EXPLAINER: ரேஷன் கடைகளில் இனி அரிசி, கோதுமை கிடையாதா?- முழு விவரம் இதோ!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’ரேஷன் கடைகளில் இனி அரிசி, கோதுமை கிடையாது என மத்திய அரசு அறிவிப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, இலவச ரேஷன் கிடையாதா அல்லது இனி ஒட்டுமொத்தமாகவே ரேஷன் கிடையாதா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவிய காரணத்தால், உலக அளவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதையொட்டி, இந்தியாவில், ரேஷன் அட்டை வைத்திருக்கும் சுமார் 80 கோடிக்கும் மேலான மக்களுக்கு பயனளிக்கும் வகையில், Pradhan Mantri Garib Kalyan Package (PMGKP) என்ற பெயரில், ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு, தானியங்கள் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதலில், 2020 ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு மட்டுமே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக, தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் 2020 ஆண்டு முழுவதுமே தொடர்ந்த நிலையில், இந்த சலுகை திட்டத்தை 2020 நவம்பர் மாதம் வரை நீட்டிப்பதாக, மத்திய அரசு கூறியிருந்தது. பின்னர், படிப்படியாக, நீட்டித்து, தற்போது 2021 நவம்பர் வரை அமல்படுத்தியுள்ளது.

india.gov.in link

இந்த திட்டத்தையே ‘’இனி நீட்டிக்க முடியாது; நாட்டில் இயல்பு நிலை படிப்படியாக திரும்ப தொடங்கியுள்ளதால், நவம்பர் 30, 2021 உடன் நிறுத்தப் போவதாக,’’ மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

business standard link

அதேசமயம், ரேஷனில் ஏற்கனவே வழங்கப்படும் மானிய விலையிலான உணவுப் பொருள் விநியோகம் உள்ளிட்ட மற்ற பொருட்கள் விநியோகம் வழக்கம் போலவே தொடரும்.

இதனைப் பலரும் தவறாகப் புரிந்துகொண்டு, ஒட்டுமொத்தமாக ரேஷனில் உணவுப் பொருள் விநியோகமே நடக்காது என, தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

இதுபற்றி நாம் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.

‘’உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, இந்தியா முழுக்க, ரேஷன் திட்டத்தின் கீழ், நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் இதர பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இது இன்றளவும் தமிழ்நாட்டில் நடைமுறையில்தான் உள்ளது. அதேபோல, வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் மக்களுக்கும் ரேஷன் சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் நோக்கில், இலவசமாக, நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் தானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு Pradhan Mantri Garib Kalyan Package என்று பெயர். அந்த திட்டத்தையே தற்போது நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது,’’ என்று கூறினர்.

nfsa.gov.in link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ரேஷன் கடைகளில் இனி அரிசி, கோதுமை கிடையாதா?- முழு விவரம் இதோ!

By: Pankaj Iyer 

Result: Explainer