
இந்தியாவில் உள்ள 60 நதிகளை இணைக்க ரூ.5.50 லட்சம் கோடியில் திட்டம் தயார் என்றும், அடுத்த மாதம் இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1
இந்தியாவில் ரூ.5.50 லட்சம் கோடி செலவில் 60-நதிகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஜூலை) 17ம் தேதி தொடங்கிவைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை, Sakthivel Desinghraj Desinghraj என்பவர் 25 ஜூன் 2019 அன்று வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் பாயும் நதிகளை இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பா.ஜ.க ஆட்சியில் நதிகள் இணைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இந்த நேரத்தில், நதிகளை இணைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த சூழ்நிலையில்தான் இந்தியாவின் 60 நதிகளை இணைக்க ரூ.5.5 லட்சம் கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் இதை அடுத்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
புதிதாக அரசு பதவி ஏற்று பட்ஜெட் கூட இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்குள்ளாக எப்படி இப்படி ஒரு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைப்பார், இவ்வளவு பெரிய திட்டத்துக்கு பட்ஜெட்டில்தானே நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிறகு எப்படி இந்த செய்தி வெளியாகியது என்று தேடினோம்.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள செய்தி கிளிப் பார்க்க தினத்தந்தியில் வெளியாகும் தலைப்பு போல் இருந்தது. இதனால், தினத்தந்தியில் இது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது, 2017ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவிலிருந்த தலைப்பு அப்படியே இருந்தது. அதில், ரூ.5.5 லட்சம் கோடி செலவில் 60 நதிகளை இணைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும், அதைத் தொடர்ந்து விரைவில் இதற்கான தொடக்க விழா நடைபெறும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். வெறும் யூகத்தின் அடிப்படையில் அந்த செய்தி வெளியானது போல் இருந்தது. செய்தி முழுக்க தெரிகிறது, எதிர்பார்க்கப்படுகிறது என்றே குறிப்பிட்டிருந்தனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதே செய்தியை இந்து தமிழ் திசை, ஐ.இ தமிழ், நியூஸ்7 உள்ளிட்ட பல செய்தி ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. ஆனால், நதி நீர் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
ஃபேஸ்புக்கில் இந்த திட்டம் தொடர்பாக தேடியபோது, பலரும் இந்த திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது, அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது என்று எல்லாம் செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது.

அதே நேரத்தில், இது பொய் என்றும் சில பதிவுகள் நமக்கு கிடைத்தன. அதில், 2017ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வெளியான தினத்தந்தி செய்தியும் வைக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக மத்திய நீர் வளத் துறை அமைச்சகத்தின் இணைய தளத்தை ஆய்வு செய்தபோது எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மேற்கண்ட செய்திகளில் குறிப்பிட்டது போன்று பல திட்டங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 60 நதிகளை இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது என்றோ, தொடங்கப்பட உள்ளது என்றோ குறிப்பிடவில்லை.
இதன் மூலம், 2017ல் வெளியான செய்தியை தற்போது நிகழ்வது போல மாற்றி வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ரூ.5 ½ லட்சம் கோடியில் நதிநீர் இணைப்புத் திட்டம்… அடுத்த மாதம் மோடி தொடங்குகிறார் – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு!
Fact Check By: Praveen KumarResult: False
