மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் திருமண காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகர் டேனியல் பாலாஜியின் பழைய சினிமா ஸ்டில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "Daniel Balaji அழகான திருமண காட்சி புகைப்படம் | RIP DANIEL BALAJI" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரபல தமிழ் சினிமா நடிகர் டேனியல் பாலாஜி மார்ச் 29, 2024 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த டேனியல் பாலாஜி பற்றி பல ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் டேனியல் பாலாஜியின் திருமண காட்சி என்று ஒரு புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், இது ஒரு சினிமா புகைப்படம். இதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலமாக தேடியபோது, ஞான கிறுக்கன் என்ற திரைப்படத்தின் ஸ்டில் இது என்று தெரியவந்தது. ‘ஞான கிறுக்கன் திரைப்பட புகைப்படங்கள்’ என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் 2013ம் ஆண்டு வெளியான செய்திகளும் நமக்கு கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: filmibeat.com I Archive 1 I webindia123.com I Archive 2

இதற்கிடையே இந்த புகைப்படத்தில் மணமகளாக இருக்கும் நடிகை செந்தில் குமாரியின் இன்ஸ்டாகிராம் பதிவும் நமக்குக் கிடைத்தது. அதில், டேனியல் பாலாஜி மறைந்தார் என்ற செயதி கேட்டு சோகமுற்றேன், என்று குறிப்பிட்டு ஞான கிறுக்கன் திரைப்படத்தில் டேனியல் பாலாஜியுடன் இணைந்து நடித்திருந்த காட்சியை அவர் பகிர்ந்திருந்தார். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட திருமண காட்சியும் இடம்பெற்றிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

இவை எல்லாம் நடிகர் டேனியல் பாலாஜியின் திருமண காட்சி என்று பரவும் புகைப்படம் சினிமாவில் இடம் பெற்ற காட்சி என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திரைப்பட ஸ்டில்லை எடுத்து, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் திருமண காட்சி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நடிகர் டேனியல் பாலாஜியின் திருமண காட்சி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False