். இதன் மூலம் தி.மு.க-வினர் அவரை தாக்கினார்கள் என்ற செய்தியே தவறானது என்பது உறுதியானது.

Archive

ரங்கராஜன் நரசிம்மன் சமூக ஊடகங்களில் ஆக்டிவான நபர். எனவே, தன்னை தி.மு.க-வினர் தாக்கியிருந்தால் அது பற்றி அவர் பதிவிட்டிருப்பார். எனவே, அவருடைய சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அப்போது நான் தாக்கப்பட்டேனா? போலிகளை நம்பாதீர்கள் என்று அவர் யூடியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

அதில், “நான் நலமாக உள்ளேன். நான் தாக்கப்பட்டதாக வலம் வந்து கொண்டிருக்கும் (03.01.2023) செய்தி போலி. நீதிமன்ற வளாகத்தில் ஏப்ரல் 2022ல் 2 வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதைத் திரித்து இன்று திமுகவினரால் தாக்கப்பட்டதாக ஒரு பொய் செய்தியை யாரோ பரப்பிக் கொண்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவில் திருச்சியில் கடந்த ஆண்டு வழக்கறிஞர்கள் சிலர் தாக்கிய சம்பவம் உள்ளிட்ட பலவற்றையும் விரிவாகச் சொல்லியிருந்தார். தி.மு.க-வினர் தன்னை தாக்கியதாக ரங்கராஜன் நரசிம்மனே மறுப்பு தெரிவித்துள்ளதன் மூலம், சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

ஶ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை தி.மு.க குண்டர்கள் தாக்கிவிட்டார்கள் என்று பரவும் வீடியோ தெலங்கானாவைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஶ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை தி.மு.க குண்டர்கள் தாக்கியதாகப் பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False