
ராமேஸ்வரம் முதல் வட இந்தியாவில் உள்ள கேதார்நாத் வரை எட்டு முக்கிய சிவாலயங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்திய வரைபடத்தில் நேர்க்கோடு வரைந்து அவற்றில் முக்கிய சிவாலயங்கள் சிவலிங்கம் போன்று அடையாளப்படுத்திக் காட்டப்பட்டுள்ள படத்தை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. “ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் முக்கிய சிவாலயங்களின் மர்மம்..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை News18 Tamil Nadu என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 அக்டோபர் 7ம் தேதி வெளியிட்டுள்ளது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
சமூக ஊடகங்களில் பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருவதை காண முடிந்தது. சதுரகிரியார் சிவ சிவ மனோகர் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த படத்தைப் பகிர்ந்திருந்தார். நிலைத் தகவலில், “சிவ சிவ :சிவாய நம,,, ஒரே நேர் கோட்டில் உள்ள ஆலயம் .சிவ சிவ” என்று குறிப்பிட்டிருந்தார். செய்தி ஊடகம் தொடங்கி சமூக ஊடகங்கள் வரை பலரும் இந்த படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் சிவாலயங்கள் என்று நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியின் இணைப்பை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தனர். ஆனால் எந்த கோவிலும் நேர்க்கோட்டில் அமைந்தது போல இல்லை. ராமேஸ்வரம் மிகவும் உள்ளே தள்ளியும், சிதம்பரம் நடராஜர் கோவில் முதல் கேதார்நாத் கோவில் வரை முன்னும் பின்னும் நகர்ந்தும் இருப்பதைக் காண முடிந்தது. எனவே, இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வை தொடங்கினோம்.
தமிழ்நாடு வரைபடத்தைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்குச் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலும் நேர்க்கோட்டில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அப்படி இருக்கும் போது, எப்படி இங்கிருந்து கேதார்நாத் வரை ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறது என்று சொல்கிறார்கள் என்று பார்த்தோம். முதலில் கட்டுரையைப் படித்துப் பார்த்தோம்.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive
கட்டுரையில், “ராமேஸ்வரம் முதல் வட இந்தியாவில் உள்ள கேதார்நாத் வரை ஒரே நேர் கோட்டில் 8 சிவாலயங்கள் ஓரே நேர் கோட்டில் அமைந்துள்ளது மர்மம் இன்று வரை யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் கூட இப்படி துல்லியமாகக் கட்ட முடியுமா என்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவில்கள் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை. ராமேஸ்வரத்திலிருந்து கேதார்நாத் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 3,146.0 கிலோ மீட்டர் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
கட்டுரை தலைப்பு தொடங்கிப் பல இடங்களில் நேர்க்கோட்டில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டவர்கள், ஒரே ஒரு இடத்தில் ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், கோவில்களின் தீர்க்க ரேகைகளையும் வழங்கியிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: thoughtco.com I Archive
பூமியை அளவிட, பூமியில் ஒரு இடத்தை மிகத் துல்லியமாகக் குறிக்க, தூரத்தை அளவிட அட்ச ரேகை, தீர்க்க ரேகைகள் என்ற கற்பனைக் கோடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பூமியின் வரைபடத்தை உருவாக்க மனிதன் உருவாக்கிய கற்பனைக் கோடுகள் இவை. இது இயற்கையானது இல்லை, மனிதனே வகுத்துக்கொண்ட ஒன்று. ஒரு வட்டத்தை 360 டிகிரியாக பிரிக்கிறோம். அது போன்று பூமி வட்டத்தையும் வட துருவத்தில் இருந்து தென் துருவத்துக்கு என 360 டிகிரியாக பிரித்துள்ளனர். அதாவது 360 தீர்க்க ரேகைகள் உள்ளன. ஒரு தீர்க்க ரேகைக்கும் இன்னொரு தீர்க்க ரேகைக்கும் இடையேயான தூரம் என்பது அதன் தொடக்கப் புள்ளியில் பூஜ்ஜியமாக இருக்கும். செல்ல செல்ல பூமத்திய ரேகைப் பகுதிக்கு வரும் போது எல்லாம் தோராயமாக 111 கி.மீ கொண்டதாக இருக்கும்.

