
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று குறிப்பிட்டு செல்போன் கடை ஒன்று உருக்குலைந்து போகும் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நிலநடுக்கம் காரணமாக செல்போன் கடை ஒன்று உருக்குலைந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து ரஷ்யா, ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. சுனாமிக்கு பயந்து மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து முதலில் ஜப்பான் நிலநடுக்க ஆய்வு மையம்தான் அறிவிப்பை வெளியிட்டது. நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. எச்சரித்ததை போலவே பல இடங்களை சுனாமி தாக்கியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய நிலநடுக்கம் என்று சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், இந்த வீடியோ ரஷ்யாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், ரஷ்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இது ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று மக்கள் கருதும் வகையில் உள்ளது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: stuff.co.nz I Archive
வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. எனவே, அதில் உள்ள தேதியை சரியாக காண முடியவில்லை. எனவே, வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சமூக ஊடகங்களில் இன்று (ஜூலை 30, 2025) ரஷ்யா நிலநடுக்கம் என்று குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோவை பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. வீடியோவில் இருக்கும் பெண்ணைப் பார்க்கும் போது சீன பெண் போலத் தெரிந்ததால் தொடர்ந்து தேடினோம்.
அப்போது, 2025 மார்ச் மாதம் இறுதியில் இதே வீடியோவை ஒருவர் யூடியூபில் பதிவிட்டிருந்ததைக் கண்டறிந்தோம். அதில், மியான்மர் – சீனா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 2025 மார்ச் மாதம் மியான்மர், தாய்லாந்து, சீனாவின் சில பகுதிகளில் நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அப்போது மியான்மரில் உள்ள ஒரு கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ என்று இந்த வீடியோவை அப்போது வௌியிட்டிருந்தனர். அந்த வீடியோவை இப்போது ரஷ்யா நிலநடுக்கத்துடன் தொடர்புப்படுத்தி, பதிவிட்டிருப்பது தெரிந்தது.
இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடிய போது, 2025 மார்ச் மாதம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சியுடன் வெளியான பல பதிவுகள், செய்திகள் நமக்குக் கிடைத்தன. தெளிவாக இருந்த அந்த வீடியோக்களில் மார்ச் 28, 2025 என்று தெளிவாக தேதி தெரிந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுக்கும் ரஷ்யா நிலநடுக்கத்திற்கும் தொடர்பில்லை என்பதை உறுதி செய்தன.
முடிவு:
மியான்மர் நிலநடுக்க காட்சியை ரஷ்யா நிலநடுக்கம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
