
ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரே விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட 800 இந்தியர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
விமானத்தில் மிகவும் நெருக்கமாக மக்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மரண பயத்துடன் இருந்த 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்தது இந்திய ராணுவ விமானம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Manikandan என்பவர் 2021 ஆகஸ்ட் 16ம் தேதி ஃபேஸ்புகில் வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். அங்கிருந்த இந்தியர்களை இந்திய அரசு மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏர் இந்தியா விமானத்தின் மூலம் 120 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து 46 பேர் அழைத்து வரப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ஒரே விமானத்தில் மொத்தமாக 800 பேரை அழைத்து வந்தார்கள் என்று படத்துடன் பதிவு வெளியாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தை கொஞ்சம் பெரிதாக்கிப் பார்த்த போது இந்தியர்கள் போல இல்லை. எனவே, இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: pacaf.af.mil I Archive 1 I edwards.af.mil I Archive 2
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மிகத் தீவிர புயல் பாதிப்பு காரணமாக 2013ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டின் டாக்லோபன் (Tacloban) நகரத்தைச் சேர்ந்த 670க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்காக அழைத்து செல்லப்பட்டனர் என்ற செய்திகள் நமக்குக் கிடைத்தன.
இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரே விமானத்தில் அழைத்து வரப்பட்ட 800க்கும் மேற்பட்ட இந்தியர்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் என்று பகிரப்படும் படம் 2013ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களின் படமா இது?
Fact Check By: Chendur PandianResult: False
