பிற மாநிலங்களில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வாபஸ் பெற்ற இ.பி.எஸ்! – நியூஸ்7 செய்தி உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

பிற மாநிலங்களில் தமிழை பயிற்று மொழியாக்குமாறு பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கோரிக்கை விடுத்தார். வேறு விதமான சந்தேகங்களை அந்த ட்வீட் கிளப்பியதால், அதை டெலீட் செய்துவிட்டார். இதைத் தொடர்ந்து, தன்னுடைய கருத்தை முதலமைச்சர் வாபஸ் பெற்றார் என்று ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வெளியாகி உள்ளது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link 1

Archived link 2

பிற மாநிலங்களில் தமிழை பயிற்று மொழியாக்குமாறு விடுத்த கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றார். இந்திக்கு ஆதரவு தெரிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதை அடுத்து, சில மணிநேரங்களிலேயே ட்வீட் பதிவு திடீர் நீக்கம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

குவைத் தமிழ் முரசு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூன் 5ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு ஆதாரமாக ஒரு பிட்லி லிங்கை கொடுத்திருந்தனர். அதை ஓப்பன் செய்து பார்த்தால், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் இணைய பக்கத்துக்கு சென்றது. அதிலும், “கோரிக்கையை வாபஸ் பெற்றார் இ.பி.எஸ்” என்று இருந்தது.

உண்மை அறிவோம்:

2019 ஜூலை 5ம் தேதி, எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து ஒரு பதிவு வெளியிடப்பட்டு இருந்தது.

அதில், “பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழை சேர்க்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உலகின் மிகவும் பழமையான மொழிக்கு செய்யும் மிகச் சிறந்த சேவையாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

EPS 2.png

பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாகத் தமிழை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது.

மும்மொழிக் கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். அடிமை சாசனத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என்று தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்திருந்தார். தமிழைக் கொடுத்து, இந்திக்கு வாசல் திறக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த ட்வீட்க்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து அந்த ட்வீட் அகற்றப்பட்டது.

எல்லா ஊடகங்களிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ட்வீட் பதிவை நீக்கினார் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், நியூஸ்7 வெளியிட்ட செய்தியில், தன்னுடைய கோரிக்கையை வாபஸ் பெற்றார் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளனர். தலைப்பில்தான் பிரச்னையா என்று பார்த்தால், செய்தியிலும் அதே விஷயத்தை சொல்லியுள்ளனர்.

EPS 3.png
EPS 4.png

ட்விட்டரில் வெளியட்ட தன்னுடைய கோரிக்கையை அல்லது கருத்தை முதலமைச்சர் பழனிசாமி வாபஸ் பெற்றார் என்று எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. “முதலமைச்சரின் கருத்து சரியானதுதான்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே ட்வீட் அழிக்கப்பட்டது” என்று தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களின் கோரிக்கையை ஏற்று, பிற மாநிலங்களிலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அந்த ட்வீட்டை வெளியிட்டார். ஆனால் அது அரசியல் ஆக்கப்பட்டது. இந்தி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அந்த ட்வீட் அழிக்கப்பட்டது” என்றார். இது தொடர்பான வீடியோ கீழே…

ட்வீட்டை அழித்துவிட்டதன் மூலம் அந்த கருத்தை முதலமைச்சர் வாபஸ் பெற்றுக்கொண்டதாக  நியூஸ்7-ல் வெளியான செய்தி உண்மையா என்று அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புகொண்டு கேட்டோம். “இந்த விவகாரம் தொடர்பாக முழு விளக்கம் அளித்துள்ளேன். அரசியல் காரணங்களுக்காக பிரச்னையாக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. மற்றபடி, கருத்தை வாபஸ் பெற்றார் என்பது சரியான தகவல் இல்லை” என்றார்.

அனைத்துக்கும் மேலாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளார். ஜூன் 6ம் தேதி, கோவை விமானநிலையத்தில் நிருபர்களை சந்தித்தார் அவர், “பிற மாநிலங்களில் உள்ள தமிழர்களின் கோரிக்கையை ஏற்று தான் ட்விட்டரில் பதிவு செய்திருந்தேன். அவர்களின் கோரிக்கை ஆதரவு தெரிவிக்கும் வகையில் தான் அப்படி ஒரு ட்வீட்டை நான் பதிவிட்டு இருந்தேன். ஆனால் அது சர்ச்சையை கிளப்பியதால் நீக்கிவிட்டேன். தமிழ் பிற மாநிலத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று தான் ட்விட்டரில் பதிவிட்டேன். ஆனால் அதை மும்மொழிக் கொள்கையை தான் ஆதரிப்பதாக அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல்களை பரப்புகின்றனர். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையில் தான் இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது” எனக் கூறினார். இது தொடர்பான வீடியோ கீழே…

நாம் மேற்கொண்ட ஆய்வில், அரசியல் காரணங்களுக்காக சர்ச்சை கிளம்பியதால் ட்வீட் நீக்கப்பட்டது என்று முதல்வரே விளக்கம் அளித்துள்ளார். தான் தெரிவித்த கருத்து சரியானதுதான் என்று விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய கருத்தை வாபஸ் பெறுகிறேன் என்று எந்த ஒரு இடத்திலும் முதலமைச்சர் தெரிவிக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ட்வீட் நீக்கப்பட்டதும், முதல்வர் தன்னுடைய கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதா தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து செய்தியை வெளியிட்டுள்ளது நியூஸ்7. அதை கவனிக்காமல் குவைத் தமிழ் முரசு அப்படியே எடுத்து பகிர்ந்துள்ளது.

ட்விட் பதிவை அழித்துவிட்டதாலேயே ஒருவர் தன்னுடைய கருத்தை வாபஸ் பெற்றார் என்று சொல்ல முடியாது. தன்னுடைய ட்வீட் கருத்தை வாபஸ் பெறுவதாக முதல்வர் கூறாத நிலையில், வாபஸ் பெறும் நோக்கில் அந்த ட்வீட் அழிக்கப்பட்டது என்று அமைச்சர்கள், அ.திமு.க நிர்வாகிகள் யாரும் அறிவிக்காத நிலையில், நியூஸ்7 வெளியிட்ட செய்தி தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பிற மாநிலங்களில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வாபஸ் பெற்ற இ.பி.எஸ்! – நியூஸ்7 செய்தி உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False