
கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் மது போதையில் போலீசாரிடம் தகராறு செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பெண் ஒருவர் போலீசாரிடம் தகராறு செய்யும் அவரை அடிக்க முயற்சி செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பார்க்க அந்த பெண் மது போதையில் உள்ளது போல உள்ளது.
நிலைத் தகவலில், “கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் கொழுத்த குடிபோதையில், போலீஸ்காரரிடம் வம்படி வம்பு செய்யும் காட்சி. “நண்டு கொழுத்தால், வளையில் தங்காது” என்பார்கள். “ஆட்சி அதிகாரம் கிடைத்தால், ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் அட்டூழியம் செய்வார்கள்” என்பது காவிக் காலிகளின் நடைமுறை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் குடி போதையில் தகராறு செய்ததாக வீடியோ ஒன்று ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பெண்ணின் அப்பா யார் என்று குறிப்பிடப்படவில்லை. கோவாவில் பாஜக கூட்டணி ஆட்சியில் 10 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இதில் ஒருவர் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர். இவர்களில் யாருடைய மகளை இவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்று தெரியவில்லை.
உண்மைப் பதிவைக் காண: economictimes I Archive I samayam.com I Archive
கூகுளில் கோவா அமைச்சரின் மகள் மது போதையில் தகராறு செய்தது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2022ம் ஆண்டில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.
அதில் ஒருவர் நடந்த சம்பவம் முழுவதையும் 11 வீடியோ பதிவாக 2022ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்க்கும் போது சம்பவம் நடந்தது மகாராஷ்டிராவில் என்று தெரியவந்தது. மது போதையில் அந்த பெண் சாலையில் தகராறு செய்கிறார். உடன் வந்தவர்கள் அந்த பெண்ணை அமைதிப்படுத்த முயல்கின்றனர். அவர்களையும் அடிக்கிறார். கடைசியில் போலீசாரையும் தாக்க முயற்சி செய்கிறார். 11 வீடியோக்களையும் பார்த்தோம். அதில் அந்த பெண் தன்னுடைய பெயர் அர்சித்தா என்று கூறுவதைக் கேட்க முடிந்தது. ஆனால் எந்த இடத்திலும் அந்த பெண் தன்னை அமைச்சரின் மகள் என்று கூறவில்லை.
உண்மைப் பதிவைக் காண: etvbharat.com I Archive
தொடர்ந்து தேடிய போது இது தொடர்பாக 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில் இந்த சம்பவம் மும்பையில் நடந்தது. மது அருந்திவிட்டு பொது இடத்தில் அத்துமீறி நடந்து, காவல் துறையினரைத் தாக்க முயன்றதாக அந்த பெண் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எதிலும் அந்த பெண் கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் என்று குறிப்பிடப்படவில்லை.
2022 மார்ச் மாதத்தில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது என்று 2022 ஜூன் மாதம் 20ம் தேதி செய்தி வெளியாகி இருந்தது. அப்போதும் கூட பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கவில்லை. பாஜக அமைச்சரின் மகள் இப்படி பொது இடத்தில் அத்துமீறி நடந்திருந்தால் அதை மறைத்திருக்க வேண்டிய அவசியம் சிவசேனா கூட்டணி அரசுக்கு இருந்திருக்காது. அப்படி மறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நடந்த சம்பவத்தையே பொது வெளியிலிருந்து அழித்திருக்க முடியும்.
இந்த பெண் தகராறு செய்த வீடியோவை தீவிர வலதுசாரி பாஜக ஆதரவு ஊடகமான opindia.com கூட வெளியிட்டிருந்தது. பாஜக அமைச்சரின் மகளாக இருந்திருந்தால் அந்த செய்தியை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்திருப்பார்கள். அவர்களே துணிந்து வெளியிட்டுள்ளார்கள் என்றால் இவர் பாஜக அமைச்சரின் மகளாக இருக்க வாய்ப்பில்லை.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ மகாராஷ்டிரா மாநிலத்தில் 2022ம் ஆண்டு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் கோவா மாநிலத்தைச் சார்ந்த பாஜக அமைச்சரின் மகள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டதாக அப்போது வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. இதன் மூலம் பழைய வீடியோவை எடுத்து தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது தெளிவாகிறது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2022ல் மும்பையில் பெண் ஒருவர் மது போதையில் போலீசிடம் தகராறு செய்து வைரலான வீடியோவை 2025ல் புதிது போல, பாஜக அமைச்சரின் மகள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:கோவா பாஜக அமைச்சரின் மகள் மது போதையில் தகராறு என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


