ஐதராபாத்தில் ரயிலின் பெயர் மாற்றி அடாவடி செய்த இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

ஐதராபாத்தில் இருந்து மேற்கு வங்கம் சென்ற ரயிலை முஸ்லிம் ரயில் என்று பெயர் மாற்றி இஸ்லாமியர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ரயில் இன்ஜினின் முன்புறம் மசூதி போன்று அலங்காரம் செய்யப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், பெயர்தான் அமைதி மார்க்கம். ஐதிராபாத்தில் ரயிலையே அடாவடியா முஸ்லிம் ரயில்னு பெயர் மாத்துறாங்க. சேருமிடம் மேற்கு வங்கம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை தங்கவேல் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ரயிலின் பெயரை மாற்றி இஸ்லாமியர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பார்க்க திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது போல உள்ளது. அடாவடித்தனம் செய்தால் ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே போலீசார் அதை அகற்றியிருப்பார்கள். மிகப்பெரிய வன்முறையே நடந்திருக்கும். ஆனால், வீடியோவில் அப்படி ஏதும் காட்சி இல்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தவே இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, ஐதராபாத்தில் விடப்பட்ட சிறப்பு ரயில் இது என்று குறிப்பிட்டு வெளியான வீடியோக்கள் செய்திகள் நமக்கு கிடைத்தன.

46வது உர்ஸ்-இ-காதீர் ஹஸ்ரத் க்வாஜா சையத் முகமது பாத்ஷா க்வாத்ரி சிஷ்டி யமானி காதிர் ஹல்கட்டா ஷரீஃப் (46 URS-E-QUADEER HAZRAT KHWAJA SYED MOHAMMED BADSHAH QUADRI CHISHTI YAMANI QUADEER HALKATTA SHAREEF) என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டிருந்த யூடியூப் வீடியோவில் இந்த ரயில் இடம் பெற்றிருந்தது. ரயில் முழுக்க இஸ்லாமியர்களாக உள்ளனர். ரயிலில் இஸ்லாமியர்களின் புனித பொருள் கொண்டு வரப்படுகிறது. பின்னர் இஸ்லாமிய மத குருக்கள் மற்றும் பலர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறுகின்றனர்.

இது என்ன நிகழ்வு என்று தேடிப் பார்த்தோம். அப்போது, தென் மத்திய ரயில்வே வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பு ஒன்று கிடைத்தது. அதில், 46வது உர்ஸ் இ ஷெரீப் விழாவையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது என்ன விழா என்று தேடிய போது, சையத் முகமது பாட்ஷா காத்ரி-உல்-சிஷ்டி யமானி ரைச்சூரி என்பவர் இஸ்லாமிய சூஃபி துறவி என்றும் அவரது நினைவைக் கொண்டாடும் விழா என்றும் தெரிந்தது.மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக இப்படி சிறப்பு ரயில் இயக்கப்படுவதும், அந்த ரயில்களில் இஸ்லாமியப் பேனர்கள் கட்டப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: indianrailways.gov.in I Archive

இஸ்லாமிய விழாவையொட்டி இந்திய ரயில்வே இயக்கிய சிறப்பு ரயிலின் அலங்காரத்தைத் தவறாகச் சித்தரித்து, வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஐதராபாத்தில் இஸ்லாமிய விழாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலின் வீடியோவை இஸ்லாமியர்களின் அடாவடி என்று தவறாக பகிர்ந்திருப்பதை  தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஐதராபாத்தில் ரயிலின் பெயர் மாற்றி அடாவடி செய்த இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False