
நாகாலாந்துக்கு தனி கொடி, பாஸ்போர்ட் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2
“நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட், தனி கொடி… ஒப்புக் கொண்டது மத்திய அரசு?” என்று ஒன் இந்தியா தமிழில் செய்தி வெளியாகி உள்ளது. இதை 2019 ஜூன் 30ம் தேதி அவர்களுடைய ஒன்இந்தியா தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் விருப்பம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட இது குறித்து பா.ஜ.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே தனிக் கொடி, அரசியல் அமைப்புச் சட்டம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே இந்த அரசியல் சாசன அங்கீகாரம் உள்ளது. மற்ற மாநிலங்களும் தங்களுக்கு என தனி கொடி வேண்டும் என்று கேட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசு இதை ஏற்க மறுத்து வருகிறது. நாடு முழுவதும் பொதுவான சட்டத்தை அமல்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நாகாலாந்துக்கு தனி கொடி, பாஸ்போர்ட்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒன் இந்தியா தமிழ் செய்தியில், “நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட், தனி கொடி… ஒப்புக்கொண்டது மத்திய அரசு?” என்று தலைப்பிட்டு கடைசியில் கேள்விக் குறியுடன் முடித்துக்கொண்டனர். இதனால், அரசு ஒப்புக்கொண்டதா, இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. செய்தியைப் படித்துப் பார்த்தோம்.
செய்தியின் முதல் பத்தியில், மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து, “நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிலோ கிலோன்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா-நாகாலாந்து இடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.

1) நாகாலாந்துக்கு தனி அரசியல் சாசனம் 2) நாகாலாந்து தனிக்கொடி 3) நாகாலாந்துக்கு தனி பாஸ்போர்ட், 4) ஐநாவில் நிரந்தர பிரதிநிதி 5) கூட்டான வெளியுறவு கொள்கை 6) கூட்டான ராணுவ பயிற்சி நடவடிக்கை 7) நாகா ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவது 8) நாகா இன மக்கள் வசிக்கும் பகுதிகளை நிர்வகிக்கும் அரசு ஆகியவற்றை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றார்” என உறுதியான செய்தியைப் போலவே குறிப்பிட்டுள்ளனர்.

இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இம்பால் டைம்ஸ் என்ற வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் பத்திரிகை ஒன்றின் செய்தி கிடைத்தது. அதில், “இந்திய அரசுக்கும் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்குமான பேச்சு வார்த்தை இறுதியை எட்டியுள்ளது என்று வட கிழக்கு மாநிலங்களில் வெளியாகும் பல்வேறு பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலின் எட்டு அம்ச கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு இரு தரப்பும் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது” என்று கூறியுள்ளது. இந்த செய்தியில் எந்த இடத்திலும் இந்த செய்தி உறுதியானது என்று கூறவில்லை… வடகிழக்கு மாநிலங்களில் பரவும் செய்தி என்றே குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
www.nagalandenglish.com என்ற இணையதளத்தில் இதே செய்தி வெளியாகி இருந்தது. நாகாலாந்தின் தனித்தன்மையை அங்கீகரிக்க இந்திய அரசு முன்வந்துள்ளது என்று என்.எஸ்.சி.என்-ஐஎம் உள்துறை அமைச்சர் கிலோ கிலோன்சர் கூறியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய அரசுக்கும் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்கும் (என்.எஸ்.சி.என்-ஐஎம்) இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. நாகா மக்களின் அடிப்படை கோரிக்கையை ஏற்க இந்திய அரசு முன்வந்துள்ளது என்று தெரிவித்திருப்பதன் மூலம், நாகா மக்கள் தங்களுக்கு என தனி பாஸ்போர்ட், கொடி வைத்துக்கொள்ள முடியும்.
இது குறித்து கிலோ கிலோன்சர் கூறுகையில், “நாகா பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முன் வந்துள்ளது. நாகாலாந்து இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றோ, இந்தியாவுடன் நாகாலாந்தை இணைப்பதாகவோ எந்த ஒரு ஒப்பந்தத்திலும் நாங்கள் கையெழுத்திடவில்லை. மக்களும் நம்முடைய தனித்தன்மையை பின்பற்ற வேண்டும். வலிமையான நாகா நாட்டை உருவாக்க ஒன்றாக உழைக்க வேண்டும்” என்று கூறினார் என்று அந்த செய்தியில் தெரிவித்துள்ளனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாகாலாந்துக்கு என தனி பாஸ்போர்ட், கொடி, அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்டதாக உள்துறை அமைச்சர் கூறியதாக இதில் குறிப்பிடவில்லை. நாகாலாந்து பிரச்னையை விரைவில் தீர்க்க இந்திய அரசு முன்வந்துள்ளது என்றே குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து நம்முடைய தேடலில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், இந்திய அரசு – நாகாலாந்து சோஷியலிஸ்ட் கவுன்சில் பேச்சுவார்த்தை முடிவில் நாகாலாந்துக்கு தனி கொடி கிடைக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். காஷ்மீருக்கு தனி கொடி இருப்பது போன்று நாகாலாந்துக்கும் தனி கொடி கொடுக்கப்படலாம் என்று குறிப்பிட்டிருந்தனர். தனி பாஸ்போர்ட், அரசியல் சாசனம், பணம் போன்ற கோரிக்கை ஏற்கப்பட்டதாக அதில் குறிப்பிடவில்லை.
இந்திய அரசுக்கும் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் 2015ம் ஆண்டு கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து இறுதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பும் ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் அடிப்படையில் இந்த வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் என்ன என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டன என்று மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளது.
இது தொடர்பாக, 2017ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ,”இறுதி வரைவு தயாரிக்கும் பணிகள் சென்றுகொண்டிருக்கின்றன. வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக அதில் உள்ள விஷயங்களை வெளிப்படுத்துவது சரியாக இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாகாலாந்துக்கு தனி கொடி, பாஸ்போர்ட் போன்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாகப் பல ஆண்டுகளாகவே வதந்தி பரவி வருவதும் தெரிந்தது. இது குறித்து 2016ம் ஆண்டு வதந்தி பரவியபோது, அப்போது மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ இது தவறான தகவல் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட் கிடைத்தது.
2015ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், நாகாலாந்து கவுன்சிலுடன் மத்திய அரசு இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தேதி உறுதியாகிவிட்டதா என்று உள்துறை அமைச்சகத்தில் தேடினோம். இம்பால் டைம்ஸில் ஜூன் 25ம் தேதி செய்தி வெளியாகி இருந்தது. குறிப்பிட்ட அந்த காலக்கட்டத்தில் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் அதில் இல்லை.

நம்முடைய ஆய்வில், ஃபேக்ட் கிரஸண்டோ (www.factcrescendo.com) இந்திப் பிரிவும் கூட இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தியது தெரியவந்தது. அதிலும் கூட இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. அந்த ஆய்வறிக்கையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட செய்தி உண்மையில்லை, வதந்தியை ஒரு செய்தியாக வெளியிட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நாகாலாந்துக்கு தனி கொடி மற்றும் பாஸ்போர்ட்? – பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!
Fact Check By: Chendur PandianResult: False
