FACT CHECK: பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது என்று பரவும் வதந்தி!

அறிவியல் சமூக ஊடகம் சமூகம்

தொழிற்சாலையில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தொழிற்சாலை ஒன்றில் பிளாஸ்டிக்கை உருக்கி, சிறு சிறு துண்டுகளாக மாற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படும் விதம். அரிசி வாங்கும் போது கவனமாக இருக்கவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “அரிசியில் இப்போது பிளாஸ்டிக் அரிசியும் கலப்படம் பன்றானுக மக்களே அரிசி வாங்கும்போது பார்த்து வாங்கவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை கோவை முத்து அஇஅதிமுக என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 டிசம்பர் 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இதே வீடியோவை பலரும் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை காண முடிந்தது.

உண்மை அறிவோம்:

பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பல ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் விற்கும் விலைக்கு அதை அரிசியாக தயாரித்தால் கூட விலை உயர்ந்த அரசி ரகங்களில் தான் கலக்க முடியும். அப்படியே கலந்தாலும் அதை சாப்பிட முடியாது. பிளாஸ்டிக் அரிசி வேகாது. கடிக்க முடியாது. விழுங்க மிகவும் சிரமமாக இருக்கும். அப்படி இருக்கும்போது யார் பிளாஸ்டிக் அரிசியை தயாரித்து விற்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

இது தொடர்பாக தேடிய போது முன்னணி ஊடகங்கள் கூட பிளாஸ்டிக் அரிசியை கண்டறிவது எப்படி என்று செய்தி வெளியிட்டிருந்தன. இவற்றுக்கு நடுவே விகடன் வெளியிட்டிருந்த செய்தி ஒன்று கிடைத்தது. அதில் சில நாடுகளில் செயற்கை அரிசி தயாரிக்கப்படுகிறது. அதுவும் அரிசியில் இருந்துதான் அரிசி தயாரிக்கப்படுகிறது. அதாவது குருணையோடு ஊட்டச்சத்துக்கள் சேர்த்து அரிசி தயாரிக்கிறார்கள். ஆனால், பிளாஸ்டிக் கொண்டு அரிசி தயாரிக்கப்படுவது இல்லை.

பிளாஸ்டிக் அரிசி என்று பகிரப்படும் தகவல் எல்லாம் வதந்திதான் என்று தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை பார்த்தோம். பிளாஸ்டிக் கவர்களை எல்லாம் பயன்படுத்தி பிளாஸ்டிக் சிப் தயாரிப்பது போல உள்ளது. இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். 

வீடியோவில் இயந்திரத்தினுள் ஒருவர் பிளாஸ்டிக் கவர்களை போடுகிறார். அது கயிறு போல வெளியே வருகிறது. தண்ணீரில் குளிர்விக்கப்படும் அந்த கயிறு, மற்றொரு இயந்திரத்தினுள் சென்று சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்படுகிறது. அதை ஒருவர் கையில் ஏந்தி காட்டுகிறார். தெளிவில்லாத வீடியோ என்பதால் அது அரிசி போல தெரியவில்லை. அதே நேரத்தில் பிளாஸ்டிக் சிப் தயாரிக்கும் முறை என்று யூடியூபில் தேடிய போது இதே போன்று முறையில் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுவதை காண முடிந்தது. எனவே, இந்த வீடியோவை தொடர்ந்து ஆய்வு செய்தோம்.

வீடியோவின் ஒரு பகுதியில் இவிஏ என்று பை ஒன்று தெரிந்தது. அந்த பகுதியை மட்டும் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சீனா, கொரிய மொழி போன்ற பக்கம் ஒன்று நமக்கு கிடைத்தது. அதை மொழிபெயர்ப்பு செய்து பார்த்த போது தென் ஆப்ரிக்காவின் சாம்சங்க் இவிஏ கோட்டட் கிரேட் இ182எல் எத்திலின் வினைல் என்று குறிப்பிட்டிருந்தனர். அரிசி என்று குறிப்பிடவில்லை. 25 முதல் 999 கிலோ வரை ஆர்டர் செய்தால் அதன் விலை கிலோவுக்கு 19 டாலர் என்று குறிப்பிட்டிருந்தனர். அதாவது ஒரு கிலோ 1439 ரூபாய் வருகிறது. 

அசல் பதிவைக் காண: tuifa.cn I Archive

இந்தியாவில் இது எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று பார்த்தோம். கிலோ 390 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வகை பிளாஸ்டிக் விற்கும் விலைக்கு அரிசியைத்தான் போலியாக பிளாஸ்டிக் என்று விற்க வேண்டி வரும் போல. அந்த பிளாஸ்டிக்கை வாங்கி வந்து அரிசி செய்தால் கலப்படம் செய்தவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம்தான் வரும்.

அசல் பதிவைக் காண: indiamart.com I Archive

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (fssai) பிளாஸ்டிக் அரிசி தொடர்பாக ஏதேனும் தெரிவித்துள்ளதா என்று பார்த்தோம். அப்போது, பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் அனைத்தும் தவறானது என்று குறிப்பிட்டு அது செய்தி வெளியிட்டிருந்தது நமக்கு கிடைத்தது. அரிசியில் 80 சதவீதம் ஸ்டார்ச் உள்ளது. அதனால் அதை எரித்தால் வேகமாக எரியும். மேலும் வேக வைத்த சாதத்தை இறுக்கமாக உருண்டை பிடித்து தரையில் போட்டால் பந்து போல குதிக்கும். இதற்காக அதில் பிளாஸ்டிக் கலந்துள்ளது என்று கூறுவது உண்மையில்லை என்று கூறியிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: fssai.gov.in I Archive 1 I fssai.gov.in I Archive 2

நம்முடைய ஆய்வில், பிளாஸ்டிக் தயாரிக்கப்படும் வீடியோவை எடுத்து, பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் மெஷின் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தொழிற்சாலையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செயற்கை அரிசி தயாரிக்கிறார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது என்று பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False