
முக்குலத்தோர், நாயுடு உள்ளிட்ட சாதியினர் வாக்கு தனக்கு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க தலைமை ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியதாக நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய நியூஸ் கார்டில், “முக்குலத்தோர், நாயுடு, பிள்ளைமார், செட்டியார், கவுண்டர் ஓட்டு எனக்கு தேவையில்லை! அவர்கள் ஓட்டு இல்லாமலும் என்னால் வெற்றி பெற முடியும். – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை ஜெய.ரூபபாண்டி ரூப என்பவர் 2021 ஏப்ரல் 5ம் தேதி பதிவிட்டுள்ளார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டில், “முக்குலத்தோர், நாயுடு, பிள்ளைமார், செட்டியார் ஒட்டு எனக்குத் தேவையில்லை! அவர்கள் ஒட்டு இல்லாமலும் என்னால் வெற்றி பெற முடியும்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை AutoRaja AutoRaja என்பவர் 2021 ஏப்ரல் 5ம் தேதி பதிவிட்டிருந்தார்.
இந்த நியூஸ் அட்டைகளைப் பலரும் தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது.
உண்மை அறிவோம்:
எந்த ஒரு அரசியல்வாதியும் குறிப்பிட்ட சாதியினர் வாக்கு தனக்கு வேண்டாம் என்று கூற மாட்டார்கள். அதுவும் தேர்தல் நேரத்தில் இத்தனை சாதியினர் வாக்கு வேண்டாம் என்று யாரும் கூறமாட்டார்கள். மக்கள் மனதில் சாதி உணர்வைத் தூண்டி அதன் அடிப்படையில் வாக்குகளை பெற, வாக்கு விடுவதைத் தடுக்க இது போன்ற முயற்சிகளை சில சமூக விரோதிகள் செய்து வருகின்றனர்.

குறிப்பிட்ட பல சாதியினர் வாக்குகள் வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், ராஜேந்திர பாலாஜி என பலரும் கூறியதாக ஒரே நியூஸ் கார்டை எடிட் செய்து ஆளாளுக்கு சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நியூஸ் கார்டில் எது முதலில் வந்தது என்ற ஆய்வுக்குள் செல்லவில்லை. இது உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான சான்றுகளை தேடினோம்.
ஏப்ரல் 4, 2021 என்று இந்த நியூஸ் கார்டில் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏப்ரல் 4 அன்று வெளியான புதிய தலைமுறை நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தோம். ஆனால் மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ் படத்துடன் பகிர்வது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
2021 ஏப்ரல் 4ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்ட சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் படத்துடன் கூடிய நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ் படத்தை வைத்து போலியாக நியூஸ் கார்டு தயாரித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது. இதை உறுதி செய்ய புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு பேசினோம். அவரும் இவை இரண்டுமே போலியானதுதான் என்றார். இதன் அடிப்படையில் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் பெயரில் பரவி வரும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
முக்குலத்தோர், செட்டியார் உள்ளிட்ட சாதியினர் வாக்குகள் தங்களுக்கு வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் பெயரால் பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:குறிப்பிட்ட சாதியினர் வாக்கு வேண்டாம் என்று ஸ்டாலின், ஓ.பி.எஸ் கூறியதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
