
இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமைக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் மோடி கையசைக்கும் புகைப்படங்கள் மற்றும் தண்ணீருக்கு அடியில் அமைக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதையின் மாதிரி படம் ஆகியவற்றை இணைத்து புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை மற்றும் ரயில் பாதை, இத அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் கட்டப்பட்ட சுமார் 14 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை ஆகும். பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா இதுதான் தேசிய மாடல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை RashtriyaSevak Ranjit என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மே 30ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதே போன்ற பதிவை C Chitra Devi Bjp என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவரும் பதிவிட்டுள்ளார். அதில் கூடுதலாக வேறு ஒரு புகைப்படமும் இருந்தது. இவர்களைப் போல இந்த பதிவை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் இதுவரை தண்ணீருக்கு அடியில் நீண்ட சுரங்கப்பாதை எதுவும் அமைக்கப்படவில்லை. மும்பையில், கொல்கத்தாவில் நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவை எதுவும் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் 14 கி.மீ தூரத்துக்கு சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்கான சுரங்கப் பாதையை பிரதமர் மோடி பிரம்மபுத்திரா ஆற்றில் அமைத்துள்ளது போன்று பலரும் பதிவிட்டு வரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம். முதலில் பிரதமர் மோடி கையசைக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அது பூபென் ஹசாரிகா பாலம் ( தோலா – சதியா பாலம் என்றும் அழைக்கின்றனர்) என்று தெரிந்தது. 2011ம் ஆண்டு கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட பாலம், 2017ம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது என்று செய்தி கிடைத்தது. அது 9.15 கி.மீ நீளம் கொண்ட பாலம். சுரங்கப்பாதை இல்லை என்று செய்திகள் தெரிவித்தன.

உண்மைப் பதிவைக் காண: dnaindia.com I Archive 1 I narendramodi.in I Archive 2
அடுத்ததாக வாகனங்கள், ரயில் செல்லும் படத்தை ஆய்வு செய்தோம். அது ஐரோப்பாவில் கடலுக்கு அடியில் கட்ட திட்டமிடப்பட்ட ஃபீஹ்மர்ன் பெல்ட் ஃபிக்ஸ்ட் லிங்க் (Fehmarn Belt Fixed Link) திட்டத்தின் மாதிரி புகைப்படம் என்று தெரிந்தது. சுரங்கப் பாதையில் பஸ் மற்றும் கார் பயணிக்கும் மாதிரி படத்தை ஆய்வு செய்தோம். அது நார்வேயில் அந்நாட்டு அரசு அமைக்க திட்டமிட்டுள்ள மிதக்கும் பாலத்தின் மாதிரி படம் என்று தெரிந்தது. மேலும் இதே படத்தில் பல நாடுகளில் அமைக்கப்பட உள்ள சுரங்கப்பாதை தொடர்பான செய்திகளில் ஊடகங்கள் பயன்படுத்தி வந்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டில் இந்தியாவில் பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது தொடர்பான செய்தியிலும் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிக நீளமான தண்ணீருக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை பற்றி பார்த்தோம். அப்போது மும்பையில் கடலிலும், கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றிலும் தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் செய்தி கிடைத்தது. அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திராவில் தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாகத் தேடிப் பார்த்தோம். அப்போது 14.85 கி.மீ தூரத்துக்குத் தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய – சீன எல்லைக்கு மிக அளிதாக இந்திய ராணுவத்தை நகர்த்த முடியும். இதற்காக அமெரிக்காவில் உள்ள சுரங்கப்பாதை அமைக்கும் நிறுவனமான லூயிஸ் பெர்ஜர் (Louis Berger) என்ற நிறுவனத்திடம் விரிவான செயல்திட்டத்தைத் தயாரித்துத் தரும்படி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது என்று செய்தி கிடைத்தன.
அதைத் தொடர்ந்து மத்திய அரசின் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, பாதுகாப்புத் துறை அமைச்சகங்கள் இணைந்து ரூ.7000 கோடி செலவில் 9.8 கி.மீ நீளத்துக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியில் தண்ணீருக்கு அடியிலான சுரங்கப்பாதையை அமைக்க முடிவு செய்துள்ளன என்றும் செய்திகள் கிடைத்தன. 14 கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதில் 9.8 கி.மீ தூரத்துக்கு அமைக்கும் வகையில் திட்டம் மாற்றம் அடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திட்டம் முடிவு செய்யப்பட்டதாகவோ, பணிகள் தொடங்கப்பட்டதாகவோ எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், இந்தியாவின் 14 கி.மீ தூரத்துக்கு முதல் நீருக்கு அடியிலான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுவிட்டது என்ற வகையில் புகைப்படம் மற்றும் தகவல் பகிரப்பட்டுள்ளது. ஆனால், நம்முடைய ஆய்வில் 9.8 கி.மீ தூரத்துக்கு பிரம்மபுத்திரா நதியின் அடியில் சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று தெரியவந்துள்ளது. ஆனால், பாலம் அமைக்க முடிவு செய்து, நிதி ஒதுக்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பிரம்மபுத்திரா நதியில் 14 கி.மீ தூரத்துக்கு நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் கட்டப்பட்ட 14 கி.மீ சுரங்கப்பாதையா இது?
Fact Check By: Chendur PandianResult: False
