
‘’கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்த குழந்தையை பிளாஸ்டிக் மூட்டையில் கட்டித் தழுவும் தந்தை,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதே தகவலை மற்ற முன்னணி ஊடகங்கள் உள்பட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படத்தைப் பார்த்தால், அதில் இருக்கும் குழந்தை இறக்கவில்லை, உயிருடன்தான் நிற்கிறது என்று தெரிகிறது. ஆனால், ‘’அது பெண் குழந்தை, இறந்துவிட்டது, அதனை பிளாஸ்டிக் பையில் போட்டு அதன் தந்தை தழுவிக் கொண்டுள்ளார்,’’ என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை சந்தேகத்தின் பேரில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுதொடர்பான சில விவரங்கள் கிடைத்தன.
இதன்படி, நமக்குக் கிடைத்த ட்விட்டர் பதிவு ஒன்றில் ‘’பிளாஸ்டிக் கவர் போர்த்திய தனது மகளை இறுகத் தழுவி பாசத்தை வெளிப்படுத்தும் ராணுவ வீரர்,’’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.
அத்துடன், இந்த பதிவை வெளியிட்ட ட்விட்டர் ஐடி பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்ததாகும். எனவே, இது இந்தியாவில் நிகழ்ந்தது இல்லை என்பதோடு, ‘’கொரோனா பாதிப்பால் இறந்த மகளை கட்டித் தழுவும் தந்தை,’’ என்ற தகவலும் தவறானது என்று தெளிவாகிறது.
எனவே, இதுபற்றி விரிவான தகவல் தேடினோம். அப்போது இந்தோனேசிய மொழியில் வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம்.
இந்தோனேசிய மொழியில் இருந்த இந்த பதிவை கூகுள் உதவியுடன் மொழிபெயர்த்து பார்த்தோம். அப்போது, அதில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் தனது மகனை நீண்ட நாள் பார்க்காமல் இருந்துள்ளார். பாசத்தை தவிர்க்க முடியாததால், பிளாஸ்டிக் கவர் போர்த்தியபடி தனது மகனை இருக்கச் சொல்லிவிட்டு அவர் சந்தித்துள்ளார், என்று அர்த்தம் கிடைத்தது.
இதையடுத்து, மேற்கண்ட சம்பவம் எங்கே நிகழ்ந்தது என தேடிப் பார்த்தோம். அப்போது இது மலேசியாவில் நிகழ்ந்த சம்பவம் என்றும், இதில் இருப்பது கொரோனா வைரஸ் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் என்றும், நீண்ட நாள் கழித்து தனது குழந்தையை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சந்தித்தார் என்றும் தெரியவந்தது.
இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் @ndorobeii என்ற வெரிஃபைடு பயனாளர் பகிர்ந்துள்ளார். அதில் இருந்து படிப்படியாக மற்ற சமூக ஊடக பயனாளர்களும் சொந்த கமெண்ட் சேர்த்து ஷேர் செய்திருக்கிறார்கள். பல்வேறு மொழிகளிலும் பரவிய இந்த புகைப்படம் தற்போது தமிழிலும் பகிரப்படுகிறது. உண்மையான இன்ஸ்டாகிராம் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) மலேசியாவில் கொரோனா வைரஸ் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர், தனது குழந்தையை நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்தார். அந்த குழந்தை நோய்த் தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் கவரால் உடலை மூடியிருந்தது.
2) இதனை இன்ஸ்டாகிராமில் ஒருவர் பகிர, அதன் வழியே படிப்படியாக உலகம் முழுக்க பரவியுள்ளது.
3) அந்த குழந்தை கொரோனா வைரஸ் பாதித்து இறக்கவும் இல்லை. அந்த தந்தையும் கொரோனா வைரஸ் பாதித்தவர் இல்லை.
4) உணர்ச்சிவசப்பட்டு சமூக ஊடகங்களில் இந்த புகைப்படத்தை வைத்து வதந்தி பரப்புகிறார்கள்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட புகைப்படத்தில் இருக்கும் குழந்தை இறக்கவில்லை என நிரூபித்துள்ளோம். இந்த புகைப்படம் பற்றிய தகவலில் முழு உண்மை இல்லை என்று தெரியவருகிறது. இதுபோன்ற குழப்பமான தகவலை மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்த குழந்தை கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழக்கவில்லை!
Fact Check By: Pankaj IyerResult: Partly False
