
‘’ஜெயக்குமாரின் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

மேற்கண்ட ட்விட்டர் பதிவில், பாலிமர் டிவி லோகோவுடன் ஒரு டிவியின் ஸ்கிரின்ஷாட்டை எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஜெயக்குமாரின் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம், திமுக பற்றி தவறான குற்றச்சாட்டுகள் வைத்து கடிதம் எழுதியதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருவதால், வாசகர்கள் சிலர் தொடர்ச்சியாக, +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு தகவல் அனுப்பி வந்தனர்.
இதையடுத்து நாமும் உண்மை கண்டறியும் முயற்சியில் இறங்கினோம்.
உண்மை அறிவோம்:
முதலில் குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று பார்த்தால், அதில் உள்ள ஃபாண்ட் இது பாலிமர் டிவியில் வந்ததா என்பதை விட, யாரேனும் எடிட் செய்து இப்படி தகவல் உருவாக்கியிருக்கலாமோ என்ற சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

எனவே, இதன்பேரில், நாம் பாலிமர் டிவியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி அருணை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ‘’இப்படி எந்த செய்தியையும் பாலிமர் தொலைக்காட்சி வெளியிடவில்லை. இது எங்களது பெயரில் பகிரப்படும் போலிச் செய்தி,’’ என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஜெயக்குமார் எங்கே போட்டியிடுகிறார், அவரது வேட்புமனு பற்றி அண்மையில் வெளிவந்த செய்திகள் என்னென்ன என்ற விவரம் எல்லாம் சேகரித்தோம்.
இதன்படி, சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஜெயக்குமாரின் வேட்புமனு ஏற்கப்பட்டு, திட்டமிட்டபடி அந்த தொகுதியில் வாக்குப் பதிவும் கடந்த ஏப்ரல் 6, 2021 அன்று நடைபெற்றுள்ளது.
இது மட்டுமன்றி வாக்குப் பதிவு நாளன்று, அவர் வாக்கை செலுத்திவிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், சாப்பிட்டுவிட்டும் சென்றிருக்கிறார்.
எனவே, நடைபெறாத ஒரு நிகழ்வை உண்மை போல பகிர்ந்து, குறிப்பிட்ட ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மக்களை குழப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

குறிப்பிட்ட ட்விட்டர் ஐடி, சசிகலா பெயரில் இயங்கும் போலியான ஒன்றாகும். இதில் இருந்து தொடர்ச்சியாக, வதந்திகள் பகிரப்படுவதை சுட்டிக்காட்டி ஏற்கனவே நாம் செய்தியும் வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
