
குலதெய்வ கோவில்களைத் திறக்க தடை விதித்த நிர்மலா சீதாராமன் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக், ட்விட்டர் (எக்ஸ் தளம்) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் அசைவம் படைக்கப்படும் குலதெய்வ கோவில்கள் நாளை திறக்க கூடாது என ஒன்றிய அமைச்சர் வாய்மொழி உத்தரவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive
உண்மை அறிவோம்:
இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. சிறு கோவில்கள் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றை எல்லாம் திறக்க, மூட கொரோனா போன்ற பேரிடர் காலங்கள் தவிர்த்து மத்திய அரசால் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. அப்படி இருக்கும் போது வாய்மொழி உத்தரவு என்பது நம்பும் வகையில் இல்லை.
ஒன்றிய அரசு என திமுக பயன்படுத்திய போது அதற்கு தினமலர் எதிர்ப்பு தெரிவிக்கும் செய்திகளை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த நியூஸ் கார்டில் ஒன்றிய அமைச்சர் என்று உள்ளது. அதே போல் பாஜக-வுக்கு எதிரான செய்திகளையும் தினமலர் வெளியிடாது. அப்படி இருக்கையில் இந்த நியூஸ் கார்டு உண்மையில் தினமலர் வெளியிட்டிருக்க வாய்ப்பு இல்லை என்பதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் தினமலர் இப்படி ஏதும் நியூஸ் கார்டை வெளியிட்டதா என்பதை அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, சென்னை தினமலர் ஆசிரியர் குழுவைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர்களும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தனர்.
இந்த நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது தமிழ்நாடு பாஜக இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருப்பது தெரிந்தது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் ராமர் கோவில் திறப்பையொட்டி குலதெய்வ கோவில்களைத் திறக்கக் கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி தமிழ்நாட்டில் குலதெய்வக் கோவில்களை திறக்க கூடாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் குலதெய்வ கோவில்களை திறக்க தடைவிதித்தாரா?
Written By: Chendur PandianResult: False
