அரிசி மூட்டைகளில் தண்ணீர் தெளித்து மதுபான ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா?

சமூக ஊடகம் | Social

‘’அரிசி மூட்டைகளில் தண்ணீர் தெளித்து மதுபான ஆலைகளுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யும் அரசு ஊழியர்கள்,‘’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

சுந்தர் சேதுபதி என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை கடந்த ஜூலை 29, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் குடோனில் ஒருவர் பைப் மூலமாக நீர் பீய்ச்சியடிக்கிறார். அதனை பகிர்ந்து, மேலே, ‘’ அரிசி மூட்டைகளில் தண்ணீர் அடித்து நனைத்து தானாக நனைந்து விட்டதாக கூறி அரசு மதுபான ஆலைகளுக்கு ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு விற்கும் அவல நிலை. அரசு ஊழியர்களின் பண ஆசை….,’’ என எழுதியுள்ளார்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல் உண்மைதானா என்ற பெயரில் கூகுள், Yandex உள்ளிட்ட இணையதளங்களில் இந்த புகைப்படத்தை பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். ஆனால், இதுதொடர்பாக எதுவும் தகவல் கிடைக்கவில்லை.

இதன்பேரில் வித விதமான கீ வேர்ட்களை பயன்படுத்தி, கூகுளில் திரும்ப திரும்ப செய்தி ஆதாரம் தேடிப் பார்த்தோம். நீண்ட முயற்சிக்குப் பிறகு, சில இணையதள செய்திகள் கிடைத்தன. அவற்றை நமது இந்தி மற்றும் குஜராத்தி டீம் உதவியுடன் படித்து உண்மை அறிந்தோம்.

அதில், மத்தியப் பிரதேச மாநிலம், சாட்னா பகுதியில் உள்ள தனியார் குடோனில் கோதுமை மூட்டைகளை வேண்டுமென்றே அலட்சியம் காட்டி ஊழியர்கள் வீணடிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இதுபற்றிய பத்ரிகா செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இருந்தாலும், சந்தேகத்தின் பேரில் இதேபோன்ற செய்தி வேறு யாரேனும் வெளியிட்டுள்ளார்களா என தேடிப் பார்த்தோம். அப்போது, இந்த புகைப்படம் பற்றி ABP News உண்மை கண்டறியும் சோதனை செய்து, அதன் முடிவுகளை சமர்ப்பித்துள்ள விவரம் கிடைத்தது.

இதன்படி, குறிப்பிட்ட புகைப்படத்தில் இருக்கும் ஊழியரின் பெயர் ரஃபிக் கான், அது சாட்னா பகுதியில் உள்ள ருச்சி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ‘அவை அரிசி மூட்டைகள் அல்ல, இதனைச் செய்பவர்கள் அரசு ஊழியர்களும் அல்ல. தனியார் நிறுவன ஊழியர்கள், குளிரூட்டும் வசதி இல்லாத காரணத்தால், கோதுமை மூட்டைகளை ஈரப்படுத்துவதற்காக, இப்படிச் செய்கிறார்கள்,’ என தெரிய வருகிறது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறானது என உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அரிசி மூட்டைகளில் தண்ணீர் தெளித்து மதுபான ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False