மத்திய அமைச்சர் ஒருவருக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ரூ.5000 கோடியை வெளிநாட்டில் முதலீடு செய்யச் சென்றுள்ளார் என்று ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஜூனியர் விகடன் இதழின் ஒரு பகுதியை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளனர். கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என்று பெட்டி செய்தியாக உள்ளது. அதில், "மத்திய அமைச்சரவையின் ஒரு முக்கிய புள்ளிக்காக சுமார் 5000 கோடியை அமெரிக்காவில் முதலீடு செய்யும் அசைன்மெண்ட் அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெருந்தொகையை தம்மை நம்பி ஒப்படைத்திருக்கிறார்களே என்று அண்ணாமலையும் தனக்கு நம்பிக்கையான டீமுடன் குஷியாகக் கிளம்பிவிட்டார்" என்று இருந்தது.

ஈரோடு இளங்கவி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 4ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அண்ணாமலை ரூ.5000 கோடியைக் கடத்திக்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார் என்று ஜூனியர் விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பரவியது. அது தொடர்பாக ஆய்வு செய்த போது, அதை நாங்கள் வெளியிடவில்லை என்று விகடன் தரப்பில் நம்மிடம் தெரிவித்தனர்.

தற்போது, ரூ.5000 கோடி விவகாரம் தொடர்பாக ஜூனியர் விகடனில் எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை வெளியானதாக புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது போல இருந்தது. ஏற்கனவே, ரூ.5000ம் கோடி தொடர்பாக அட்டைப்படம் வெளியாகவில்லை என்று உறுதி செய்திருந்த நிலையில் இந்த செய்தி சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, ஆய்வு செய்தோம்.

முதலில் 05-10-2022 தேதியிட்ட ஜூனியர் விகடனை வாங்கிப் பார்த்தோம். அதில் 3ம் பக்கத்தில் கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என்று எந்த பதிவும் இல்லை. எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் செல்லும் புகைப்படம் மட்டும்தான் இருந்தது. உள்ளே வேறு எங்காவது இது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

எனவே, ஜூனியர் விகடன் சமூக ஊடக பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது உண்மையானது இல்லை, போலியாக உருவாக்கி, ஜூனியர் விகடனில் வெளியானது போல பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அண்ணாமலை ரூ.5000 கோடியை அமெரிக்காவுக்கு கடத்தினார் என்று பரவும் ஜூனியர் விகடன் கட்டுரை உண்மையானது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:RAPID FACT CHECK: அண்ணாமலை ரூ. 5000 கோடி விவகாரம்; கழுகார் எக்ஸ்க்ளூசிவ் என பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False