
பீகாரில் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு லட்சக்கணக்காக மக்கள் திரண்டு வந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மிகப் பெரிய மக்கள் கூட்டத்திற்கு நடுவே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகாரில் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூடிய இலட்சக்கணக்கான மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும் பகிர்ந்தும் வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மேற்கொண்ட பிரசாரத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றார்கள் என்று வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது பீகார் சட்டமன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது தெரியவந்தது. உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி ரோட் ஷோ மேற்கொண்டபோது என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை 2024ம் ஆண்டு ஏப்ரலில் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
தொடர்ந்து தேடிய போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ 2024ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. சஹரன்பூரில் பிரியங்கா காந்தியின் ரோடு ஷோ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்டது போன்று இது 2025 பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2024ல் உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை 2025 பீகார் தேர்தல் பிரசாரத்தின் காட்சி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:பீகாரில் பிரியங்கா காந்தி பிரசாரம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


