
‘‘சென்னையில் வட மாநில இளைஞர் குடும்பத்துடன் கொல்லப்பட்டதற்கு தமிழர்கள் காரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ தமிழகத்தை நம்பி பிழைக்க வந்த ஒரு குடும்பத்தை, திமுகவின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு இன்று காவு வாங்கியுள்ளது!
சென்னை அடையாறில் 24 வயது பீகார் இளைஞரின் சடலம் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பின்னணியில் வெளிவந்துள்ள தகவல்கள் நெஞ்சை பதறவைக்கின்றன. அந்த இளைஞரின் மனைவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவரையும், அவர்களது குழந்தையையும் கொடூரமாகக் கொன்று குப்பைக்கிடங்கில் வீசியுள்ளனர். ஒரு குடும்பமே சிதைக்கப்பட்டுவிட்டது!
தொடர் கொலை, கற்பழிப்பு, வழிப்பறி எனத் தலைநகர் சென்னையே ரத்த பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது. கோயம்புத்தூர், திருத்தணி, திருவாரூர் வரிசையில் இப்போது சென்னை. வடமாநிலத்தவர் மீது திமுக பரப்பிய வெறுப்புப் பிரச்சாரத்தின் ரத்த சாட்சியே இந்த மரணங்கள்.
பிழைக்க வந்தவர்களைப் பாதுகாக்கத் தவறியது மட்டுமின்றி, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளது இந்த விடியா அரசு. முதலமைச்சர் திரு.M. K. Stalin அவர்களே, இதுதான் உங்கள் ஆட்சியின் பாதுகாப்பு லட்சணமா?’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. குறிப்பாக, பாஜக இளைஞரணி தலைவர் SG Suryah இதே தகவலை பகிர்ந்துள்ளார்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, சென்னையை உலுக்கிய வட இந்திய இளைஞர் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர்களுக்கும் திமுக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தெரியவந்தது.
இதன்படி, கொல்லப்பட்ட நபர், அவரது குடும்பம் மற்றும் குற்றவாளிகள் என யாருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கிடையாது. சென்னைக்கு வேலை தேடி வந்த இவர்கள், ஒன்றாக தங்கியுள்ளனர். பின்னர் இவர்களுக்கு வெவ்வேறு வேலை கிடைத்த சூழலில், இதில் கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை சக நண்பர்களே கொடூரமாகக் கொன்றுள்ளனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, தகுந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Dailythanthi l Kumudam News l Thanthi TV
இதன்மூலமாக, குற்றவாளிகள் யாருமே தமிழர் இல்லை என்ற சூழலில், கொலைக்கான காரணமும் வேறாக உள்ள நிலையில், வேண்டுமென்றே தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் திமுக அரசை இதில் தொடர்புபடுத்துகின்றனர்.

கூடுதல் ஆதாரத்திற்காக, தமிழ்நாடு போலீஸ் (சட்டம், ஒழுங்கு) தரப்பிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:சென்னையில் வட மாநில இளைஞர் குடும்பத்துடன் கொல்லப்பட்டதற்கு திமுக காரணமா?
Fact Check By: Pankaj IyerResult: Missing Context


