டாக்டர் பட்டம் பெற்றதற்காக எடப்பாடி பழனிசாமியை கேலி செய்தாரா தமிழிசை?

அரசியல் சமூக ஊடகம்

‘’டாக்டர் பட்டம் பெற்றதற்காக எடப்பாடி பழனிசாமியை கேலி செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Video Link 

Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 22, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், பாஜக தமிழக முன்னாள் தலைவரும், இந்நாள் தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பேசுகிறார். அவர், ‘’ஒரு பையன் தன் அப்பாவிடம் டாக்டராகனும் எனச் சொல்றான். அதற்கு அவன் அப்பா ஒழுங்கா நீட் தேர்வுக்குப் படி எனச் சொல்றார். ஆனால், அவர் மகனோ, அதுக்கு ஏன்பா படிக்கனும், எதாவது அரசியல் கட்சில சேர்த்துவிடு, ஈசியா டாக்டர் பட்டம் வாங்கிடலாம் எனச் சொன்னான்,’’ என்று பேசுகிறார். இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத்தான் இவ்வாறு தமிழிசை சொல்கிறார் எனக் கூறி பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ பிபிசி லோகோ உள்ளது, அது 24 நொடிகள்தான் ஓடுகிறது. இதன் முழு வீடியோ விவரம் உள்ளதா, என தகவல் தேடினோம். அப்போது, பிபிசி யூ டியுப்பில் வெளியிட்ட இதன் முழு வீடியோ கிடைத்தது. மொத்தம், 39 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் தமிழிசை சவுந்தரராஜன், ‘’ ’ஒரு பையன் தன் அப்பாவிடம் டாக்டராகனும் எனச் சொல்றான். அதற்கு அவன் அப்பா ஒழுங்கா நீட் தேர்வுக்குப் படி எனச் சொல்றார். ஆனால், அவர் மகனோ, அதுக்கு ஏன்பா படிக்கனும், எதாவது அரசியல் கட்சில சேர்த்துவிடு, ஈசியா டாக்டர் பட்டம் வாங்கிடலாம் எனச் சொன்னான். நான் என்னைப் பற்றி சொல்லல. நானோ, அண்ணன் தங்கவேலு அவர்களோ அப்படியான டாக்டர் அல்ல.

நாங்கள் படித்துத்தான் டாக்டர் பட்டம் வாங்கினோம். இன்றைய இளைஞர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதற்காக இந்த கதையை சொன்னேன்,’’ என்று விரிவாக பேசுகிறார்.

அந்த வீடியோவின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

எனினும், இதனை பகிர்ந்துள்ள BBC News Tamil இதில், எடப்பாடி பழனிசாமியைத்தான் தமிழிசை கேலி செய்வதாக சம்பந்தம் இல்லாமல் தலைப்பிட்டு செய்தி பகிர, இதனை பலரும் உண்மை என நம்பி, தகவல் பகிர தொடங்கியுள்ளனர்.

சொல்லப் போனால், பிபிசி செய்தியே தவறாகும். வீடியோவில் தமிழிசை சவுந்தரராஜன், ‘’என்னையோ, அண்ணன் தங்கவேலு அவர்களையோ நான் சொல்லவில்லை. நாங்கள் அப்படியான டாக்டர்கள் அல்ல. அப்படி டாக்டர் பட்டம் வாங்கும் மற்ற அரசியல்வாதிகளையும் நான் குறை சொல்லவில்லை. இன்றைய இளைஞர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதற்காக இந்த கதையை சொன்னேன்,’’ என தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

இப்படியாக, அவரே தெளிவாகச் சொன்ன பிறகும், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழிசை கேலி செய்கிறாரா?,’ என தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் செய்திக்கு தலைப்பிட்டு, பிபிசி வீடியோ பகிர்ந்துள்ளது. இது ஃபேஸ்புக் பயனாளர்களை குழப்புவதாகவும் உள்ளது. 

Archived Link 

தற்சமயம், அஇஅதிமுக- பாஜக கூட்டணி அமைத்து, தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களை சந்தித்து வருகின்றனர். அத்துடன், அன்றாட அரசியல் நிகழ்வுகளிலும், தமிழக அரசு சார்ந்த பணிகளிலும் மத்திய அரசு அல்லது பாஜக தலைவர்கள் நேரடி பங்களிப்பு செய்வதும் வழக்கமாக உள்ளது. இத்தகைய சூழலில், தனது கூட்டணி முதல்வரை ஒருவர் விமர்சித்திருக்க வாய்ப்பில்லை. மேலும் அவரே, யாரை விமர்சிக்கிறேன், எதற்காக இந்த கதை சொல்கிறேன் என்பதற்கான விளக்கத்தையும் தெளிவாகக் கூறியுள்ளார். இருந்தும் பிபிசி வெளியிட்ட செய்தியை நம்பி பலர் ஃபேஸ்புக்கில் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.

இதே செய்தியை தினமலர் இணையதளம் வெகு இயல்பாக வெளியிட்டுள்ளது. 

Dinamalar News Link Archived Link 

இதுதவிர தமிழிசை சவுந்தரராஜன், டாக்டர் பட்டம் பெற்றதற்காக, எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார். அதற்கான செய்தி ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil LinkDailythanthi News Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) தமிழிசை பேசியதை மற்ற ஊடகங்கள் ஒருவிதமாக பகிர, பிபிசி மட்டும் தவறாக அர்த்தப்படுத்தி, வீடியோ வெளியிட்டிருக்கிறது.
2) இதைவிடக் கொடுமை, பிபிசி வீடியோவை முழுவதும் கேட்காமல், அதில் சில நொடிகளை எடிட் செய்து, ஃபேஸ்புக் வாசகர்கள் ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.
3) அந்த வீடியோவிலேயே ‘’என்னையோ, அண்ணன் தங்கவேலுவையோ நான் சொல்லவில்லை. மற்றவர்களையும் குறை சொல்லவில்லை. இன்றைய இளைஞர்களின் சிந்தனை எப்படி உள்ளது என்பதற்காக இதைச் சொன்னேன்,’’ என தமிழிசை தெளிவாகச் சொல்கிறார்.
4) அஇஅதிமுக-பாஜக தற்போது கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றன.

எனவே, மேற்கண்ட வீடியோ பதிவில் உண்மையுடன் சற்று பொய்யும் கலந்து, தவறான தகவல் பகிரப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்படுகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த வீடியோ பதிவில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான வீடியோ, புகைப்படம் மற்றும் செய்தியை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:டாக்டர் பட்டம் பெற்றதற்காக எடப்பாடி பழனிசாமியை கேலி செய்தாரா தமிழிசை?

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture