
மகாராஷ்டிரா மாநில பாஜக-வின் பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாஜகவிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? கடவுளே
மகாராஷ்டிரா: சரத் பவார் குழு தலைவர் ரோஹித் பவார் பண வீடியோ டுவிட்…
◆ ரோஹித் சொன்னார், “தேர்தலின் முதல் தவணையாக 25-25 கோடி ரூபாய் வழங்குவது குறித்து விவாதம்”…
◆ ரோஹித்: “இதிலிருந்து ஒரு வாகனம் நேற்று கேட் ஷிவாபூரின் பர்பத் ஜாரியில் (எம்எல்ஏ ஷாஜி பாட்டீல்)லிடம் பிடிக்கப்பட்டது, மீதமுள்ள 4 வாகன காணவில்லை…..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாஜக கூட்டணி எம்.எல்.ஏ ஷாஜி பாட்டீலிடம் இருந்து வாகனம் ஒன்று பிடிபட்டதாகவும், ஒரு தொகுதிக்கு 25 கோடி ரூபாய் செலவு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது என்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ரோஹித் பவார் கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனுடன் கட்டுக்கட்டாக பணம் இருக்கும் வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்கும் போது பாஜக ஆதரவு எம்.எல்.ஏ-விடம் கைப்பற்றப்பட்ட பணம் என்ற தோற்றம் வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
முதலில் மகாராஷ்டிராவில் பணம் ஏதும் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ-விடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதா என்று அறிய கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது. பூனே ரூரல் போலீஸ் சோதனையில் கேட் சிவாபூர் டோல்பூத்தில் இன்னோவா கார் ஒன்றிலிருந்து ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த பணத்திற்கும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் எம்.எல்.ஏ ஷாஜிபாபு பாட்டில் என்பவருக்கும் தொடர்புள்ளதாக உத்தவ் தாக்கரே அணியின் சஞ்சய் ராவத் கூறியதாக செய்திகள் நமக்குக் கிடைத்தன.
சரத் பவார் அணியின் ரோஹித் பவர் குற்றச்சாட்டுத் தொடர்பாக தேடிய போது, அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் தள (பழைய ட்விட்டர்) பதிவு ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை அவர் பதிவிட்டிருந்தார். இந்த பணம் குவிந்திருக்கும் வீடியோ மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சோதனையின் போது எடுக்கப்பட்டதா என்று அறிய அந்த வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸில் பதிவேற்றித் தேடினோம்.
உண்மைப் பதிவைக் காண: Youtube
அப்போது பல ஆண்டுகளாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது, யார் இதை வெளியிட்டார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை. 2020ம் ஆண்டு மே 10ம் தேதியிலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. Likee என்ற ஆப்-ல் 2020ம் ஆண்டு யாரோ பதிவிட்ட வீடியோவை எடுத்து யூடியூபில் பதிவிட்டிருந்தனர். லைக்கி என்ற ஆப் இப்போது செயல்பாட்டில் இல்லை என்பதால் அதை நம்மால் கண்டறிய முடியவில்லை. இதன் மூலம் இந்த வீடியோ சமீபத்தில் பூனேவில் சுங்கச்சாவடி அருகே கைப்பற்றப்பட்ட பணத்தின் வீடியோ இல்லை என்பது மட்டும் தெளிவாகிறது.
மகாராஷ்டிராவில் ரூ.5 கோடி பணம் சிக்கியது உண்மைதான், ஆனால் அந்த பணம் யாருடையது என்று தற்போதுதான் வருமான வரித்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பாஜக கூட்டணிக் கட்சியின் பணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. விசாரணை முடிவில் மட்டுமே இது யாருடைய பணம் என்பது தெரியவரும். அதே நேரத்தில் இது அந்த கைப்பற்றப்பட்ட பணத்தின் வீடியோ இல்லை. பழைய வீடியோவை எடுத்து இப்போது நடந்த சம்பவத்தின் வீடியோ போல் பகிர்ந்திருப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
மகாராஷ்டிராவில் கைப்பற்றப்பட்ட பாஜக-வின் ரூ.5 கோடி என்று பரவும் வீடியோ 2020ம் ஆண்டில் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மகாராஷ்டிராவில் சிக்கிய பாஜக பணம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
