
‘’புனித வெள்ளியன்று, நியூசிலாந்தில் மட்டுமே மலரும் சிலுவைப் பூ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படம் பற்றிய தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மரம் ஒன்றில், சிலுவை போல நிறைய இருப்பதாக, ஒரு புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்று கூறி, வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டார்.
இதன்பேரில் நாமும் ஃபேஸ்புக்கில் பார்வையிட்டபோது, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படம் பற்றி நாம் கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுபோல, எந்த மரமும் இல்லை என்று தெரியவந்தது.
அதேசமயம், பைன் மரங்களில் இதுபோன்ற தண்டு வளர்ச்சி ஈஸ்டர் பண்டிகை வரும் காலத்தில் (Spring season) நடைபெறுகிறது.

இதுபற்றி கூடுதல் ஆய்விற்காக, கேரளாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக் கலைத்துறை பேராசிரியராக பணிபுரியும் டாக்டர்.ஆன்சி ஜோசப் (http://amprs.kau.in/people/dr-ancy-joseph) அவர்களை நமது மலையாளம் பிரிவினரின் உதவியுடன் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.
அவர், ‘’பைன் மரங்களில் இதுபோன்ற தண்டு வளர்ச்சி மஞ்சள் நிறத்தில் வழக்கமாக, ஈஸ்டர் பண்டிகை வருவதற்குச் சில நாட்கள் முன்னதாக ஏற்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகைகள் வரும் காலக்கட்டம், வசந்த காலமாக (மார்ச் முதல் ஜூன் வரை) உள்ளது. எனவே, சிலர் பைன் மரங்களின் இந்த வளர்ச்சியை புனித வெள்ளி, ஈஸ்டருடன் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். இந்த வகை பைன் மரங்கள், அமெரிக்க கண்டத்தில் பரவலாகக் காணப்படுகிறது,’’ என்றார்.
இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் காணப்படும் Loblolly pines வகையும், மெக்சிகோ, கனடா, ஹோண்டுராஸ் போன்ற western hemisphere எனப்படும் பூமியின் மேற்கு அரைகோள நாடுகளில் காணப்படும் Ponderosa Pine வகையும் இதுபோன்ற சிலுவை தண்டு வளர்ச்சியை கொண்டிருப்பதாக, விவரம் கிடைத்தது.

ஆனால், புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை வருவதற்கும், இந்த பைன் மரங்களில் ஏற்படும் வளர்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூட , ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டுள்ளனர்.
அதேசமயம், பைன் மரங்களைத்தான் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அலங்கார மரமாக பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்துவார்கள். ஆனால், அது வேறு கதை.
இதற்கடுத்தப்படியாக, நியூசிலாந்தில் இப்படி ஏதேனும் மரத்தில் சிலுவைப்பூ பூக்கிறதா என்று தகவல் தேடினால், அவ்வாறு எதுவும் காணக் கிடைக்கவில்லை. ஏனெனில், பைன் மரங்கள் பொதுவாக, Western Hemisphere நாடுகளில் வளரக்கூடியது என்பதால், தென் அரைக்கோளத்தில் அமைந்துள்ள நியூசிலாந்தில் வளர வாய்ப்பில்லை. ஆனால், அந்நாட்டில் மரப் பொருட்கள் தேவைக்காக அமெரிக்காவில் இருந்து, பைன் மரத்தை கொண்டு சென்று, அங்கே பயிரிட்டுள்ளனர். அப்படியாகத்தான் சமீப காலமாக, நியூசிலாந்திற்கு பைன் மர பயன்பாடு பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்று தெரியவந்தது.

Teara.govt.nz/en/radiata-pine Link
இதேபோல, நியூசிலாந்தை மையமாக வைத்து, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பூக்கும் இயேசுவின் ரத்தம் என்று கூறியும் ஒரு தகவலை சிலர் பரப்பி வருகின்றனர்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) நியூசிலாந்தில் சிலுவைப் பூ பூக்கும் மரங்கள் என்று பகிரப்படும் தகவல் நம்பகமானது இல்லை.
2) சிலுவைப் பூ என்பது பைன் மரங்களில் வசந்த காலத்தில் ஏற்படும் தண்டு வளர்ச்சியாகும். இதனைச் சிலர் புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகைகளுடன் தொடர்புபடுத்துகிறார்கள். இந்த பைன் மரங்கள் பொதுவாக, பூமியின் வட அரைகோள நாடுகளில் (அமெரிக்கா, ஐரோப்பா) வளரக்கூடியதாகும். நியூசிலாந்தில் இதனை இறக்குமதி செய்து பயிரிட்டுள்ளனர். தற்போது அங்கும் பைன் மரங்கள் சாதாரணமாகிவிட்டன.
3) பைன் மரங்களில் ஏற்படும் அந்த தண்டு வளர்ச்சி சிலுவை போலவே சிலநேரங்களில் இருக்கிறது. எனினும், அது அறிவியல் ரீதியான காரணமே தவிர, கிறிஸ்தவ பண்டிகைகளுடன் தொடர்புடையது அல்ல.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நியூசிலாந்தில் புனித வெள்ளி நாளில் மலரும் சிலுவைப்பூ?- உண்மை அறிவோம்!
Fact Check By: Pankaj IyerResult: Explainer
