திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள அயோத்தி ராமர் கோவில் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலின் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "500 ஆண்டுகள் போராட்டம், சொல்லொன்னா துயர் கடந்து, பல உயிர் பலிதானம் தியாகம் செய்து, திறப்பு விழாவிற்கு தயாரானது அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது டிசம்பர் 20, 2023 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

டெல்லியில் உள்ள அக்‌ஷர்தாம் கோவிலின் வீடியோவை தவறாக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் என்று இந்த அக்‌ஷர்தாம் கோவிலின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அது டெல்லியில் உள்ள ஸ்வாமி நாராயண் அக்‌ஷர்தாம் கோவில் என்று அப்போது ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதனால், இந்த பதிவு தவறானது என்பது நமக்கு தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோவை புகைப்பட காட்சிகளாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது டெல்லி அக்‌ஷர்தாம் என்று குறிப்பிட்டு இதே வீடியோவை பலரும் யூடியூபில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. பெண் ஒருவர் ட்ரோன் மூலம் இந்த வீடியோவை பதிவு செய்தது போன்று அந்த வீடியோவில் இருந்தது.

கூகுள் மேப்-ல் டெல்லி அக்‌ஷர்தாம் கோவிலை தேடி எடுத்தோம். அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், கோயிலின் அமைப்பு எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது போலவே உள்ளதை காண முடிந்தது. இவை எல்லாம் இந்த கோவில் அயோத்தி ராமர் கோவில் இல்லை என்பதை உறுதி செய்தன.

அயோத்தி ராமர் கோவில் 2024 ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் கோவிலின் கருவறையில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதற்குள்ளாக இந்த வதந்தி பரப்பப்பட்டிருப்பது தெளிவாகிறது.

முடிவு:

அயோத்தி ராமர் கோவில் என்று டெல்லி அக்ஷர்தாம் கோவிலின் வீடியோவை தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:திறப்பு விழாவுக்கு தயாரான அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False