
மொபைல் போனிலேயே டார்ச் விளக்கு வந்துவிட்ட பிறகு, பீகாரில் லாலு பிரசாத் யாதவ் கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கு இப்போது தேவையா என்று பிரதமர் மோடி கேட்டபோது மின்சாரம் தடைப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகார்ல நம்ம மோடிஜி, இங்க இவ்வளவு லைட் வெளிச்சம் இருக்கும்போது Lantern ( RJD சின்னம் ) விளக்கு எதற்குன்னு கேட்டு முடிச்சதும் கரெண்ட் போயிருக்கு 😂 லைட்காரர் எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்னு கூவிட்டு இருக்கானுங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போது, கூட்டத்திற்கு வந்தவர்களை மொபைலில் உள்ள டார்ச் விளக்கை ஆன் செய்யச் சொல்லி, அதன் பிறகு இவ்வளவு டார்ச் வெளிச்சம் உள்ள நிலையில் ராஷ்டிரிய ஜனதா கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கு இப்போது அவசியமா என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி லாந்தர் விளக்கு அவசியமா என்று கேட்டபோது மின்சாரம் தடைப்பட்டதாக வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். முதலில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரத்தில் மின்சாரம் தடைப்பட்டதா என்று அறிய, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. மோடி பேசும் போது மின்சாரம் தடைப்பட்டதாக எந்த ஒரு வீடியோவும் கிடைக்கவில்லை.
அப்படி இருக்க இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். இரண்டு வெவ்வேறு இடங்களில் மோடி பிரசாரம் செய்த காட்சியை ஒன்று சேர்த்து வதந்தி பரப்பியிருப்பது தெரியவந்தது.
முதல் காட்சி அதாவது, மொபைல் டார்ச் அடிக்கும் காட்சியானது பீகாரின் சமஸ்திபூரில் (Samastipur) எடுக்கப்பட்டது. இரண்டாவது மேடை விளக்குகளை ஆன் செய்யும்படி அறிவிப்பு வெளியாகும் காட்சி பீகாரின் பெகுசராய் (Begusarai) என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பெகுசராய் பொதுக் கூட்டத்தின் முழு வீடியோவையும் தேடிக் கண்டெடுத்துப் பார்த்தோம்.
பிரதமர் மோடி பிரசார மேடையில் அமர்ந்திருக்கிறார். அப்போது அமைச்சர் கிரிராஜ் எழுந்து செல்வது தெரிகிறது. அவர் மேடையில் உள்ள போடியத்திற்கு சென்று நிகழ்ச்சியின் விளக்குகள் ஏற்பாட்டாளர் மேடை விளக்குகளை ஆன் செய்யுங்கள் என்று கூறுகிறார். இந்த நேரத்தில் மேடையில் விளக்குகள் எதுவும் அணைக்கப்பட்டது போல் இல்லை. வீடியோவின் தொடக்கத்தில் எவ்வளவு வெளிச்சம் இருந்ததோ, அதே அளவு வெளிச்சம் அமைச்சர் விளக்குகளை ஆன் செய்யுங்கள் என்று அறிவிப்பு செய்யும் போதும் இருந்தது. மின்சாரம் தடைப்படவில்லை. அப்படி தடைப்பட்டிருந்தால் மைக், ஸ்பீக்கரும் செயல்படாமல் போயிருக்கும். இந்த அறிவிப்புக்குப் பிறகு சில அறிவிப்புகள் செய்யப்படுகிறது, சிலர் பேசுகிறார்கள். அதன் பிறகு தான் மோடி தன்னுடைய உரையைத் தொடங்குகிறார்.
இதன் மூலம் லாந்தர் விளக்கு எதற்கு என்று மோடி கூறிய போது மேடையில் மின் விளக்குகள் திடீரென்று அணைந்துவிட்டன. இதனால் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் மோடி அமர்ந்துவிட்டார் என்பது போல் பரவும் தகவல் தவறானது, வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
பீகாரில் வெவ்வேறு இடங்களில் மோடி பிரசாரம் செய்த வீடியோவை எடிட் செய்து மோடியின் பிரசார மேடையிலேயே மின்சார தடை ஏற்பட்டதாக பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:பீகாரில் “லாந்தர் விளக்கு தேவையா” என்று மோடி கேட்டபோது மின்சாரம் தடைபட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Altered


