“ஈரான் தாக்குதலுக்கு பூமியை சபித்து தாக்கும் இஸ்ரேலியர்கள்” என பரவும் வீடியோ உண்மையா?

Communal False சர்வதேசம் | International

ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் அழிக்கப்பட்டு வருவதால் கோபம் கொண்ட இஸ்ரேல் யூதர்கள் பூமியை மந்திரங்கள் ஜெபித்து அடித்து வருவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

யூதர்கள் மரத்தின் கிளைகள், இளைகளை தரையில் ஓங்கி அடித்து வழிபாடு செய்யும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பூமியை அடிக்கும் இஸ்ரேலியர்கள்…!! இஸ்ரேல் ஈரானால் பலமாக அழிக்கப்பட்டுக் கொண்டுள்ளது..!! தமது பூமிப் பந்தானது இஸ்ரேலுக்கு துரோகம் இழைக்கிறதாம்..!! எனவே யூதர்கள் மந்திரங்கள் ஜெபித்து பூமியை கண்டிக்கிறார்களாம்..!! டெல்அவிவ் முக்கால்வாசி அழிந்து விட்டது..!! அரபுலகம் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் யூத முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது…!! அனைத்தையும் இழந்ததால் ஒரு வித மன நோய்க்கு அதிக இஸ்ரேலியர் ஆளாகியுள்ளனர்..!!

மூடத்தனத்தை மொத்தமாக குத்தகை எடுத்தவர்கள் யூதர்கள். ஆனால் தாங்கள்தான் உலக மகா அறிவாளி என்று கூறிக் கொள்வார்கள் நம் ஊர் பிராமணர்களைப் போல.. மறு புறம் அமெரிக்கா ஐனாதிபதி உலகில் உள்ள பிரபல்யமான நூற்றுக்கனக்கான பாதர்களை கூப்பிட்டு தான் ஈரான் போரில் வெற்றி பெற வேண்டும் என்று ஜெபிக்கிறார்.  

கள்ள தோணியில வெளிநாடு தப்பி ஓடி அமெரிக்கா இஸ்ரேலுக்கு முட்டு கொடுக்கும் ஈழ தமிழர்களே இன்னுமா கனவு காணுறிங்கள் ஈரான் போரில் அமெரிக்கா இஸ்ரேல் வெற்றி பெறும் என்று?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத இஸ்ரேலியர்கள் இந்த பாதிப்பு காரணம் பூமி தான் என்று குற்றம்சாட்டி பூமியை திட்டி, மந்திரங்கள் ஜெபித்து, இலைகளால் அடித்து வருகிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பூமியே இஸ்ரேலுக்கு எதிராக துரோகம் செய்துவிட்டது என்று இஸ்ரேலியர்கள் கருதி இந்த செயலை செய்துள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது. இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. வீடியோவில் உள்ளவர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளனர். எனவே, இது கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம். வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். ஆனால், இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்று நம்மால் கண்டறிய முடியவில்லை.

அதே நேரத்தில் யூதர்கள் பாரம்பரியமாக கொண்டாடி வரும் சுக்கோட் (Sukkot) என்ற விழாவின் கடைசி நாளான ஹோஷனா ரப்பாவின் (Hoshana Rabba) போது பாவத்தைப் போக்கும் வகையில் வில்லோ (willow) என்ற மரக்கிளை ஐந்தை எடுத்து இப்படி தரையில் அடிப்பது வழக்கம் என்று வீடியோக்கள், செய்திகள் நமக்குக் கிடைத்தன. 

இந்த விழாவை ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு தெளிவான காரணங்கள் இல்லை என்று சில கட்டுரைகள் கூறுகின்றன. இருப்பினும் பாரம்பரியமாக இது கொண்டாடப்பட்டு வருவதால் இன்றும் அதைத் தொடர்ந்து செய்து வருவதாக யூத மதகுருக்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு காலத்தில் மழை பெய்யும் சடங்குடன் தொடர்புடையதாக இருந்திருக்கலாம். ஜெருசலேமில் இருந்த யூதர்களின் ஆலயம் அழிக்கப்பட்டதை நினைவுகூர இதைச் செய்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். பாவம் செய்தவர்கள் தங்களை சரிசெய்ய இது தூண்டுவதாக மற்றொரு கருத்தும் உள்ளது.

உண்மைப் பதிவைக் காண: kipa.co.il I Archive

இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா அக்டோபர் (சில நேரங்களில் செப்டம்பர்) மாதத்தில் வரும் என்றும், இதை உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் கொண்டாடி வருவதாகவும் செய்திகள் நமக்கு கிடைத்தன. இதன் மூலம் யூதர்கள் காலகாலமாக கொண்டாடி வரும் அவர்களது பண்டிகை நாளை, ஈரான் தாக்குதல் காரணமாக பூமியை சபித்து, அதை மரக் கிளைகளால் தாக்கிய யூதர்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

யூதர்கள் பாரம்பரியமாக கொண்டாடும் ஹோஷனா ரப்பா என்ற பண்டிகையில் மேற்கொள்ளப்படும் வில்லோ மரக் கிளைகளை தரையில் அடிக்கும் சடங்கை ஈரான் போருடன் தொடர்புபடுத்தி தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: “ஈரான் தாக்குதலுக்கு பூமியை சபித்து தாக்கும் இஸ்ரேலியர்கள்” என பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply