FactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி!

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

மார்பளவு தண்ணீரில் தன் உயிரை பயணம் வைத்து குழந்தையை காப்பாற்றிய இஸ்லாமியர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது நிவர் புயல் சமயத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மார்பளவுக்கு செல்லும் வெள்ள நீரில் ஒரு பக்கெட்டில் குழந்தையை வைத்து தலையில் சுமந்து செல்லும் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மார்பளவு தண்ணீரில் தன் உயிரை பயணம் வைத்து குழந்தையை காப்பாற்றும் இஸ்லாமிய சகோதரர்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவை News18 Tamil Nadu : என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Syed Ishak என்பவர் 2020 நவம்பர் 29ம் தேதி பகிர்ந்துள்ளார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

Jeevanandam Mahesh என்பவரும் இதே படத்தை பகிர்ந்துள்ளார். நிலைத் தகவலில் “காவி சங்கிகளா! இது தான் தமிழ் நாடு!” என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களைப் போல பலரும் இந்த படத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நிவர் புயல் பாதிப்பைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் எந்த மதத்தினர் அதிக அளவில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்று இரு தரப்பினர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. பழைய புகைப்படங்களை எல்லாம் எடுத்து வந்து தற்போது நடந்தது போல பதிவிட்டு நாங்கள்தான் சிறந்தவர்கள் என்று காட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த அரசியலுக்குள் நாம் செல்லவில்லை.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் குழந்தையை காப்பாற்றும் இஸ்லாமிய இளைஞர் என்று குறிப்பிட்டுள்ளனர். நிவர் புயலைத் தொடர்ந்து யார் உதவிகள் செய்கிறார்கள் என்ற சர்ச்சைக்கு இடையே இந்த படம் பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் நடந்தது போன்று இதை குறிப்பிடுகின்றனர். சில பதிவர்கள் இது தமிழ்நாட்டில் நடந்தது என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டு வருகின்றனர்.

உண்மையில் இந்த புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். முதலில் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2020 நவம்பர் மாதம் 13ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: dhakatribune.com I Archive

பிலிப்பைன்ஸ் நாட்டில் நவம்பர் மாதம் நடந்த வாம்கோ புயல் பாதிப்பின் போது பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்புப் படை வீரர் குழந்தையை மீட்ட காட்சி என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த புகைப்படத்தை REUTERS செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

எனவே, REUTERS செய்தி நிறுவனத்தின் தளத்தில் இந்த புகைப்படம் கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது REUTERS வெளியிட்டிருந்த செய்தியில் இந்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதில் நவம்பர் 13ம் தேதி பிலிப்பைன்சின் வடகிழக்குப் பகுதியில் ககயன் (Cagayan) என்ற இடத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த படத்தை பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்புப் படைதான் தங்களுக்கு வழங்கியது என்றும் குறிப்பிட்டிருந்தனர். ராணுவத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை அனுப்புகிறார்கள் என்றால் அவர் சார்ந்த சமயத்தை எல்லாம் குறிப்பிட்டு அனுப்பியிருக்க வாய்ப்பில்லை.

அசல் பதிவைக் காண: reuters.com I Archive

மேலும், எந்த ஒரு செய்தியிலும் பிலிப்பைன்ஸில் குழந்தையை காப்பாற்றிய கடலோர பாதுகாப்பு படை வீரரின் மதம் பற்றி குறிப்பிடவில்லை. REUTERS வெளியிட்ட தகவல் அடிப்படையிலேயே அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது. அப்படி இருக்கும் போது குழந்தையை காப்பாற்றிய பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்புப் படை வீரர் ஒரு இஸ்லாமியர் என்ற முடிவுக்கு எப்படி வந்தார்கள் என்று தெரியவில்லை. 

பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாட்டின் 90 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்களே. 6 சதவிகிதம் அளவுக்கு இஸ்லாமியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்முடைய ஆய்வில், இந்த புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை, பிலிப்பைன்ஸ் நாட்டில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது.

குழந்தையை காப்பாற்றிய நபர் பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்புப் படை வீரர் என்பதும் உறுதியாகி உள்ளது. அவர் என்ன மதம் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நிவர் புயல் மழை பாதிப்பு மீட்புப் பணியில் மார்பளவு தண்ணீரில் குழந்தையைக் காப்பாற்றிய இஸ்லாமியர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள பாதிப்பு மீட்பு பணி படத்தை தமிழகத்தில் எடுக்கப்பட்டது போல பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False