FACT CHECK: சென்னை நபரை கைது செய்த உ.பி போலீஸ்… எப்போது நடந்தது?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறு பேசிய சென்னை நபரை உத்தரப்பிரதேச போலீசார் தமிழ்நாடு வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரதமர் மோடி குறித்து அவதூறு சென்னை நபரை தட்டி தூக்கிய உத்திர பிரதேச போலீசார்! பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய நபரை, சென்னையில் வீடு புகுந்து உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “இனி தான்டா ஆட்டம் ஆரம்பம் கோபாலபுரம் வேடிக்கை பார்க்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை AdvAshok என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 டிசம்பர் 12ம் தேதி பகிர்ந்திருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

எஸ் ஆர் பி திருமூர்த்தி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் இதே நியூஸ் கார்டை பகிர்ந்திருந்தார். நிலைத் தகவலில், “தரமான சம்பவங்கள் தொடரட்டும்.. சி.ஆர்.பி.ஸி பத்தி Annamalai Kuppusamy  பேசுனதோட அர்த்தம் இதுதான்” என்று குறிப்பிட்டிருந்தார். இவர்களைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பா.ஜ.க ஆதரவாளரான மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சூழலில் தமிழ்நாடு காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருந்தார். அதில் சிஆர்பிசி சட்டத்தைப் பயன்படுத்தி மற்ற மாநிலங்களில் வழக்கு தொடர்ந்து தமிழகத்தில் உள்ள தி.மு.க-வினரை கைது செய்வோம் என்பது போன்று எச்சரிக்கை விடுத்திருந்தார். 

அசல் பதிவைக் காண: news18.com I Archive

“பாரதிய ஜனதா கட்சி 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது, சிஆர்பிசி சட்டம் தமிழகத்திற்கு மட்டுமான சட்டமில்லை” என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருந்த சூழலில், உத்தரப்பிரதேச போலீசார் சென்னையில் வீடு புகுந்து ஒருவரைக் கைது செய்ததாகப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த போலீசார் இனி தமிழ்நாடு வந்து கைது செய்து அழைத்துச் செல்வார்கள், கோபாலபுரம் (தமிழ்நாடு அரசு) வேடிக்கை பார்க்க வேண்டும் என்றும், உத்தரப்பிரதேச போலீசின் அதிரடி தொடரும் என்றும், தி.மு.க-வினர் ஜாமீன் வாங்க உத்தரப்பிரதேசத்துக்கு அலைய வேண்டும் என்றும், வட்டியும் முதலுமாக தி.மு.க அரசுக்கு திருப்பிக் கொடுப்போம் என்றும் பா.ஜ.க தொண்டர்கள் இந்த பதிவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். 

அண்ணாமலை எச்சரிக்கைவிடுத்த நிலையில் உத்தரப்பிரதேச போலீசார் வந்து கைது செய்தது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது. மேலும், தமிழ்நாட்டுக்குள் நுழைந்து மற்ற மாநில போலீசார் கைது செய்து கொண்டு செல்வார்கள் என்ற வகையில் பலரும் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் ஒரே தேசம் என்ற பெயரில் உள்ள ஊடகத்தில் வெளியான நியூஸ் கார்டு, செய்தியைப் பார்த்தோம். அதில் “பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்துப் பொய் செய்திகளையும் அவதூறு கருத்துக்களையும் சென்னையில் வசித்து வரும் மன்மோகன் மிஸ்ரா (60) என்பவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் கோத்வாலி காவல்துறை , உடனடியாக சென்னைக்கு விரைந்து, மாதவரத்தில் தங்கியிருந்த மன்மோகன் மிஸ்ராவை கைது செய்தனர்.மேலும் அவரை விசாரணைக்காக தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்த உத்தரப்பிரதேச போலீசார், ஜான்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்” என்று இருந்தது. இந்த செய்தியை டிசம்பர் 12, 2021 அன்று பதிவிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: oredesam.in I Archive

மாரிதாஸ் பேசியது சரிதான், எல்லோருக்கும் கருத்துச் சொல்ல உரிமை உள்ளது என்று கூறியவர்கள் மோடி, யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த நபரை கைது செய்ததை நியாயப்படுத்திப் பதிவிட்டிருந்தனர்.

முதலில் இந்த செய்தி உண்மையா, எப்போது நடந்தது என்று பார்த்தோம். சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்து வட இந்தியர் ஒருவரை போலீசார் கைது செய்து சென்றது நினைவிலிருந்ததால் அது பற்றித் தேடினோம். 2021 ஆகஸ்ட் 14ம் தேதி இது தொடர்பான செய்தி தமிழ் ஊடகங்களில் வெளியாகி இருந்தது. அதில், பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றி அவதூறாக இந்தியில் பேசி வீடியோ வெளியிட்ட சாமியார் மன்மோகன் மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர்.

அசல் பதிவைக் காண: oneindia.com I Archive

கைது செய்யப்படுவதற்கு முன்பு சென்னை வந்த உத்தரப்பிரதேச போலீசார் இது குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து உதவி கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து மாதவரம் போலீசார் உதவியோடு அவரை கைது செய்து, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு உத்தரப்பிரதேசம் அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: seithipunal.com I Archive

இந்த செய்தியை வைத்துப் பார்க்கும் போது வேறு மாநில போலீசார் அதிரடியாக தமிழகத்தில் வந்து ஒருவரைக் கைது செய்து செல்வது எல்லாம் சாத்தியமில்லை என்பது தெரியவருகிறது. சம்பந்தப்பட்ட மாநில போலீசாரின் உதவியை நாடி, அந்த பகுதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, டிரான்சிட் வாரண்ட் வாங்கிய பிறகுதான் சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல முடியும். அப்படி அனுமதியின்றி, ஆவணங்கள் இன்றி கைது செய்ய வந்தால் அந்த மாநில போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளது. கொல்கத்தா போலீசார் சிபிஐ அதிகாரிகளை கைது செய்தது நினைவு கூறத்தக்கது. 

நம்முடைய ஆய்வில், உத்தரப்பிரதேச நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் 2021 ஆகஸ்டில் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. திடீரென்று நுழைந்து அவரை கைது செய்யவில்லை. தமிழ்நாடு போலீசின் உதவியைப் பெற்று கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. பழைய செய்தியை அண்ணாமலை செய்தியுடன் தொடர்புப்படுத்தி புதிது போன்று பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. சாமியார் கைது செய்யப்பட்டது கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தால் குழப்பம் வந்திருக்காது.

முடிவு:

பிரதமர் மோடி பற்றி அவதூறு பேசிய நபரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர் என்று பகிரப்படும் தகவல் இப்போது நடந்தது இல்லை, 2021 ஆகஸ்ட் மாதம் நடந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சென்னை நபரை கைது செய்த உ.பி போலீஸ்… எப்போது நடந்தது?

Fact Check By: Chendur Pandian 

Result: False