
தூத்துக்குடியில் ஏற்பட்ட கன மழை வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. “எல்லாம் போய்விட்டது” என்று ஆண்களும் பெண்களும் அலறும் சத்தம் கேட்கிறது. வீடியோவில், தூத்துக்குடி. இந்த நிகழ்வுகள் என்றும் மறக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2023 டிசம்பர் 18ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 2023 டிசம்பர் மூன்றாவது வாரத்தில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலரும் உயிரிழந்தனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், நெல், வாழை உள்ளிட்ட விளைபொருட்கள் சேதமடைந்தன. இந்த நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இதே வீடியோவை நெல்லை என்று குறிப்பிட்டும், வேறு சில நெட்டிசன்கள் எந்த இடம் என்று குறிப்பிடாமல் மறக்க முடியாது என்று மட்டும் கூறியும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர். அதில், “எல்லாம் போயிட்டே” என்று பெண்களும் ஆண்களும் அலறும் கூக்குரல் இல்லை. மேலும் வீடியோவில் ஒரு காட்சியில் அரபு நாட்டினர் அணிவது போன்று ஆடை அணிந்த நபர் ஒருவரை காண முடிந்தது. எனவே, இந்த வீடியோ உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை சில ஊடகங்கள் 2023 ஜூலை 19ம் தேதி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்திருப்பது தெரிந்தது. அதில், மொராக்கோவின் மௌலே பிராஹிம் பகுதியின் அல் ஹவுஸ் என்ற இடத்தில் கன மழை காரணமாகப் பாய்ந்த வெள்ளம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பல ஊடகங்களும் இந்த வீடியோவை யூடியூபில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ மொராக்கோவில் எடுக்கப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ளன. மேலும் இந்த வீடியோ 2023 ஜூலை மாதத்திலேயே சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு என்பது 2023 டிசம்பர் மூன்றாவது வாரத்தில் ஏற்பட்டது.
இதன் மூலம் மொராக்கோ வீடியோவில் ஆடியோவை மட்டும் எடிட் செய்து மாற்றி தவறாக பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
என்றும் மறக்க முடியாத தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் கோர காட்சி – என்று பரவும் வீடியோ மொராக்கோவை சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்படும் வீடியோ தூத்துக்குடியில் எடுக்கப்பட்டதா?
Written By: Chendur PandianResult: False