இந்தியாவின் குஜராத்தில் உள்ள கட்ச் தொடங்கி, அருணாச்சல பிரதேசம் வரையில் உள்ள அகலமானது 26 தீர்க்க ரேகைகளைக் கொண்டது. அதாவது, குஜராத் பகுதிகள் 70வது டிகிரி கிழக்கில் இடம் பெறுகின்றன. அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதி 96 டிகிரி கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கட்டுரையில் இடம் பெற்றுள்ள இந்த கோவில்கள் 79வது தீர்க்க ரேகை பகுதிக்குள் அமைந்துள்ளன. அதாவது 111 கி.மீ அகலம் கொண்ட தீர்க்க ரேகைக்குள் அங்கும் இங்குமாக அமைந்துள்ளன. இந்த 111 கி.மீ தூரத்துக்குள் வடக்கில் இருந்து தெற்காக பார்த்தால் ஏராளமான கோவில்கள் இருக்கும்.

இந்த 111 கி.மீ தூரம் கொண்ட 79வது தீர்க்க ரேகை நீளத்தை 1ல் இருந்து 10 ஆக பிரிக்கலாம். 79.0வில் கேதார்நாத் கோவில் உள்ளது. 79.1வது பகுதியில் காலேஷ்வரம் கோவில் உள்ளது. திருவண்ணாமலை 79.0 பகுதியிலும் காளஹஸ்தி, காஞ்சிபுரம், சிதம்பரம் கோவில்கள் 79.6க்குள்ளும் அமைந்துள்ளன. அதாவது கேதார்நாத் கோவில் இருந்து கீழே நேராக ஒரு நேர்க்கோடு வரைந்தால் அதில் இருந்து தோராயமாக 66 கி.மீ தள்ளித்தான் சிதம்பரம் நடராஜர் கோவில் இருக்கும். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் 79வது தீர்க்க ரேகைக்குள்ளேயே இல்லை. அது 78வது தீர்க்க ரேகை பகுதிக்குள் உள்ளது.

இந்த கோவில்கள் ஒரே தீர்க்க ரேகைக்குள் உள்ளன என்பது உண்மை. ஆனால், தீர்க்க ரேகை என்றால் என்ன என்ற புரிதலே இல்லாமல், சிவபெருமான் ஆலயங்கள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன என்று தவறாகப் புரிந்துகொண்டு பகிர்ந்திருப்பது தெரிகிறது. இதன் அடிப்படையில் ஒரே நேர்க்கோட்டில் சிவபெருமானின் முக்கிய கோவில்கள் அமைந்துள்ளன என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
சிவ பெருமான் இருக்கும் இடம் என்று கூறப்படுவது கைலாச மலை. அது 79வது தீர்க்க ரேகைக்குள் இல்லை. முக்கிய சிவ தலங்களை 12 ஜோதிர்லிங்க கோயில்கள் என்று குறிப்பிடுவார்கள். அவற்றில் ஒன்றிரண்டு தவிர மற்ற எதுவும் 79வது தீர்க்க ரேகைக்குள் அமையவில்லை. பஞ்சபூத ஸ்தலங்களில் திருவானைக்காவல் 78வது தீர்க்க ரேகைக்குள் உள்ளது. இப்படி முக்கிய கோவில்கள் எல்லாம் இந்தியா முழுக்க பரந்து காணப்படுகிறது.
79வது தீர்க்க ரேகை என்பது பற்றிய புரிதல் இன்றி, தீர்க்க ரேகை என்ற கற்பனைக் கோடு நேராக இருக்கும் மெல்லிய கோடு என்பது போன்று புரிந்து கொண்டு சிவபெருமானின் முக்கிய கோவில்கள் எல்லாம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் சிவ பெருமானின் தலங்கள் நேர்க்கோட்டில் இருக்கிறது என்று கூறப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கேதார்நாத் முதல் ராமேஸ்வரம் வரை முக்கிய சிவதலங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை ஒரே நேர்க்கோட்டில் சிவாலயங்கள் அமைந்துள்ளனவா?
Fact Check By: Chendur PandianResult: False
