எடப்பாடி பழனிசாமி இனி முதல்வராக வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "எடப்பாடி பழனிசாமி அவர்கள் இனி முதல்வராக வர வாய்ப்பேயில்லை; நாங்கள் சொல்வதைக் கேட்டுத்தான் அவா;கள் நடந்துகொள்ள வேண்டும் - பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை காங்கிருப்பு கே ஜி மோகன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 23ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

அதிமுக-வுக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அண்ணாமலைதான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று பாஜக-வினர் கூறி வருகின்றனர். அண்ணாமலையைத் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக-வினர் கூறி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று நான் கூற முடியாது. இதை தேசிய தலைமைதான் இது பற்றி கூற வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என கூறி பதவிக்கு வந்த நான் எடப்பாடி பழனிசாமி முதல்வராவர் என எப்படி சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், இனி எடப்பாடி பழனிசாமி முதல்வராக முடியாது என்று எல்லாம் கூறவில்லை.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வாய்ப்பேயில்லை என்று அண்ணாமலை கூறியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த நியூஸ் கார்டு வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. வடிவமைப்பில் வித்தியாசங்களைக் காண முடிகிறது. எனவே, இது போலியானதாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தோம்.

எடப்பாடி பழனிசாமி இனி தமிழ்நாட்டின் முதல்வராக முடியாது என்று அண்ணாமலை கூறினாரா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அடுத்ததாக இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ளது போன்ற தகவல் கொண்ட வேறு ஒரு நியூஸ் கார்டை போலி என்று முத்திரை குத்திப் பதிவிட்டிருந்தனர்.

அந்த நியூஸ் கார்டில் அண்ணாமலை படத்துக்கு பதில் அண்ணாமலை நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்றும் அவருக்கு அருகே சோகமாக எடப்பாடி பழனிசாமி நிற்பது போலவும் ஓவியம் இடம் பெற்றிருந்தது. அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ்கார்டையும் அவர்கள் வெளியிடவில்லை. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு அனுப்பிவைத்தோம். அவரும், இது போலியானதுதான், என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வாய்ப்பேயில்லை என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியாகிறது.

முடிவு:

எடப்பாடி பழனிசாமி இனி முதல்வராக வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:எடப்பாடி பழனிசாமி முதல்வராக வாய்ப்பே இல்லை என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False