FACT CHECK: மோடி டி-ஷர்ட் அணிந்தவர் போலீசை தாக்கும் படம் டிராக்டர் பேரணியின் போது எடுத்ததா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியின் போது காவல்துறையை தாக்கிய சங்கிகள் என்று பகிரப்படும் படம் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மோடி டி-ஷர்ட் அணிந்த நபர் ஒருவர் போலீசைத் தாக்கக் கம்பை ஓங்குவதும் – போலீசார் பதிலுக்கு அடிக்க பாய்வது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடந்த கலவரத்திற்கு யார் காரணம் என்று நல்லா உத்துப் பாருங்க டா சங்கிகளா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை பாஜக சங்கிகளின் சரணலாயம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Mohamed Sheik என்பவர் 2021 ஜனவரி 29 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட படத்தை தற்போது விவசாயிகள் போராட்டத்தின் போது எடுத்தது என்று சிலர் பரப்பி வருகின்றனர். 2020ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்த போதும் இதே படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. தற்போது விவசாயிகள் டிராக்டர் பேரணியின் போது எடுக்கப்பட்டது என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அதாவது, விவசாயிகள் பேரணியில் விவசாயிகள் மத்தியில் நுழைந்த பா.ஜ.க-வினர்தான் கலவரம் செய்தனர். அதற்கு ஆதாரம் இந்த புகைப்படம் என்ற வகையில் பதிவிட்டு வருகின்றனர். இது மிகவும் பழைய படம் என்று அறிந்திருந்ததால், அதை உறுதி செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அப்போது இந்த படத்தை ஒன் இந்தியா ஆங்கிலம் 2014ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வெளியான செய்தியில் பதிவிட்டிருந்தது. அதில், பா.ஜ.க இளைஞரணியினர் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு எதிராக லக்னோவில் போராட்டம்  நடத்தினர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் 2021ல் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: oneindia.com I Archive

இந்த புகைப்படத்தை வேறு ஏதும் ஊடகம் பயன்படுத்தியுள்ளதா, நம்பகமான ஊடகம் ஏதும் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளதா என்று ஆய்வு செய்தோம். அப்போது இந்த புகைப்படத்தை பிடிஐ செய்தி நிறுவனம் எடுத்தது என்று டெலிகிராப் இந்தியா இதழ் வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது. இந்த படத்தை அவர்கள் இணையதளத்தில் 2014 ஜூலை 1ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தனர். லக்னோவில் சட்டப்பேரவைக்கு முன்பாக பா.ஜ.க இளைஞரணி நடத்திய போராட்டத்தில் போராட்டக்காரரும் போலீசாரும் தாக்கிக்கொண்ட காட்சி, என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: telegraphindia.com I Archive

இதன் மூலம் 2014ம் ஆண்டு பா.ஜ.க இளைஞரணி நடத்திய தாக்குதல் புகைப்படத்தை எடுத்து 2021 விவசாயிகள் பேரணியுடன் தொடர்புப்படுத்திப் பதிவிட்டிருப்பது, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2014ம் ஆண்டு பா.ஜ.க இளைஞரணியினர் போலீசை தாக்கிய படத்தை எடுத்து தற்போது விவசாயிகள் பேரணியில் நடந்தது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மோடி டி-ஷர்ட் அணிந்தவர் போலீசை தாக்கும் படம் டிராக்டர் பேரணியின் போது எடுத்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False